கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

3 வகையான கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசைகளிலும் ஒரே நேரத்தில் தென் ஆப்பிரிக்கா அணி முதலிடத்தை பெற்று சாதனை


சர்வதேச அளவிலான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவென்டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல்களில் ஒரே நேரத்தில் முதலிடத்தை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா புதிய சாதனையை படைத்துள்ளது.
சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்து, சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) வரிசைப்படுத்தி பட்டியலை வெளியிடுகிறது. இதில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் தனித்தனியாக வெளியிடப்படுகிறது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள தென் ஆப்பிரிக்கா அணி, அந்நாட்டு அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தை பிடித்தது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் துவக்க வீரர் ஆம்லாவின் 150 ரன்களின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 40.4 ஓவர்களின் முடிவில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 80 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் 120 புள்ளிகளுடனும், டுவென்டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் 130 புள்ளிகளுடனும் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசைகளிலும் ஒரே நேரத்தில் தென் ஆப்பிரிக்கா அணி முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக