கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

பெட்ரோல் விலை 3 ரூபாய் உயர்கிறது: எண்ணை நிறுவனங்கள் முடிவு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்புக்கு ஏற்ப பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்கான அதிகாரத்தை எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. 

கடந்த மாதம் 24-ந்தேதி பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. பெட்ரோல் ரூ.7 உயர்த்தப்பட்டு பிறகு மீண்டும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை ஒரு பேரலுக்கு 10 டாலர் வரை உயர்ந்து விட்டது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 113 டாலராக உள்ளது. இதனால் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனையில் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

தினசரி ஏற்படும் பல கோடி ரூபாய் இழப்பை சரி கட்ட பெட்ரோல் விலையை உடனே உயர்த்த வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு எண்ணை நிறுவனங்கள் வலியுறுத்தின. லிட்டருக்கு ரூ. 1.50 உயர்த்தினாலே போதும் என்றும் எண்ணை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. 

ஆனால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க இருந்ததால் பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் இழப்பு அதிகரித்துள்ளதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3 வரை அதிகரிக்க வேண்டும் என்று தற்போது எண்ணை நிறுவனங்கள் கூறி வருகின்றன. 

மத்திய அரசுக்கும் இதை ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அடுத்த மாதம் முதல் வாரம் பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்ததும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்வது அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக