கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 1 மார்ச், 2012

தென்காசி ரயில்வேகேட் பகுதியில் சப்-வே அமைக்கும் பணி தீவிரம்


தென்காசி ரயில்வேகேட் பகுதியில் சப்-வே அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தென்காசியில் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது. 32 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணியினை மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து மேற்கொண்டுள்ளன. மாநில அரசு சார்பில் மேம்பாலம் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. மத்திய ரயில்வே துறை சார்பில் ரயில்வேகேட் பகுதியில் அமைக்கப்பட வேண்டிய மேம்பால பணிதான் காலதாமதமாகி வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் ரயில்வே துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பால பணியை விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதினார். மேலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரயில்வே துறை சார்பில் மேம்பால பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. பணி இன்னும் சில நாட்களில் துவக்கப்படும் என கூறப்படுகிறது.

இச்சூழ்நிலையில் ரயில்வே கேட் பகுதியில் சப்-வே அமைக்கும் பணி நடந்து வருகிறது. 35 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இப்பணியில் 1வது, 2வது பிளாட்பாம் பகுதியில் சப்-வே அமைக்கப்பட்டு விட்டது. 3வது மற்றும் 4வது பிளாட்பாம் பகுதியில் சப்-வே அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இப்பணி இன்னும் ஒரு மாத காலத்திற்குள் முடிந்து விடும் என கூறப்படுகிறது.

ஆனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சப்-வே அமைக்கும் பணி நடைபெற வேண்டும். இதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தும் பணிக்காக 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான்கு பிளாட்பாம் கொண்ட ரயில்வே ஸ்டேஷனில் புதிதாக டிக்கெட் கவுண்டர், பயணிகள் தங்கும் அறை, ஸ்டேஷன் மாஸ்டர் அறை, நடை மேம்பாலம் உள்ளிட்டவைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 1வது, 2வது மற்றும் 3வது பிளாட்பாம் அமைக்கப்பட்டுள்ளது. 4வது பிளாட்பாம் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இப்பணி இன்னும் ஓரிரு தினங்களில் முடிந்து விடும்.

பிளாட்பாம்களில் எலக்ட்ரானிக் அறிவிப்பு பலகை அமைக்கப்பட வேண்டும். மேலும் அனைத்து பிளாட்பாம்களிலும் தேவையான குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட வேண்டும். ரயில்வே ஸ்டேஷனுக்கு தனியாக குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். ரயில்வே மேம்பால பணியையும், மேம்பாலம் அருகில் இணைப்பு சாலை அமைக்கும் பணியையும் விரைந்து முடிக்க அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக