கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 8 மார்ச், 2012

கடையநல்லூர் பகுதியில் 3 மாதங்களாக சுத்தம் செய்யப்படாத மேல்நிலைத் தொட்டி?

கடையநல்லூர் நகராட்சி கிருஷ்ணாபுரத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் நான்கு புறமும் உள்ள மூடிகள் திறந்தே கிடப்பதுடன்,தொட்டி சுத்தம் செய்யப்பட்டு பல மாதங்கள் ஆவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


 கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒரு லட்சம் காலன் கொள்ளளவு உடையது. இதன் மூலம் இப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு
 குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


 இத் தொட்டியின் மேல்பகுதியிலுள்ள நான்கு மூடிகளும் எப்போதும் திறந்தே காணப்படுகின்றன. இதனால் பறவைகளின் எச்சங்கள் அந்த திறந்த பகுதியின் வழியாக உள்ளே விழும் நிலையுள்ளது. மேலும் இதன் அருகே மரங்கள் இருப்பதால் பறவைகள் கூட தொட்டிக்குள் தவறி விழுந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த திறந்த பகுதியின் வழியே துர்நாற்றமும் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


 சுத்தம் செய்யப்படாத தொட்டி: பொதுவாக மாதம் ஒருமுறை தொட்டி சுத்தம் செய்யப்பட வேண்டும் எனக் கூறப்படுகிறது.ஆனால் 30-11-11 அன்று சுத்தம் செய்யப்பட்ட பின்னர், கடந்த 3 மாதங்களாக இத்தொட்டி சுத்தம் செய்யப்படவில்லை என்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 கடையநல்லூர் பகுதியில் பதிக்கப்பட்டு வரும் புதிய குடிநீர்க் குழாய்களில் பல இடங்களில் உடைப்புக்கள் ஏற்பட்டு,குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதைக் கண்டித்து நாள்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
 ஆனால், நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணாபுரத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை முறையாகப் பராமரிக்காமல் இருப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


 கடையநல்லூர் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுகாதார குறைபாடுகளால் பரவிய ஒரு வித காய்ச்சலால் பலர் உயிரிழந்தனர்.ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதனால் அன்றைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், செயலர் உள்ளிட்டோரும், சிறப்பு மருத்துவக் குழுவினரும் பல மாதங்கள் கடையநல்லூரில் முகாமிட்டு நிலைமையை சீர் செய்தனர்.


 இது தொடர்பாக தேமுதிக வார்டு செயலர் கிருஷ்ணாபுரம் தவசி கூறியதாவது: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேல்புறத்திலுள்ள மூடிகள் திறந்து கிடப்பதால் பறவைகளின் எச்சங்கள் தண்ணீரில் விழுவதும், சில சமயங்களில் சிறிய பறவைகளே தொட்டிக்குள் விழுவதும் நடந்து வருகிறது.
 இது தொடர்பாக பல முறை நகராட்சியில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக