கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

கடையநல்லூரில் பெண்கள் காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர்.

கடையநல்லூர் நகராட்சியில் லாரி மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் முறையாக சப்ளை செய்யப்படவில்லை என்று தெரிவித்தும், 20 நாட்களாக இரண்டு வார்டுகளில் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என்றும் புகார் தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர்.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட துறையினர் குடிநீர் பொதுமக்களுக்கு சீராக கிடைப்பதற்கான நடவடிக்கையினை முறையாக கண்டு கொள்ளவில்லை என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. கோடைகாலத்தை விட கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சிறு சிறு ஓட்டல்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.

குடிநீருக்காக இரவு, பகலாக பொதுமக்கள் தனியார் கிணறுகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை மிகவும் பரிதாபமாக காணப்பட்டு வருகிறது. இதனிடையில் நகராட்சியில் குடிநீர் இணைப்புகளின் மூலமான வினியோகம் சுமார் 15 நாட்களுக்கு ஒருமுறை என்ற சூழ்நிலை இருந்து வரும் நிலையில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலமான குடிநீர் வினியோகமும் போதுமான அளவிற்கு இல்லை என்ற குற்றச்சாட்டு பல்வேறு வார்டு மக்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையில் நேற்று காலை கடையநல்லூர் நகராட்சி 7,8வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு 20 நாட்களாகி விட்டதாகவும், டேங்கர் லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் தங்களின் வார்டுகளில் முறையாக சப்ளை செய்யப்படவில்லை என புகார் தெரிவித்து காலிக்குடங்களுடன் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவன், முத்துலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் நகராட்சி இன்ஜினியர் ராமலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பிட்ட 2 வார்டுகளுக்கும் மாலைக்குள் தண்ணீர் வினியோகம் செய்யப்படுமென உறுதியளித்தார். இருந்தபோதிலும் தங்களது வார்டுகளில் உள்ள தெருக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் வினியோகம் செய்யப்பட வேண்டுமென தொடர்ந்து கோஷமிட்ட வண்ணம் இருந்தனர்.

இதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக