கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

திருமண வீட்டாரை கவலையடையச் செய்யும் வாழை இலை


நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் வாழை இலை தட்டுப்பாட்டால் ஒரு இலை ரூ.4க்கு விற்கப்படுகிறது. இதனால் ஹோட்டல்களில் செயற்கை பேப்பர் இலை பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தின் பல பகுதிகளுக்கு நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து தான் வாழை இலை அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வாழை இலைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அணைகள், குளங்கள் நிரம்பாததால் நெல் பயிரிடுவோர் பயிர் செய்யவில்லை. மேலும் தென்னை, வாழை போன்ற பயிர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் காய்கறி, இலை போன்ற பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.
ஆவணி மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் அதிக அளவு நடைபெறும் நிலையில் காய்கறி விலை உயர்வால் ஏழை, நடுந்தர மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தற்போது தொடர்ந்து திருமண தினங்கள் வருவதால் திருமண வீட்டார் வேதனையில் உள்ளனர்.
இந்நிலையில் சாப்பிடுவதற்கான வாழை இலை ஒன்று தற்போது ரூ.4 வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல ஹோட்டல்களில் வாழை இலைக்கு பதில் பேப்பர் இலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருமணங்களிலும் செயற்கை இலை பயன்பாடு அதிகரித்து வருகிறது.
சாதாரணமாக 5 இலைகள் கொண்ட 1 பூட்டு இலை ரூ. 4க்கு விற்ற காலம் போய் தற்போது 1 இலை 4 ரூபாய்க்கு விற்கப்படுவதால் செயற்கை இலை வாங்குவதை தவிர வேறு வழியில்லை எனவும், பல நேரங்களில் ஒரு இலை 4 ரூபாய்க்கு கூட கிடைப்பதில்லை எனவும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர். அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி போன்ற அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் தற்போது வாழை இலை விலையும் உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக