கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 6 மே, 2012

கடையநல்லூர் பகுதியில் டெங்குகாய்ச்சலை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை

கடையநல்லூரில் டெங்கு காய்ச்சலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் மோகன்தாஸ் தெரிவித்தார். இதனிடையில் அரசு ஆஸ்பத்திரிக்கு தற்காலிகமாக 5 டாக்டர்கள் போர்க்கால அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.கடையநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பரவிவந்த காய்ச்சல் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்ததை தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில் காய்ச்சல் பரவி வந்ததையடுத்து, சுகாதாரத்துறை இயக்குனர்களிடம் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள கேட்டுக் கொண்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் அரசு ஆஸ்பத்திரிக்கு மர்மக்காய்ச்சல் குறித்து ஆய்வு மேற்கொள்ள சுகாதார துறை இயக்குனர் பொற்கைபாண்டியன், மருத்துவ பணிகள் இயக்குனர் பரஞ்சோதி மற்றும் உயரதிகாரிகள் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளுக்கான உத்தரவை வழங்கினர்.
அதனடிப்படையில் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒருமாத கால பணிக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து 5 டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என இயக்குனர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று 5 டாக்டர்கள் உடனடியாக பணியில் டெபுடேசன் அடிப்படையில் ஈடுபடுத்தப்பட்டனர். ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைவினை கண்டறியும் மிஷின் அம்பையில் இருந்து கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று நள்ளிரவு கொண்டு வரப்பட்டது.

திடீர் ஆய்வு
இந்நிலையில் நேற்று மதியம் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் மோகன்தாஸ், கலெக்டர் செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் முதன்மை செயலர் மற்றும் கலெக்டர் நோய் குறித்தும், அதற்கான சிகிச்சை மேற்கொள்வது குறித்தும் கேட்டறிந்தனர்.தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனைத்து வார்டுகளுக்கும் சென்றபின்னர் நிருபர்களிடம் முதன்மை செயலர் மோகன்தாஸ் கூறியதாவது:கடையநல்லூரில் பரவிவரும் டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.முதன்மை செயலருடன் கடையநல்லூர் தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணன், கடையநல்லூர் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு)ராமலிங்கம், சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் கைலாசம், பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக