கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 22 ஆகஸ்ட், 2012

'காத்தடிச்சா தான் கரண்டு'!: மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு 942 மெ.வாட் மின்சாரம் பற்றாக்குறை


மத்திய மின் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய மின்சாரத்தில் 942 மெகா வாட் அளவு வரையிலான மின்சாரம் குறைவாகவே வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தித் திறன் 10,464 மெகா வாட் ஆகும். இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் நீர், நிலக்கரி, வாயு மின் உற்பத்தி நிலையங்கள் 5,804 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளன.
இதுதவிர மத்திய தொகுப்பிலிருந்து 2,481 மெகா வாட் மின்சாரமும், தனியார் உற்பத்தி நிலையங்களிலிருந்து 1180 மெகா வாட் மின்சாரமும் வர வேண்டும்.
ஆனால், மின் நிலையங்களில் எப்போதுமே பழுது, பராமரிப்பு என ஏதாவது காரணத்தால் தமிழகத்தில் மொத்த உற்பத்தித் திறன் 7,000 மெகா வாட் அளவுக்கும் குறைவாகவே உள்ளது.
அதிலும் மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய 2,481 மெகா வாட் மின்சாரத்தில் தமிழகத்துக்கு 1,539 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இதனால், அதிலேயே 942 மெகா வாட் பற்றாக்குறை நிலவுகிறது.
அதே போல ஆந்திர மாநிலம் ராமகுண்டம் அனல் மின் நிலையத்திலிருந்து தமிழகத்துக்கு 659 மெகா வாட் வர வேண்டும். ஆனால், அங்கிருந்து 510 மெகா வாட் மின்சாரம் மட்டுமே வழங்கப்படுகிறது.
நெய்வேலி மின் நிலையத்திலிருந்து தமிழகத்துக்கு 700 மெகா வாட் மின்சாரம் கிடைக்க வேண்டும். ஆனால், 492 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது.
கல்பாக்கம் அணு மின் நிலையத்திலிருந்து தமிழகத்துக்கு 330 மெகா வாட் தரப்பட வேண்டும். ஆனால், அங்கு மொத்த உற்பத்தியே 330 மெகா வாட் அளவுக்கே உள்ளது. அதிலிருந்து தமிழகத்துக்கு 230 மெகாவாட் அளவு மட்டுமே கொடுக்கப்படுகிறது.
ஒடிஸ்ஸாமாநிலம் தால்ட்சர் அனல் மின் நிலையத்தில் தமிழகத்துக்கு 501 மெகா வாட் மின்சாரம் கிடைக்க வேண்டும். ஆனால் தமிழகத்துக்கு 277 மெகா வாட் மின்சாரம் மட்டுமே வழங்கப்படுகிறது.
கர்நாடகம் மாநிலம் கைகா அணு மின் நிலையத்திலிருந்து தமிழகத்துக்கு 196 மெகா வாட் மின்சாரம் தரப்பட வேண்டும். ஆனால், அங்கிருந்து 150 மெகா வாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது.
இவ்வாறு மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் 942 மெகா வாட் அளவுக்கு பற்றாக்குறை உள்ளது.
இந்தப் பற்றாக்குறையை காற்றாலை மின் உற்பத்தி மூலமே தமிழகம் ஓரளவுக்கு சமாளித்து வருகிறது. ஆனால், காற்றாலை மின்சாரத்தின் அளவு எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. காற்றின் அளவைப் பொறுத்து அது நாளுக்கு நாள் மாறுபடும்.
காற்றாலை மின் உற்பத்தியின் அளவு குறையும்போதெல்லாம் மின் வெட்டு அதிகரித்து விடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக