கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 4 ஆகஸ்ட், 2012

கடையநல்லூர் பரசுராமபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை இட்டனர்

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் 15 நாட்களாக குடிநீர் கிடைக்கவில்லை என்று தெரிவித்து நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கோடை காலத்தை காட்டிலும் தற்போது கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. குடிநீர் வினியோகத்தை பொறுத்தவரை 10 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் சப்ளை செய்யக்கூடிய நிலைக்கு ஆற்றுப்படுகையின் நீர்பிடிப்பு குறைந்துள்ளது. இதனிடையில் குடிநீர் பற்றாக்குறை நகராட்சி முழுவதும் பெருமளவில் காணப்பட்டு வருகிறது.

கடையநல்லூர் நகராட்சி பரசுராமபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை குடிநீர் சீராக கிடைக்கவில்லை எனவும், குடிநீர் வினியோகம் இப்பகுதிக்கு மேற்கொள்ளப்பட்டு சுமார் 15 தினங்களாக ஆகிவிட்டதாகவும் புகார் தெரிவித்து நகராட்சி அலுவலகத்திற்கு நேற்று சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் வருகை தந்து புகாரினை தெரிவித்தனர்.

நகராட்சி குடிநீர் வினியோக துறையில் பொதுமக்கள் முறையாக புகார் தெரிவிக்கும் வகையில் அதிகாரிகள் பொதுமக்கள் வந்த நேரத்தில் இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் ஆத்திரமடைந்தனர். புகார் தெரிவிக்க கூட முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் குடிநீர் வினியோகம் செய்யப்படாத நிலையில் அதற்கான வரியை மட்டும் முறையாக பெறுவதற்கு நகராட்சி நிர்வாகம் வந்து விடுவதாகவும் பெரும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக