கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 27 செப்டம்பர், 2012

கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் கழிவுநீரை கொட்டிய கவுன்சிலரால் பரபரப்பு

6 மாத காலமாக சாக்கடை சுத்தம் செய்யப்படாததால் நோய் கடுமையாக பரவி வருவதாகவும், வாறுகால் சுத்தம் செய்ய வலியுறுத்தி மதிமுக., கவுன்சிலர் வாளியில் கொண்டு வந்த கழிவுநீரை கூட்ட அரங்கில் கொட்டியதால் கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.கடையநல்லூர் நகராட்சி கூட்டம் தலைவி சைபுன்னிசா தலைமையில் நேற்று நடந்தது. நகராட்சி துணைத் தலைவர் ராசையா, கமிஷனர் (பொறுப்பு) தங்கராஜ், இன்ஜினியர் ராமலிங்கம், இளநிலை பொறியாளர் அகமதுஅலி, சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், சேகர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியவுடனே கடையநல்லூர் நகராட்சியில் கடுமையாக காணப்படும் தண்ணீர் பிரச்னை குறித்த விவாதம் சூடுபிடித்தது.கவுன்சிலர் முத்தையாபாண்டி நகராட்சியில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து பேசினார்.

தலைவர் : பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்குவது தொடர்பான பொருள்கள் தான் அஜண்டாவில் இடம்பெற்றுள்ளது. கிணறுகளில் உள்ள தண்ணீரை முறையாக கொண்டு வருவதற்கு சீரான மின்சாரம் இல்லை என்பது ஒரு காரணமாக உள்ளது.விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது கடையநல்லூர் நகராட்சி 11வது வார்டு மதிமுக., கவுன்சிலர் காளிரத்தினம் விறுவிறு என எழுந்து சென்று வாளி ஒன்றில் எடுத்து வந்த கழிவுநீரை கமிஷனர் (பொறுப்பு), சுகாதார அலுவலர், நகராட்சி அதிகாரிகள் அமர்ந்திருந்த இருக்கைகளுக்கு முன்பாகவும், நகராட்சி கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள் அமர்ந்திருக்கும் பகுதியிலும் கொட்டினார்.
இதனை தொடர்ந்து நகராட்சி கூட்ட அரங்கில் கடுமையான "கப்' அடித்தது. கொட்டிய கழிவுநீரில் ராட்சத புழுக்களும், அசுத்தமான பொருட்களும் கிடந்தன. இதனையடுத்து கவுன்சில் கூட்டத்தில் பரபரப்பான நிலை காணப்பட்டது.கழிவுநீரை கவுன்சில் கூட்டரங்கில் கொட்டி தீர்த்த கவுன்சிலர் காளிரத்தினம் பேசுகையில், ""கடந்த 6 மாத காலமாக 11வது வார்டில் வாறுகால் சுத்தம் செய்யப்படவில்லை. சுகாதார துறையிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாறுகால் சுத்தம் செய்யப்படாததால் பொதுமக்கள் படக்கூடிய அவதியான நிலையை தான் கழிவுநீராக வந்து கொட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முறையான பதிலை தெரிவித்த பிறகு கூட்டத்தை நடத்தலாம்'' என்றார்.இதனை தொடர்ந்து சுகாதார அலுவலர் பேசுகையில், ""நகராட்சியில் சுகாதார பணிக்கு 300 துப்புரவு பணியாளர்கள் தேவை. 86 பேர் தான் உள்ளனர். இருந்தபோதிலும் இருக்கும் பணியாளர்களை வைத்து முடிந்தவரை சுகாதார பணிகள் நடப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

இதனிடையில் கவுன்சில் கூட்டரங்கில் கொட்டப்பட்ட வாறுகால் கழிவுநீரை உடனடியாக சுத்தம் செய்யவேண்டுமென துணைத் தலைவர் ராசையா, கவுன்சிலர்கள் விஸ்வா சுல்தான், முத்துக்குமார், அப்துல்லத்தீப், வீரபாபு, உள்ளிட்ட சிலர் கேட்டுக் கொண்டதை அடுத்து வெளியிலிருந்து நகராட்சி சுகாதாரதுறை சார்பில் சுத்தம் செய்ய வாளியில் மண் எடுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. கவுன்சிலர் காளிரத்தினம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து துணைத் தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் சிலர் காளிரத்தினத்தை சமரசம் செய்தனர்.இதனிடையில் 5வது வார்டு கவுன்சிலர் பாலாஜி, ""இப்போது வாளியில் கழிவுநீர் கொண்டு வரப்பட்டுள்ளது. எங்கள் வார்டில் வாறுகால் சுத்தம் செய்யப்படவில்லை என்றால் டேங்கர் லாரியில் கொண்டு வந்து கொட்டுவேன்'' என ஆவேசமாக தெரிவித்தார்.
33வது வார்டு அதிமுக கவுன்சிலர் முத்துகிருஷ்ணன் பேசுகையில், கடுமையான குடிநீர் பற்றாக்குறை காரணமாக நகராட்சியில் 1 குடம் தண்ணீர் 3 ரூபாய்க்கு விற்கப்படுகிறது எனவும், பெரும்பாலான வீடுகளில் பெண்கள் குளிக்க கூட தண்ணீர் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து குடிநீர் பிரச்னை குறித்து பெரும்பாலான கவுன்சிலர்கள் பேசினர்.கவுன்சிலர் கழிவுநீரை நகராட்சி கூட்ட அரங்கில் கொட்டிய விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக