கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

கடையநல்லூர் அருகேயுள்ள வடகரை, அச்சன்புதூர் பகுதியில் நேற்று 3 முறை அடுத்தடுத்து நிலஅதிர்வு


kadayanallur

கடையநல்லூர்  அருகேயுள்ள வடகரை, அச்சன்புதூர் பகுதியில் நேற்று 3 முறை அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்பட்டது. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இந்த அதிர்ச்சியால் விடிய, விடிய பொதுமக்கள் உறக்கமின்றி தவித்தனர். இன்றும் தொடர்ந்து 2வது நாளாக பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
 
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள வடகரை மற்றும் அச்சன்புதூர் பகுதியில் நேற்று காலை 10-45 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் கழித்து மதியம் 12.45 மணிக்கு மேல் 2வது முறையாக அந்த பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு அச்சன்புதூர், வடகரை மட்டுமின்றி அருகில் உள்ள வாவாநகரம், பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் உணர்ந்தனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும்பீதி ஏற்பட்டு, வீட்டை விட்டு வெளியேற துவங்கியது.
 
இதற்கிடையே மாலை 4.50 மணிக்கு அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மட்டுமின்றி, காலி மனைகள், தென்னந்தோப்புகளிலும் பயங்கரமாக நிலஅதிர்வு ஏற்பட்டது.சில வீடுகளில் காஸ்சிலிண்டர், அலமாரியில் உள்ள பொருட்கள் கீழே விழுந்தன. சுமார் 10 வினாடிகள் வரை இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதன் காரணமாக வாவாநகரில் ரஜப்நிஷா என்பவரின் காலிமனையில் சுமார் 5 மீட்டர் தூரத்திற்கு தரையில் விரிசல் ஏற்பட்டது. அதே பகுதியை சேர்ந்த அப்துல்குத்தூஸ் என்பவரின் வீட்டின் சுவரில் விரிசல் ஏறப்ட்டது. வடகரையை சேர்ந்த முகைதீன்பிச்சை, பார்வதிபுரம் சடையம்மாள் ஆகியோரது வீடுகளிலும் கீறல் விழுந்தது.
 
இதுபற்றி தகவல் அறிந்த செங்கோட்டை தாசில்தார் கிருஷ்ணவேணி, மண்டல துணை தாசில்தார் சாம்பமூர்த்தி, வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் முகமதுஷெரீப், வருவாய் ஆய்வாளர் பார்வதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
 
இதேபோல் பார்வதிபுரம் பகுதியில் நிலஅதிர்வு ஏற்பட்ட பகுதியை அச்சன்புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் டாக்டர் சுசீகரன் பார்வையிட்டார். அந்த பகுதியில் நில அதிர்வு காரணமாக வீடுகளின் ஓடுகள் விழுந்துள்ளதை பார்வையிட்டார். மேலும் பொதுமக்களிடம் நில அதிர்வு குறித்து கேட்டறிந்தார். நேற்று ஏற்பட்ட நில அதிர்வு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாத போதிலும், 3 முறை நில அதிர்வு ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளாத பொதுமக்கள் நேற்று இரவு விடிய, விடிய தூங்காமல் விழித்திருந்தனர்.
 
இரவில் நில அதிர்வு ஏற்பட்டு விடுவோ என்ற அச்சத்திலேயே காணப்பட்டனர். இன்று காலையிலும் வடகரை, அச்சன்புதூர் பகுதியில் தொடர்ந்து நில நடுக்க பீதி இருந்து வருகிறது. இதற்கிடையே நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளில் மேலும் பாதிப்பு ஏதும் இருக்கிறதா? என்பதை அறிய புவியியல் வல்லுனர்கள் இன்று ஆய்வு பணி மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக