கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

கடையநல்லூரில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முற்றுகை

கடையநல்லூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் 33 வார்டுகளிலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. நகராட்சியில் 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் தற்போது 12 நாட்களுக்கு ஒருமுறை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் காணப்பட்ட நேரத்தில் நல்ல தண்ணீர் மூலமாகத்தான் காய்ச்சல் பரவுகிறது என்பதை கருத்தில் கொண்டு கடையநல்லூரில் தினமும் குடிநீர் வினியோகம் செய்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அந்த நேரத்திலும் குடிநீர் வினியோகம் சில பகுதிகளில் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்ற புகார் காணப்பட்டது. இதனிடையில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் காணப்படாததால் நகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிடும் பெரியாற்றுப்படுகையில் நீர்பிடிப்பு அறவே குறைந்துவிட்டது. இதனால் குடிநீர் வினியோகத்தில் பற்றாக்குறை தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலையில் குடிநீர் வினியோகம் முறையாக மேற்கொள்ள வலியுறுத்தி கடையநல்லூரில் நகராட்சி நிர்வாகத்தை முற்றுகையிடும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் நகராட்சியின் 15வது வார்டு பொதுமக்கள் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து நேற்று காலை 33வது வார்டு பகுதிகளை சேர்ந்த 100க்கு மேற்பட்டோர் குடிநீர் வினியோகம் வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து 18வது வார்டினை சேர்ந்த பொதுமக்களும் நகராட்சி நிர்வாகத்தில் குடிநீர் வினியோகம் கோரி முற்றுகையில் ஈடுபட்டனர்.

இரண்டு வார்டு பொதுமக்களும் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பான நிலை காணப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களிடம் நகராட்சி தலைவர் சைபுன்னிசா, இன்ஜினியர் ராமலிங்கம், இளநிலை பொறியாளர் அகமதுஅலி, கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வினியோகம் மேற்கொள்வதற்கான ஏற்பாடு செய்யப்படுமென தெரிவித்தனர்.

கடையநல்லூர் நகராட்சியில் சீரான குடிநீர் வினியோகம் வலியுறுத்தி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. மேலும் குடிநீர் வினியோகம் சீராக மேற்கொள்வதற்கு நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஆதங்கமும் இப்பகுதி மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக