கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 8 ஆகஸ்ட், 2012

எஸ்.எம்.எஸ்., மூலம் மின்கட்டணம் அறியலாம் நெல்லையில் புதிய வசதி விரைவில் துவக்கம்

நெல்லை மாவட்டத்தில் மின்நுகர்வோர்களுக்கு மின்கட்டணத்தொகை, மின்தடை விபரத்தை எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும் திட்டம் விரைவில் துவக்கப்படவுள்ளது.
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகத்தை சீர்செய்யவும், குறைந்த மின்னழுத்தப்பிரச்னையை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதன் எதிரொலியாக நெல்லை மாநகராட்சி, தென்காசி, சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், புளியங்குடி, கடையநல்லூர், வி.கே.புரம் உள்ளிட்ட பகுதிகளில் திருத்தியமைக்கப்பட்ட, விரைவுபடுத்தப்பட்ட மின் மேம்பாடு மற்றும் சீரமைப்புத்திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள மின்உற்பத்தி, பகிர்மானக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில், ""நெல்லையில் குறைந்த மின்னழுத்த பிரச்னையை சரிசெய்ய பாளை. சமாதானபுரம், உடையார்பட்டி (தச்சநல்லூர்), புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதியில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படவுள்ளது.
புதிதாக மின்பாதைகள் அமைத்து சீரான மின்சப்ளை அளிக்கப்படவுள்ளது. மின்கம்பிகளில் பழுது ஏற்படுவதை தடுக்க உயரழுத்த, தாழ்வழுத்த மின்கம்பிகள் மாற்றம் செய்யப்படவுள்ளது. சிறிய மின்திறன் கொண்ட புதிய மின்மாற்றிகள் ஆங்காங்கே அமைக்கப்படவுள்ளது.
தரம் மிகுந்த புதிய மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளது. மின்நுகர்வோர்களுக்கு மின் கட்டணத்தொகை, மின்தடை விபரம், இதர சேவைகளை எஸ்.எம்.எஸ்., இ.மெயில் மூலம் தெரிவிக்க, தகவலை பெற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த மின் நுகர்வோரின் செல்போன், டெலிபோன் எண்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அம்பாசமுத்திரத்தில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தென்காசியில் மங்கம்மாள் ரோட்டில் துணை மின்நிலையம் அமைக்க பணிகள் நடக்கிறது. மின்தடையை உடனுக்குடன் சரிசெய்ய மின்மாற்றி, அனைத்து பழுதுநீக்கும் கருவிகள், தகவல் தொடர்பு வசதிகள் நிறைந்த நடமாடும் மின்தடை நீக்கும் வாகன சேவை அளிக்கப்படவுள்ளது.
நவுயுகா தனியார் நிறுவனம் மூலம் மின் நுகர்வோர்களின் அனைத்து பயன்பாட்டு தகவல்களையும் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகவல்கள் சேகரிக்க வரும் நவயுகா ஊழியர்களிடம் போன் எண், இ.மெயில் முகவரி உள்ளிட்ட விபரங்களை நுகர்வோர்கள் தவறாமல் அளிக்க வேண்டும். இதன் மூலம் மின் பயன்பாட்டுத்தொகை, மின்தடை விபரங்கள், மின்கட்டணம் செலுத்திய விபரத்தை நுகர்வோர்கள் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக