கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 6 மார்ச், 2012

கடையநல்லூர் பகுதியில் கேபிள் டி.வி.கட்டணம் திடீர் உயர்வு


முதல்வர் ஜெயலலிதா அறிவித்த தேர்தல் வாக்குறுதி காற்றில் பறக்கும் வகையில் கடையநல்லூர் பகுதிகளில் கேபிள் கட்டணம் திடீரென அதிகளவில் வசூலிக்கப்படுகிறது. இதனால் கேபிள் சந்தாதாரர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், ஆதங்கமும் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சி மாற்றத்திற்கு மணல் கொள்ளை, விலைவாசி உயர்வு, மின்தடை போன்றவைகளுக்கு மத்தியில் கேபிள் டி.வி.யும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. கடந்த சட்டசபை தேர்தலின் போது அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் கேபிள் கட்டணம் குறைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டதுடன் சந்தாதாரர்களிடம் இருந்து மாத கட்டணமாக ரூ.70 மட்டுமே வசூலிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.

இதனிடையில் அதிமுக ஆட்சி அமைத்த பிறகு தமிழகம் முழுவதும் கேபிள் கட்டணம் குறைக்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. இதனிடையில் பல்வேறு பகுதிகளில் கேபிள் கட்டணம் சந்தாதாரர்களிடம் இருந்து ரூ.100லிருந்து 130 வரை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. ஏற்கனவே செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சந்தாதாரர்களிடம் இருந்து ரூ.130 மாத கட்டணமாக கேபிள் டி.வி. இணைப்புக்காக பெறப்பட்டு வருகிறது.

இதனிடையில் கடையநல்லூர் பகுதியில் கேபிள் டி.வி. கட்டணம் 70 ரூபாய்தான் என கூறப்பட்டு அந்த தொகையையே சந்தாதாரர்களிடம் இருந்து பெறப்பட்டது. ஆனால் திடீரென கடந்த பிப்ரவரி மாதத்திற்கான சந்தா தொகை ரூ.100 என வசூல் செய்யப்பட்டதால் பெரும் அதிருப்தியும், ஆதங்கமும் அடைந்துள்ளனர். குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டண உயர்வு குறித்து சந்தாதாரர்கள் கேட்டபோது அதற்கான பதில் முறையாக பெற முடியாத நிலை இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அதிமுக தலைமை அறிவித்த வாக்குறுதியின்படி கேபிள் டி.வி.கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த உத்தரவு காற்றில் பறக்கும் நிலைதான் கடையநல்லூர் பகுதியில் காணப்பட்டு வருவதாக கேபிள் டி.வி.சந்தாதாரர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக