கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

கடையநல்லூர் அருகே பஸ் மறியலால் பரபரப்பு


கடையநல்லூர் அருகே நேற்று இரவு ரோட்டை கடக்க முயன்ற பெண் மீது அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர். ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பஸ் கண்ணாடிகளை உடைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்டு வரும் விபத்து குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பஸ் மறியலில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 45 நிமிடம் போக்குரவத்து பாதிக்கப்பட்டது.

சேர்ந்தமரம் அருகேயுள்ள பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் சண்முகையா மனைவி சின்னத்தாய் (45). இவர் நேற்று கடையநல்லூர் அருகே முத்துசாமியாபுரத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு ஊருக்கு திரும்பினாராம். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டை கடக்க முயன்ற சின்னத்தாய் மீது சங்கரன்கோவிலில் இருந்து தென்காசி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததாக தெரிகிறது. இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் அரசு பஸ் மீது ஆவேசத்தில் தாக்குதலை மேற்கொண்டனராம். இந்த தாக்குதலை தொடர்ந்து பஸ் டிரைவர் திருவேங்கடத்தை சேர்ந்த கென்னடி (49) பஸ்சில் இருந்து இறங்கி அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பியோடி சென்றுவிட்டாராம். பஸ் கண்டக்டர் வாசுதேவநல்லூரை சேர்ந்த முருகையா (49) என்பவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதனை தொடர்ந்து முத்துசாமியாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் குறிப்பிட்ட சுமார் 1 கி.மீ.தூரத்திற்குள் அதிகளவில் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும், பலத்த காயங்கள் மற்றும் பலி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்து பஸ் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். பஸ் விபத்தில் பலியான சின்னத்தாயின் உடல் தேசிய நெடுஞ்சாலையில் அப்படியே போடப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் ஆவேசத்துடன் அதிக வேகமாக வாகனங்கள் வருவதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனிடையில் போலீசாரின் சமரசத்தையடுத்து சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.

சின்னத்தாயின் உடல் பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டிரைவர் கென்னடி, கண்டக்டர் முருகையா ஆகிய இருவரும் கடையநல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். இதுகுறித்து புளியங்குடி டிஎஸ்பி ஜமீம் விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து முத்துசாமியாபுரத்தில் நேற்று இரவு முதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக