கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

கடையநல்லூர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு சுமார் 3 கி.மீ தூரம் வரை சென்று தண்ணீர் எடுத்துவரக்கூடிய பரிதாப நிலை

கடையநல்லூர்: கடுமையான குடிநீர் பற்றாக்குறை கடையநல்லூரில் காணப்பட்டு வரும் நிலையில் குடம் தண்ணீர் 4 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இரவு, பகலாக காலிக்குடங்களுடன் குடிநீருக்காக பொதுமக்கள் சென்று வருவது பரிதாபமாக காணப்படுகிறது.
கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் ஆதாரமாக விளங்க கூடிய பெரியாற்றுப்படுகையில் நீர்பிடிப்பு முற்றிலுமாக குறைந்து விட்டது. வறண்ட பகுதியாக நீர்பிடிப்பு அறவே குறைவதற்கு தொடர்ந்து இப்பகுதியில் அதிகளவில் எடுத்துச் செல்லப்பட்ட மணல் கொள்ளைதான் முக்கிய காரணம் என பொதுமக்களால் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீர்ஆதார பகுதியில் அதிகளவில் மணல் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் தற்போது கோடைகாலத்தை விட காணப்படும் வெயிலின் தாக்கத்தினால் குடிநீர் பிரச்னை பெருமளவில் தாண்டவமாடுகிறது.
குடிநீருக்காக கள்ளாற்று பகுதியில் அமைக்கப்பட்ட கிணறுகளில் தண்ணீர் பரவலாக இருக்கும் நிலையில் அதனை ஆற்றுப்படுகைக்கு கொண்டு வருவதற்குள் மீண்டும் வறட்சியான நிலை தொடர்வதாக தெரிகிறது. இதனிடையில் கடையநல்லூரில் உச்சகட்ட குடிநீர் பிரச்னை கடந்த ஒரு வார காலமாக அதிகளவில் நிலவி வரும் நிலையில் நேற்று முன்தினம் நடந்த நகராட்சி கூட்டத்தில் குடிநீர் பிரச்னை பெரும் விஸ்வரூபம் எடுத்தது.
குடம் தண்ணீர் 3 ரூபாய் வரை கொடுத்து வாங்கும் நிலைக்கு கடையநல்லூரில் குடிநீர் பிரச்னை இருப்பதாக கவுன்சிலர்களால் புகார் தெரிவிக்கப்பட்டது. டேங்கர் லாரிகள் மூலம் வார்டுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில் பாரபட்சமான நிலையும், சீரான முறையில் இந்த வினியோகம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பல்வேறு வார்டு பொதுமக்கள் தரப்பிலும் குறை கூறப்பட்டு வருகிறது.
இதனிடையில் கடந்த ஒரு வார காலமாக இரவும், பகலும் பாராமல் பொதுமக்கள் காலிக்கடங்களுடன் தனியார் கிணறுகளில் இருந்து சுமார் 3 கி.மீ தூரம் வரை சென்று தண்ணீர் எடுத்துவரக்கூடிய பரிதாப நிலை தொடர்கிறது. ஒரு குடம் தண்ணீர் 4 ரூபாய்க்கு பெறக்கூடிய சூழ்நிலைக்கு இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
குடிநீர் வினியோகத்தில் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கும், அதனை தீர்ப்பதற்கான போர்க்கால நடவடிக்கை முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்ற ஆதங்கமும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுவதை காண முடிகிறது. கடையநல்லூரில் குடிநீர் பற்றாக்குறையை தவிர்த்திடவும், குடம் தண்ணீரை அதிக விலைக்கு வாங்கி உபயோகப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் சூழ்நிலை தவிர்த்திடவும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பது தான் நகராட்சி பொதுமக்களின் விருப்பமாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக