கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 22 செப்டம்பர், 2012

நெல்லையில் நேற்று மாலை மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது போலீசார் தடியடி


நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து நெல்லையில் நேற்று மாலை மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் போராட்டம் நடத்தினர். சந்திப்பு ரெயில் நிலையம் நோக்கி வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும் அவர்கள் தடையை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். நாலாபுறமும் சிதறி ஓடிய போராட்டக்காரர்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கினர். பஸ்கள் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர். இதில் 7 அரசு பஸ்கள், 2  தனியார் பஸ்கள் சேதமடைந்தன. போலீஸ் கூண்டையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் நெல்லை சந்திப்பு பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் 6 போலீசாரும், போராட்டக்காரர்கள் 13 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தடையை மீறி போராட்டம் நடத்தியதாக 283 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தடியடி சம்பவத்தை கண்டித்து மேலப்பாளையத்தில் நேற்று இரவு ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் காயமடைந்தார். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
 
இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கியதில் 6 பஸ்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தையடுத்து மீண்டும் மேலப்பாளையத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. மேலப்பாளையம் வழியே செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இன்று காலை 9 மணி வரை மேலப்பாளையம் வழியே வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பாபநாசம் மார்க்க பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
 
தென்காசி-நெல்லை பஸ்கள் 8 மணிக்கு பிறகே இயக்கப்பட்டன. மேலப்பாளையம் பகுதியில் பதட்டம் நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பஸ்கள் மீது கல்வீசி தாக்கியது மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக