கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

கடையநல்லூர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு சுமார் 3 கி.மீ தூரம் வரை சென்று தண்ணீர் எடுத்துவரக்கூடிய பரிதாப நிலை

கடையநல்லூர்: கடுமையான குடிநீர் பற்றாக்குறை கடையநல்லூரில் காணப்பட்டு வரும் நிலையில் குடம் தண்ணீர் 4 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இரவு, பகலாக காலிக்குடங்களுடன் குடிநீருக்காக பொதுமக்கள் சென்று வருவது பரிதாபமாக காணப்படுகிறது.
கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் ஆதாரமாக விளங்க கூடிய பெரியாற்றுப்படுகையில் நீர்பிடிப்பு முற்றிலுமாக குறைந்து விட்டது. வறண்ட பகுதியாக நீர்பிடிப்பு அறவே குறைவதற்கு தொடர்ந்து இப்பகுதியில் அதிகளவில் எடுத்துச் செல்லப்பட்ட மணல் கொள்ளைதான் முக்கிய காரணம் என பொதுமக்களால் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீர்ஆதார பகுதியில் அதிகளவில் மணல் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் தற்போது கோடைகாலத்தை விட காணப்படும் வெயிலின் தாக்கத்தினால் குடிநீர் பிரச்னை பெருமளவில் தாண்டவமாடுகிறது.
குடிநீருக்காக கள்ளாற்று பகுதியில் அமைக்கப்பட்ட கிணறுகளில் தண்ணீர் பரவலாக இருக்கும் நிலையில் அதனை ஆற்றுப்படுகைக்கு கொண்டு வருவதற்குள் மீண்டும் வறட்சியான நிலை தொடர்வதாக தெரிகிறது. இதனிடையில் கடையநல்லூரில் உச்சகட்ட குடிநீர் பிரச்னை கடந்த ஒரு வார காலமாக அதிகளவில் நிலவி வரும் நிலையில் நேற்று முன்தினம் நடந்த நகராட்சி கூட்டத்தில் குடிநீர் பிரச்னை பெரும் விஸ்வரூபம் எடுத்தது.
குடம் தண்ணீர் 3 ரூபாய் வரை கொடுத்து வாங்கும் நிலைக்கு கடையநல்லூரில் குடிநீர் பிரச்னை இருப்பதாக கவுன்சிலர்களால் புகார் தெரிவிக்கப்பட்டது. டேங்கர் லாரிகள் மூலம் வார்டுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில் பாரபட்சமான நிலையும், சீரான முறையில் இந்த வினியோகம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பல்வேறு வார்டு பொதுமக்கள் தரப்பிலும் குறை கூறப்பட்டு வருகிறது.
இதனிடையில் கடந்த ஒரு வார காலமாக இரவும், பகலும் பாராமல் பொதுமக்கள் காலிக்கடங்களுடன் தனியார் கிணறுகளில் இருந்து சுமார் 3 கி.மீ தூரம் வரை சென்று தண்ணீர் எடுத்துவரக்கூடிய பரிதாப நிலை தொடர்கிறது. ஒரு குடம் தண்ணீர் 4 ரூபாய்க்கு பெறக்கூடிய சூழ்நிலைக்கு இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
குடிநீர் வினியோகத்தில் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கும், அதனை தீர்ப்பதற்கான போர்க்கால நடவடிக்கை முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்ற ஆதங்கமும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுவதை காண முடிகிறது. கடையநல்லூரில் குடிநீர் பற்றாக்குறையை தவிர்த்திடவும், குடம் தண்ணீரை அதிக விலைக்கு வாங்கி உபயோகப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் சூழ்நிலை தவிர்த்திடவும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்பது தான் நகராட்சி பொதுமக்களின் விருப்பமாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

கடையநல்லூரில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட விஏஓ இலவச பயிற்சி வகுப்பு நிறைவு விழா

கடையநல்லூரில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட விஏஓ இலவச பயிற்சி வகுப்பு நிறைவு விழாவில் பயிற்சி பெற்றவர்களுக்கு இலவச கையேடு வழங்கப்பட்டது.
கடையநல்லூர் தொகுதி அதிமுக சார்பில் அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஏற்பாட்டின்படி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஒரு மாத காலமாக வாரத்தில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் டிஎன்பிஎஸ்சி விஏஓ தேர்வு எழுத கூடியவர்களுக்கு இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. கடையநல்லூர் தொகுதி மட்டுமின்றி சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த இலவச பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து பயிற்சி வகுப்புகள் நேற்று நிறைவு பெற்றதை தொடர்ந்து இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அதிமுக சார்பில் தேர்வுக்கு தேவையான இலவச கையேடுகள் வழங்கப்பட்டது. கடையநல்லூர் தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன் கையேடுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர செயலாளர் கிட்டுராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் அருள்ராஜ் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

வியாழன், 27 செப்டம்பர், 2012

கடையநல்லூர் யூனியன் கூட்டம் தலைவர் பானுமதி வேம்பு தலைமையில் நடந்தது

கடையநல்லூர் யூனியன் கூட்டம் நடந்தது.கடையநல்லூர் யூனியன் கூட்டம் தலைவர் பானுமதி வேம்பு தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கம்பனேரி பெரியதுரை முன்னிலை வகித்தார். யூனியன் பிடிஓக்கள் மோகன், சிக்கந்தர்பீவி, இன்ஜினியர் தெய்வமோகன், யூனியன் கவுன்சிலர்கள் சித்திரம், சண்முகையா (எ) துரை, சுந்தரம், ராமலட்சுமி, பெரியதாய், மாடக்கண்ணு, குமார், பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் யூனியன் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வரவு செலவு பொருட்களுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய பொதுநிதி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 87 லட்ச ரூபாய் செலவிலான பணிகளை தாமதமின்றி விரைவாக மேற்கொள்ள வேண்டுமென கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். பணிகள் தாமதமின்றி விரைந்து மேற்கொள்ளப்படுமென அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் கழிவுநீரை கொட்டிய கவுன்சிலரால் பரபரப்பு

6 மாத காலமாக சாக்கடை சுத்தம் செய்யப்படாததால் நோய் கடுமையாக பரவி வருவதாகவும், வாறுகால் சுத்தம் செய்ய வலியுறுத்தி மதிமுக., கவுன்சிலர் வாளியில் கொண்டு வந்த கழிவுநீரை கூட்ட அரங்கில் கொட்டியதால் கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.கடையநல்லூர் நகராட்சி கூட்டம் தலைவி சைபுன்னிசா தலைமையில் நேற்று நடந்தது. நகராட்சி துணைத் தலைவர் ராசையா, கமிஷனர் (பொறுப்பு) தங்கராஜ், இன்ஜினியர் ராமலிங்கம், இளநிலை பொறியாளர் அகமதுஅலி, சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், சேகர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியவுடனே கடையநல்லூர் நகராட்சியில் கடுமையாக காணப்படும் தண்ணீர் பிரச்னை குறித்த விவாதம் சூடுபிடித்தது.கவுன்சிலர் முத்தையாபாண்டி நகராட்சியில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து பேசினார்.

தலைவர் : பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்குவது தொடர்பான பொருள்கள் தான் அஜண்டாவில் இடம்பெற்றுள்ளது. கிணறுகளில் உள்ள தண்ணீரை முறையாக கொண்டு வருவதற்கு சீரான மின்சாரம் இல்லை என்பது ஒரு காரணமாக உள்ளது.விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது கடையநல்லூர் நகராட்சி 11வது வார்டு மதிமுக., கவுன்சிலர் காளிரத்தினம் விறுவிறு என எழுந்து சென்று வாளி ஒன்றில் எடுத்து வந்த கழிவுநீரை கமிஷனர் (பொறுப்பு), சுகாதார அலுவலர், நகராட்சி அதிகாரிகள் அமர்ந்திருந்த இருக்கைகளுக்கு முன்பாகவும், நகராட்சி கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள் அமர்ந்திருக்கும் பகுதியிலும் கொட்டினார்.
இதனை தொடர்ந்து நகராட்சி கூட்ட அரங்கில் கடுமையான "கப்' அடித்தது. கொட்டிய கழிவுநீரில் ராட்சத புழுக்களும், அசுத்தமான பொருட்களும் கிடந்தன. இதனையடுத்து கவுன்சில் கூட்டத்தில் பரபரப்பான நிலை காணப்பட்டது.கழிவுநீரை கவுன்சில் கூட்டரங்கில் கொட்டி தீர்த்த கவுன்சிலர் காளிரத்தினம் பேசுகையில், ""கடந்த 6 மாத காலமாக 11வது வார்டில் வாறுகால் சுத்தம் செய்யப்படவில்லை. சுகாதார துறையிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாறுகால் சுத்தம் செய்யப்படாததால் பொதுமக்கள் படக்கூடிய அவதியான நிலையை தான் கழிவுநீராக வந்து கொட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முறையான பதிலை தெரிவித்த பிறகு கூட்டத்தை நடத்தலாம்'' என்றார்.இதனை தொடர்ந்து சுகாதார அலுவலர் பேசுகையில், ""நகராட்சியில் சுகாதார பணிக்கு 300 துப்புரவு பணியாளர்கள் தேவை. 86 பேர் தான் உள்ளனர். இருந்தபோதிலும் இருக்கும் பணியாளர்களை வைத்து முடிந்தவரை சுகாதார பணிகள் நடப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

இதனிடையில் கவுன்சில் கூட்டரங்கில் கொட்டப்பட்ட வாறுகால் கழிவுநீரை உடனடியாக சுத்தம் செய்யவேண்டுமென துணைத் தலைவர் ராசையா, கவுன்சிலர்கள் விஸ்வா சுல்தான், முத்துக்குமார், அப்துல்லத்தீப், வீரபாபு, உள்ளிட்ட சிலர் கேட்டுக் கொண்டதை அடுத்து வெளியிலிருந்து நகராட்சி சுகாதாரதுறை சார்பில் சுத்தம் செய்ய வாளியில் மண் எடுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. கவுன்சிலர் காளிரத்தினம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து துணைத் தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் சிலர் காளிரத்தினத்தை சமரசம் செய்தனர்.இதனிடையில் 5வது வார்டு கவுன்சிலர் பாலாஜி, ""இப்போது வாளியில் கழிவுநீர் கொண்டு வரப்பட்டுள்ளது. எங்கள் வார்டில் வாறுகால் சுத்தம் செய்யப்படவில்லை என்றால் டேங்கர் லாரியில் கொண்டு வந்து கொட்டுவேன்'' என ஆவேசமாக தெரிவித்தார்.
33வது வார்டு அதிமுக கவுன்சிலர் முத்துகிருஷ்ணன் பேசுகையில், கடுமையான குடிநீர் பற்றாக்குறை காரணமாக நகராட்சியில் 1 குடம் தண்ணீர் 3 ரூபாய்க்கு விற்கப்படுகிறது எனவும், பெரும்பாலான வீடுகளில் பெண்கள் குளிக்க கூட தண்ணீர் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து குடிநீர் பிரச்னை குறித்து பெரும்பாலான கவுன்சிலர்கள் பேசினர்.கவுன்சிலர் கழிவுநீரை நகராட்சி கூட்ட அரங்கில் கொட்டிய விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புனித ஹஜ் யாத்திரை செய்முறை பயிற்சி

மேலப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புனித ஹஜ் யாத்திரை செய்முறை பயிற்சிவகுப்பு நடந்தது.மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி, புனித ஹஜ் யாத்திரை குறித்து விளக்கினார். குர்ஆன், நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றுவது குறித்து விளக்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹஜ் யாத்திரை மேற்கொள்ள உள்ள 80க்கும் மேற்பட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

தாஜ் ஆட்டோ கன்சல்டிங்

தாஜ் ஆட்டோ கன்சல்டிங் 

கடையநல்லூரில் பெண்கள் காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர்.

கடையநல்லூர் நகராட்சியில் லாரி மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் முறையாக சப்ளை செய்யப்படவில்லை என்று தெரிவித்தும், 20 நாட்களாக இரண்டு வார்டுகளில் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை என்றும் புகார் தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர்.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட துறையினர் குடிநீர் பொதுமக்களுக்கு சீராக கிடைப்பதற்கான நடவடிக்கையினை முறையாக கண்டு கொள்ளவில்லை என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. கோடைகாலத்தை விட கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சிறு சிறு ஓட்டல்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.

குடிநீருக்காக இரவு, பகலாக பொதுமக்கள் தனியார் கிணறுகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை மிகவும் பரிதாபமாக காணப்பட்டு வருகிறது. இதனிடையில் நகராட்சியில் குடிநீர் இணைப்புகளின் மூலமான வினியோகம் சுமார் 15 நாட்களுக்கு ஒருமுறை என்ற சூழ்நிலை இருந்து வரும் நிலையில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலமான குடிநீர் வினியோகமும் போதுமான அளவிற்கு இல்லை என்ற குற்றச்சாட்டு பல்வேறு வார்டு மக்கள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையில் நேற்று காலை கடையநல்லூர் நகராட்சி 7,8வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு 20 நாட்களாகி விட்டதாகவும், டேங்கர் லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் தங்களின் வார்டுகளில் முறையாக சப்ளை செய்யப்படவில்லை என புகார் தெரிவித்து காலிக்குடங்களுடன் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவன், முத்துலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் நகராட்சி இன்ஜினியர் ராமலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பிட்ட 2 வார்டுகளுக்கும் மாலைக்குள் தண்ணீர் வினியோகம் செய்யப்படுமென உறுதியளித்தார். இருந்தபோதிலும் தங்களது வார்டுகளில் உள்ள தெருக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் வினியோகம் செய்யப்பட வேண்டுமென தொடர்ந்து கோஷமிட்ட வண்ணம் இருந்தனர்.

இதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுமென நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

திங்கள், 24 செப்டம்பர், 2012

தமிழகத்தில் சுமார் 14 மணி நேரம் மின்வெட்டு பொதுமக்கள் கடும் அதிருப்தி


தமிழகத்தில் தற்போது கடும் மின்வெட்டு நிலவி வருகிறது. சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 14 மணி நேரம் மின்வெட்டு நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை காற்றாலை மூலம் அதிக அளவில் மின்சாரம் கிடைத்து வந்தது. தென்மேற்கு பருவக்காற்று நல்ல பலனை கொடுத்ததால் ஆரல்வாய்மொழி, முப்பந்தல், செங்கோட்டை, சுரண்டை, பாலக்காட்டு கணவாய் போன்ற பகுதிகளில் உள்ள காற்றாலைகள் மூலம் தினந்தோறும் சுமார் 3,000 மெகாவாட்டிற்கும் அதிகமாக மின்சாரம் கிடைத்தது.
குமரி மாவட்டம் முப்பந்தல், ஆரல்வாய்மொழியில் மட்டும் 6,000 காற்றாலைகள் உள்ளன. இங்கிருந்து 1,000 மெகாவாட் மின்சாரம் வரை பெறப்பட்டு வந்தது. இதனால் தமிழகத்தில் மின்வெட்டு நேரம் குறைந்து மக்கள் சற்று நிம்மதியாக இருந்தனர். இந்நிலையில் தற்போது காற்றின் வேகம் குறைந்துள்ளதால் 200 மெகாவாட் மின்சாரம் மட்டுமே காற்றாலைகள் மூலம் கிடைக்கின்றது.
திடீர் என்று காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 14 மணிநேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மின்சாரம் எப்பொழுது வரும், போகும் என்று தெரியாமலம் குமுறி வருகின்றனர்.

சனி, 22 செப்டம்பர், 2012

நெல்லையில் நேற்று மாலை மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது போலீசார் தடியடி


நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து நெல்லையில் நேற்று மாலை மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தினர் போராட்டம் நடத்தினர். சந்திப்பு ரெயில் நிலையம் நோக்கி வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும் அவர்கள் தடையை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
 
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். நாலாபுறமும் சிதறி ஓடிய போராட்டக்காரர்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை அடித்து நொறுக்கினர். பஸ்கள் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர். இதில் 7 அரசு பஸ்கள், 2  தனியார் பஸ்கள் சேதமடைந்தன. போலீஸ் கூண்டையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் நெல்லை சந்திப்பு பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் 6 போலீசாரும், போராட்டக்காரர்கள் 13 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தடையை மீறி போராட்டம் நடத்தியதாக 283 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தடியடி சம்பவத்தை கண்டித்து மேலப்பாளையத்தில் நேற்று இரவு ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஒருவர் காயமடைந்தார். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
 
இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்கியதில் 6 பஸ்கள் சேதமடைந்தன. இந்த சம்பவத்தையடுத்து மீண்டும் மேலப்பாளையத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. மேலப்பாளையம் வழியே செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இன்று காலை 9 மணி வரை மேலப்பாளையம் வழியே வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பாபநாசம் மார்க்க பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
 
தென்காசி-நெல்லை பஸ்கள் 8 மணிக்கு பிறகே இயக்கப்பட்டன. மேலப்பாளையம் பகுதியில் பதட்டம் நிலவுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பஸ்கள் மீது கல்வீசி தாக்கியது மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கடையநல்லூர் அருகே போர்வெல் தொழிலாளி மர்மச்சாவு


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 40). இவர் போர்வெல் லாரியில் தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்தார். தற்போது போர்வெல் லாரியுடன் கடையநல்லூர் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து வந்தார். நேற்று கடையநல்லூர் பகுதியில் அட்டை குளம் கிராமத்தில் போர்வெல் லாரியில் மோகன் தங்கி இருந்தார்.
 
அப்போது அவருக்கு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டதாக கூறி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் மோகன் வழிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால் அவர் வயிற்றுவலி காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அல்லது தற்கொலை செய்தாரா என்று கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

கடையநல்லூரிலும் பந்த் காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது (படங்களுடன்)


kadayanallur


சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளித்த, மத்திய அரசின் முடிவை கண்டித்து, எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய, நாடு தழுவிய, "பந்த்'திற்கு, வர்த்தகர்கள் முழு ஆதரவு தெரிவித்தனர். இதனால், பல மாநிலங்களில், மக்களின் சாதாரண வாழ்க்கை பாதிக்கப்பட்டு, "பந்த்' வெற்றி பெற்றது. ஆனாலும், பஸ் மற்றும் ரயில் போக்குவரத்தில், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. டீசல் விலை உயர்வு, சமையல் காஸ் சிலிண்டர்கள் வினியோகத்தில் கட்டுப்பாடு மற்றும் சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி போன்ற, மத்திய அரசின் சமீபத்திய முடிவுகளைக் கண்டித்து, பாரதிய ஜனதா, தெலுங்கு தேசம், சமாஜ்வாதி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், நாடு தழுவிய, "பந்த்'திற்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தன. லாரி உரிமையாளர்களும், ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களும், வர்த்தகர்களும், இந்த, "பந்த்'திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
தமிழகத்திலும், வர்த்தகர்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்திருந்ததால், "பந்த்' முழு அளவில் வெற்றி பெற்றது. பெரும்பாலான மாநிலங்களில், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தாலும், பஸ், ரயில் போக்குவரத்தில், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. அரசியல் கட்சியினரின் வற்புறுத்தல் இல்லாமலேயே, வர்த்தகர்கள், தங்கள் கடைகளை மூடி, அமோக ஆதரவு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடையநல்லூரிலும் பந்த் காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது . காலை 10.30 மணியளவில் கம்யூனிஷட் கட்சியை சார்ந்த சிலர் ஒரு சில கடைகள் மட்டும் திறந்த கடைகளை அடைக்க கோசம் எழுப்பியவர்களை போலீசார் கைது செய்து சேனைத்தலைவர் மண்டபத்தில் அடைத்து பின்பு விடுவித்தனர் நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதாலும் சிறிது பதற்றம் காணப்பட்டது அனால் போலீஸ் அதிகளவு இருந்த்ததால் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை.

நெல்லை, தென்காசி இடையேயான அகல ரயில் பாதையில் புதிய ரயில் சேவை இன்று முதல் துவக்கம்

நெல்லை, தென்காசி இடையேயான அகல ரயில் பாதையில் புதிய ரயில் சேவை இன்று காலை 9.30 மணிக்கு துவங்கியது. இந்த ரயில் காலை 11.05 மணிக்கு தென்காசியில் இருந்து செங்கோட்டைக்கு செல்ல உள்ளது. இப்த புதிய ரயிலை காங்கிரஸ் எம்.பி., ராமசுப்பு, காதி துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் ஆகியோர் துவங்கி வைத்தனர். மேலும் இவ்விழாவில் நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா, எம்.எல்.ஏ., நைனார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

கடையநல்லூரில் தொடரும் கொள்ளை சம்பவம் டவுசர் கொள்ளையர்கள் அட்டகாசம்

கடையநல்லூரில் தொடரும் கொள்ளை சம்பவம்

ஒரே நாளில் 3 வீடுகளில் கைவரிசை கத்தி முனையில் பெண்களிடம் துணிகர கொள்ளை டவுசர் கொள்ளையர்கள் அட்டகாசம்

இறைத்தூதரை அவமதிக்கும் செயலை தண்டனைக்குரிய குற்றமாக சட்டமியற்ற வேண்டும்

kadayanallur

"இறைத்தூதரை அவமதிக்கும் செயலை தண்டனைக்குரிய குற்றமாக சட்டமியற்ற வேண்டும் – உலக நாடுகளுக்கு சவூதி தலைமை முஃப்தி கோரிக்கை!

ரியாத்:முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் செயலை தண்டனைக்குரிய குற்றமாக கருதி சட்டமியற்ற வேண்டும் என்று உலக நாடுகளுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும் சவூதி அரேபியாவின் தலைமை முஃப்தி (மார்க்க தீர்ப்பு வழங்குபவர்) ஷேக் அப்துல
் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல் ஷேக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியது: “அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக போராடுவோர் வன்முறையில் இருந்து விலகவேண்டும். முஸ்லிம்கள் கோபத்திற்கு அடிமையாகிவிடக் கூடாது. நிரபராதிகளை கொலைச் செய்வதையும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் தவிர்த்து இத்தகைய திரைப்படங்களை தயாரிப்போரின் லட்சியங்களை நிறைவேற்றாமல் இருப்பதில் முஸ்லிம்கள் கவனம் செலுத்தவேண்டும்.” இவ்வாறு ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் அல் ஷேக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இஸ்லாத்தின் புனிதங்களை அவமதிப்பதை சர்வதேச அளவில் தடைச் செய்யவேண்டும் என்று எகிப்தில் உயர் முஸ்லிம் அறிஞரும், அல் அஸ்ஹர் இமாமுமான ஷேக் அஹ்மத் அல் தய்யிப் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், நிரபராதிகள் தாக்கப்படக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

கடையநல்லூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் அமெரிக்காவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


கடையநல்லூரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் அமெரிக்காவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நபிகள் நாயகத்தை அவமதித்து சித்தரித்து படம் தயாரித்துள்ள அமெரிக்க திரைப்பட இயக்குநர் மற்றும் அதற்கு துணைபோன அமெரிக்காவை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடையநல்லூர் மணிக்கூட்டு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம் தலைமை வகித்தார். எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட தலைவர் சங்கை ஜாபர்அலி உஸ்மானி கண்டன உரையாற்றினார். பாப்புலர் ப்ரண்ட் கடையநல்லூர் நகர செயலாளர் முகம்மதுகனி நன்றி கூறினார். கண்டன கோஷங்கள் எழுப்பபட்டடது.
ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கடையநல்லூர் அருகேயுள்ள வடகரை, அச்சன்புதூர் பகுதியில் நேற்று 3 முறை அடுத்தடுத்து நிலஅதிர்வு


kadayanallur

கடையநல்லூர்  அருகேயுள்ள வடகரை, அச்சன்புதூர் பகுதியில் நேற்று 3 முறை அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்பட்டது. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இந்த அதிர்ச்சியால் விடிய, விடிய பொதுமக்கள் உறக்கமின்றி தவித்தனர். இன்றும் தொடர்ந்து 2வது நாளாக பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
 
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள வடகரை மற்றும் அச்சன்புதூர் பகுதியில் நேற்று காலை 10-45 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் கழித்து மதியம் 12.45 மணிக்கு மேல் 2வது முறையாக அந்த பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு அச்சன்புதூர், வடகரை மட்டுமின்றி அருகில் உள்ள வாவாநகரம், பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் உணர்ந்தனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும்பீதி ஏற்பட்டு, வீட்டை விட்டு வெளியேற துவங்கியது.
 
இதற்கிடையே மாலை 4.50 மணிக்கு அந்த பகுதிகளில் உள்ள வீடுகள் மட்டுமின்றி, காலி மனைகள், தென்னந்தோப்புகளிலும் பயங்கரமாக நிலஅதிர்வு ஏற்பட்டது.சில வீடுகளில் காஸ்சிலிண்டர், அலமாரியில் உள்ள பொருட்கள் கீழே விழுந்தன. சுமார் 10 வினாடிகள் வரை இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இதனால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதன் காரணமாக வாவாநகரில் ரஜப்நிஷா என்பவரின் காலிமனையில் சுமார் 5 மீட்டர் தூரத்திற்கு தரையில் விரிசல் ஏற்பட்டது. அதே பகுதியை சேர்ந்த அப்துல்குத்தூஸ் என்பவரின் வீட்டின் சுவரில் விரிசல் ஏறப்ட்டது. வடகரையை சேர்ந்த முகைதீன்பிச்சை, பார்வதிபுரம் சடையம்மாள் ஆகியோரது வீடுகளிலும் கீறல் விழுந்தது.
 
இதுபற்றி தகவல் அறிந்த செங்கோட்டை தாசில்தார் கிருஷ்ணவேணி, மண்டல துணை தாசில்தார் சாம்பமூர்த்தி, வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் முகமதுஷெரீப், வருவாய் ஆய்வாளர் பார்வதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
 
இதேபோல் பார்வதிபுரம் பகுதியில் நிலஅதிர்வு ஏற்பட்ட பகுதியை அச்சன்புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் டாக்டர் சுசீகரன் பார்வையிட்டார். அந்த பகுதியில் நில அதிர்வு காரணமாக வீடுகளின் ஓடுகள் விழுந்துள்ளதை பார்வையிட்டார். மேலும் பொதுமக்களிடம் நில அதிர்வு குறித்து கேட்டறிந்தார். நேற்று ஏற்பட்ட நில அதிர்வு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தாத போதிலும், 3 முறை நில அதிர்வு ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளாத பொதுமக்கள் நேற்று இரவு விடிய, விடிய தூங்காமல் விழித்திருந்தனர்.
 
இரவில் நில அதிர்வு ஏற்பட்டு விடுவோ என்ற அச்சத்திலேயே காணப்பட்டனர். இன்று காலையிலும் வடகரை, அச்சன்புதூர் பகுதியில் தொடர்ந்து நில நடுக்க பீதி இருந்து வருகிறது. இதற்கிடையே நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளில் மேலும் பாதிப்பு ஏதும் இருக்கிறதா? என்பதை அறிய புவியியல் வல்லுனர்கள் இன்று ஆய்வு பணி மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது

கடையநல்லூர் வட்டாரத்தில் விதை நேர்த்தி செயல்விளக்க முகாம்

கடையநல்லூர் வட்டாரத்தில் வேளாண்துறை சார்பில் மண்மாதிரி மற்றும் விதை நேர்த்தி செயல்விளக்க முகாம் நடந்தது.
கடையநல்லூர் வட்டாரம் புன்னையாபுரம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விதை நேர்த்தி மற்றும் மண்மாதிரி செயல்விளக்க முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் தலைமை வகித்தார். முன்னோடி விவசாயி ராமர் முன்னிலை வகித்தார். இதில் ரைசோபியம் மூலம் விதை நேர்த்தி செய்வது குறித்தும், மண் மாதிரி எடுப்பது பற்றியும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சங்கரநாராயணன் செயல்விளக்கம் அளித்தார்.
* அட்மா திட்டத்தின் கீழ் கம்பனேரி கிராமத்தில் ஒன்றியக்குழு தலைவர் பெரியதுரை முன்னிலையில் நடந்த முகாமில் வேளாண்மை உதவி இயக்குநர் மண்மாதிரி எடுப்பது பற்றியும், உளுந்து விதைகளை சைரோபியம் கொண்டு விதைநேர்த்தி செய்வது குறித்தும் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து உதவி வேளாண்மை அலுவலர் நாராயணன் பேசினார். சங்கரநாராயணன் செயல்விளக்கம் அளித்தார். செல்வராஜ் நன்றி கூறினார்.
* கடையநல்லூர் வட்டாரம் கொடிக்குறிச்சி கிராமத்தில் பஞ்., தலைவர் முத்தையா முன்னிலையில் கடையநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் மண்மாதிரி மற்றும் விதை நேர்த்தி செயல்விளக்கம் குறித்து பேசினார். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
* நயினாரகரம் கிராமத்தில் நடந்த மண்மாதிரி மற்றும் விதை நேர்த்தி செயல்விளக்க முகாம் அட்மா தலைவர் வசந்தம் முத்துப்பாண்டி முன்னிலையில் கடையநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் தலைமையில் நடந்தது. முகாமில் உளுந்து விதைகள் சைரோபியம் மூலம் விதை நேர்த்தி செய்வது குறித்து விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை தொழில்நுட்ப வல்லுநர்கள் டாங்கை மற்றும் கணேசன் செய்திருந்தனர். உதவி வேளாண்மை அலுவலர் ராமநாராயணன் நன்றி கூறினார்.

கடையநல்லூரில் ஆசிரியர்களுக்கு பயிற்சி

கடையநல்லூரில் ஆசிரியர்களுக்கு கல்வி இணை செயல்பாடுகள் பயிற்சி நடந்தது.
கடையநல்லூர் வட்டார வளமையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி குறுவள மையத்தில் ஆசிரியர்களுக்கு கல்வி இணை செயல்பாடுகள் பயிற்சி நடந்தது. பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவக்குமார் துவக்கி வைத்தார். ஆசிரிய பயிற்றுநர் பெருமாள், இடைகால் ஆசிரியர் சார்லஸ் பயிற்சி வகுப்புகள் நடத்தினர். சாம்பவர்வடகரை மனவளக்கலை மன்ற உறுப்பினர் பணகொடி தியான வகுப்பு நடத்தினார்.
நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

சவூதியில் பயங்கர விபத்து - 10 இந்தியர்கள் உள்பட 13 பேர் பலி


சவூதி அரேபியாவின் ஜூபைல் என்ற நகரில் இன்று நடந்த மோசமான சாலை விபத்தில் 10 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூபைல் நகரில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் இந்தியர்கள், நேபாளம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்நதவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிறுவன ஊழியர்களுக்காக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் 50 பேருடன் ஒரு பேருந்து நிறுவனத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது வழியில், ஒரு டேங்கர் லாரியுடன் பஸ் மோதிக் கொண்டது. இதில் டேங்கர் லாரியும், பஸ்ஸும் தீப்பிடித்து எரிந்தன. இதில் பலர் உடல் கருகி உயிரிழந்தனர். பலர் தீக்காயமடைந்து அலறித் துடித்தனர்.
மீட்புப் படையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். இந்தக் கோர விபத்தில் 10 இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பலியான இந்தியர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை.

திங்கள், 17 செப்டம்பர், 2012

கடையநல்லூரில் SDPI நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்களுடன்)

கடையநல்லூரில் SDPI நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்களுடன்)


கடையநல்லூரில் SDPI சார்பில் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல் அவர்களை கொச்சைபடுத்தி திரைப்படம் எடுத்து அவமதித்த வெள்ளை அமெரிக்க & யுத நாய்களை கண்டித்து மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளாக  தொண்டர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.




 

கடையநல்லூரில் அமெரிக்காவை கண்டித்து TNTJ நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


கடையநல்லூரில் அமெரிக்காவை கண்டித்து TNTJ நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்



வெள்ளி, 14 செப்டம்பர், 2012

கடையநல்லூர் பகுதிகளில் உருத்தெரியாமல் சிதையும் குளங்கள்

10 அடி ஆழம் வரை மண் தோண்டுவதால் விவசாயம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். 
தமிழகத்தில் உள்ள குளங்களில் வண்டல், கரிசல் மண் அள்ள அரசு அனுமதி வழங்கியது. விவசாயிகள் மற்றும் செங்கல் தயாரிக்கும் சிறுதொழில் முனைவோர் வருவாய்த்துறையிடம் அனுமதி பெற்று மண் அள்ளினர். இந்தாண்டு ஆளும் கட்சியினர் ஆதாயம் பெற அரசு வழிவகை செய்தது. 
அதன்படி ஆளும் கட்சியினர் கனிம வளத்துறையிடம் பாஸ் பெற்று விவசாயிகள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களிடம் விற்பனை செய்தனர். இதனால் கடந்த ஆண்டுகளில் லோடுக்கு ரூ.80 வரை செலுத்தி வண்டல் மண் அள்ளி விளைநிலங்களை மேம்படுத்திய விவசாயிகள் தற்போது ரூ.500 செலுத்தி மண் அள்ளும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
குளங்களில் 1 மீட்டர் அளவுக்கு மண் அள்ள அரசு அனுமதி வழங்கிய போதிலும் விதிமுறைகளை மீறி 10 அடிக்கு மேல் மண் அள்ளப்படுகிறது. இதனால் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி யடைந்துள்ளனர். 
கடையநல்லூர் பகுதி யில் உள்ள நொச்சி குளம், பார்வதிகுளம், பரமேஸ்வரிகுளம் உள்ளிட்ட பல் வேறு குளங்களில் அள வுக்கு அதிகமாக மண் அள்ளப்படுவதால்  இயற்கை வளம் அழிவதுடன், மடை களில் இருந்து தண்ணீர் வெளியேற்ற முடியாததால் 
விவசாயமும் பாதிக்கப்படும்.  மேலும் குளங்களில் தண்ணீர் பெரும் நேரங்களில் குளிக்க செல்லும் சிறுவர்கள் ஆபத்தில் சிக்கும் அபாயமும்ஏற்பட்டுள்ளது. 
குளங்களில் வண்டல், கரம்பை, கரிசல் போன்ற மண்கள் அள்ளப்படுவதோடு மணலும் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு குளத்திற்கும் தனித்தனியாக பாஸ் வழங்கப்பட்ட போதிலும் சம்பந்தப்பட்ட குளத்தில் மட்டும் அல்லாமல் எந்த குளத்திலும், எப்போதும் அள்ளலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. 
விதிமீறல்கள் குறித்து அப்பகுதி விவசாயிகள் கேள்வி எழுப்பினால் போலீஸ் மூலம் மிரட்டுவதாக விவசாயிகள் குமுறுகின்றனர். பல குளங்களில் விதிகளை மீறி மண் அள்ளுவது குறித்து விவசாயிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போதிலும் இதுபற்றிகண்டுகொள்ளாமல் மண் அள்ளுவதில் மும்முரமாக உள்ளனர்.

புதன், 12 செப்டம்பர், 2012

புளியங்குடியில் செல்போன் டவர் செட்-டாப் பாக்ஸ் வெடித்து விழுந்து தொழிலாளி படுகாயம்

புளியங்குடியில் செல்போன் டவர் செட்-டாப் பாக்ஸ் வெடித்து சிதறி வீட்டில் விழுந்ததில் தொழிலாளி படுகாயமடைந்தார்.
புளியங்குடி ஆர்எஸ்கேபி ரோட்டில் தனி யார் செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டவருக்கு தென்புறம் சண்முகசுந்தர விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த தொழிலாளி அண்ணாமலை (25) என்பவரது வீடு உள் ளது. நேற்று மதியம் தனி யார் செல்போன் டவரில் இருந்த செட்-டாப் பாக்ஸ் திடீரென வெடித்து சிதறியது. இதில் 20 கிலோ எடையுள்ள பாக்ஸ் துண்டு அண்ணாமலையின் ஓட்டு வீட்டில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அண்ணாமலை படுகாயத்துடன் உயிர்தப்பினார். அவர் புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள், 10 செப்டம்பர், 2012

கடையநல்லூர் அருகே மரத்தில் கார் மோதி இருவர் சாவு

கடையநல்லூர் அருகே கார் மரத்தில் மோதியதில் அதில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
 திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள அழகாபுரியைச் சேர்ந்த சிலர் சனிக்கிழமை இரவு குற்றாலத்துக்குச் சென்று குளித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
 காரை அழகாபுரியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (40) ஓட்டி வந்துள்ளார். கார் சொக்கம்பட்டி காவல் நிலையம் அருகே வந்த பொழுது நிலை தடுமாறி சாலையோரத்திலிருந்த மரத்தின் மீது மோதியதாம்.
 இதில் காரில் பயணம் செய்த ஆறுமுகம் மகன் சேகர் (32), முத்துவீரன் மகன் கருப்பசாமி (40) ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 மேலும் காரில் பயணம் செய்த அழகாபுரியைச் சேர்ந்த மாடசாமி (22), சேகர் (22), கருணாகரன் (18), வேலுச்சாமி (20), செல்வராஜ் (28), கார் டிரைவர் ரமேஷ்குமார் மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த சரவணன் (19) ஆகிய 7 பேரும் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 இது குறித்து சொக்கம்பட்டி போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடையநல்லூரில் சூரை காற்று ஆனால் மழையில்லை (படங்களுடன்)

கடையநல்லூரில் சூரை காற்று ஆனால் மழையில்லை (படங்களுடன்)






மதினா நகர் மீயான் குடும்பத்தை சேர்ந்த அல்ஹாஜ் அப்துல் காதர் பாகவி ஃபைஜி அவர்கள் மறைவிற்கு நாம் அனைவரும் துஆ செய்வோமாக!

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

கடையநல்லூரில் மழை வேண்டி சுன்னத்துல் ஜமாஅத் தொழுகை புகைப்படங்களுடன்

09/09/2012
கடையநல்லூர் அனைத்து ஜமாஅத் & பைசுல் அன்வார் அரபிக் கல்லூரி இணைந்து நடத்திய  மழைத் தொழுகை இன்று காலை 7 மணி முதல் 8.45 மணிவரை  காயிதே மில்லத் திடலில் நடைபெற்றது இதில் திரளாக  மக்கள் கலந்துகொண்டனர்.















மதினா நகர் மீயான் குடும்பத்தை சேர்ந்த ஹாஜி மௌலான மொளலவி ஹாபில் M.S.அப்துல்காதிர் பாகவி அவர்கள் இன்று வபாத் ஆகி விட்டார்கள்


09/09/2012 மதினா நகர் மீயான்  குடும்பத்தை சேர்ந்த ஹாஜி மௌலான மொளவி ஹாபில் M.S.அப்துல்காதிர் பாகவி அவர்கள் இன்று வபாத் ஆகி விட்டார்கள், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அன்னாரின் ஜனாசா நாளை காலை 10.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும். 

அன்னாரின் குடும்பத்தார்க்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 

சனி, 8 செப்டம்பர், 2012

கடையநல்லூர் அனைத்து ஜமாஅத் & பைசுல் அன்வார் அரபிக் கல்லூரி இணைந்து மழைத் தொழுகை

கடையநல்லூர் அனைத்து ஜமாஅத் & பைசுல் அன்வார் அரபிக் கல்லூரி இணைந்து மழைத் தொழுகை நாளை காயிதே மில்லத் திடலில் நடை பெற இருக்கிறது
வல்ல ரகுமான் வான் மழையை தர வேண்டி இன்ஷா அல்லாஹ் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்த்திடும் வகையில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்

கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்த்திடும் வகையில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக நகராட்சி தலைவி சைபுன்னிசா தெரிவித்தார்.கடையநல்லூர் நகராட்சியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. குடிநீர் வினியோகம் சீராக கிடைத்திடவும், தட்டுப்பாட்டை நீக்கி அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கிட ஏற்பாடு செய்யவும் நகராட்சி அலுவலகத்திற்கு பொதுமக்கள் நாள்தோறும் வருகை தந்து வலியுறுத்தி வரும் சூழ்நிலை காணப்பட்டு வருகிறது. இதனிடையில் நகராட்சியில் குடிநீர் வினியோகம் 10 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.போதுமான நீர்பிடிப்பு ஆற்றுப்படுகையில் இல்லாத நிலையிலும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திலான தண்ணீரும் சீராக கிடைக்கப் பெறாத நிலையில் குடிநீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் பற்றாக்குறையை சமாளித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுகுறித்து நகராட்சி தலைவி சைபுன்னிசா கூறியதாவது:-கடையநல்லூர் நகராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் அதனை சமாளித்திட நகராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் வினியோகம் சீராக கிடைக்கப் பெறவில்லை என கூறப்பட்டு வரும் நிலையில் குடிநீர் பற்றாக்குறையை சமாளித்திடும் பொருட்டு நகராட்சி பொதுமக்களின் நலன் கருதி லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் நகராட்சியில் குடிநீர் வினியோகம் மேற்கொள்ள பொதுமக்களின் நலன் கருதி 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென நகராட்சி நிர்வாக ஆணையாளரிடம் வலியுறுத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.

வியாழன், 6 செப்டம்பர், 2012

கடையநல்லூரில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டியில் ஜோசப் மெட்ரிக் பள்ளிக்கு சாம்பியன் பட்டம்



கடையநல்லூரில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டியில் ஜோசப் மெட்ரிக் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை சார்பில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது. இப்போட்டிகளில் கடையநல்லூர் வட்டாரத்திற்கு உட்பட்ட 36 அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆண்கள் பிரிவில் மீனாட்சிபுரம் ஜோசப் மெட்ரிக்பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது. பெண்கள் பிரிவில் செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டம் வென்றது.விழாவில் மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் அருள்ராஜ், ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, மாணவரணி துணை செயலாளர் யாத்ராபழனி, கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பத்மநாதன், உடற்கல்வி இயக்குநர் முகம்மது அலி ஜின்னா, உற்பயிற்சி ஆசிரியர்கள் ராஜேந்திரன், முகம்மது இப்ராகிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய இந்தியாவின் ஒலிம்பிக் வீரராக, தங்கப் பதக்கம் பெறும் வீரராக இவர்களில் ஒருவர் அல்லது இவர்களைப் போன்று உங்களிடம் பயிற்சி பெறுபவர்களில் ஒருவர் உருவானாலும் சந்தோஷமே. எதிர்பார்ப்போம். உங்கள் பயிற்சி அதற்கு தூண்டுகோலாகவும், திறனை வளர்க்கவும் உதவும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் இப்ராஹிம் மாஸ்டர்.

புதன், 5 செப்டம்பர், 2012

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 54 பேர் உயிரிழப்பு

சிவகாசியில் இருந்து 7 கி.மீ., தொலைவில் இருக்கிறது முதலிப்பட்டி. இங்கு இருக்கும் ஓம் சக்தி பட்டாசு ஆலையில் இன்று காலையில் திடீர் என வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 45 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மதுரை, சிவகாசி, விருதுநகர் அரசு பொது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 50க்கும் மேற்பட்டோர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றது.

குற்றாலம் மெயின் அருவில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு

குற்றாலம் மெயின் அருவில் நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுமார் 7 மணி நேரம் குளிக்க தடை விதிக்கப்பட்டது.குற்றாலம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் அவ்வப்போது தண்ணீர் அதிகரித்தவண்ணம் உள்ளது. சீசன் களை கட்டியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அலைமோதுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்மழை பெய்து வருவதால், நேற்று குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்தது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் காரணமாக மெயின் அருவியில் சுமார் 7 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது.ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளிலும் தண்ணீர் அதிகளவில் விழுந்தது. மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்த மகிழ்ந்தனர்.