கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 26 மே, 2012

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுகாதார பணிக்காக 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு


கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுகாதார பணிக்காக 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நகராட்சி நிர்வாக ஆணையர் சந்த்ரகாந்த் பி.காம்லே தெரிவித்தார்.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை அடுத்து அதனை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு செய்ய கடையநல்லூர் வந்தார். நகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி தலைவி ஷைபுநிஷா, ஆர்.டி.எம்.ஏ.மோகன், நகராட்சி கமிஷனர் தங்கராஜ் மற்றும் குடிநீர் வடிகால் துறை அதிகாரிகள், நகராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிர்வாக ஆணையரிடம் கடையநல்லூர் நகராட்சி கவுன்சிலர்கள் முத்துகிருஷ்ணன், முத்தையாபாண்டி, திவான்ஒலி, பஹாப், முத்துப்பாண்டி, கணபதிதேவர் மற்றும் கவுன்சிலர்கள் நகராட்சி பகுதியில் காணப்படும் சுகாதாரகேடு குறித்து தெரிவித்தனர். கவுன்சிலர் முத்தையாபாண்டி நிர்வாக ஆணையரிடம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள வாட்டர் டேங்குகள் சுத்தம் செய்யப்பட்டு பல நாட்கள் ஆகிவிட்டதாகவும், இதனால் குடிநீர் மாசு கலந்து வருவதாகவும் தெரிவித்தார். இதனை கேட்ட நகராட்சி நிர்வாக ஆணையர் வாட்டர் டேங்குகள் சுத்தம் செய்வது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார். தொடர்ந்து கடையநல்லூர் நகராட்சி பூஸ்டரில் அமைந்துள்ள 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தாமிரபரணி கூட்டுக் குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள வாட்டர் டேங்கில் ஏறி டேங்க் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளை ஆய்வு மேற்கொண்ட நகராட்சி நிர்வாக ஆணையர் சந்த்ரகாந்த் பி.காம்லே நிருபர்களிடம் கூறியதாவது:- கடையநல்லூர் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவலாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கொண்ட பணிகள் திருப்திகரமாக அமைந்துள்ள நிலையில் மீண்டும் அதற்கான முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். கொசுக்களை ஒழித்திடவும், வாட்டர் டேங்குகளை சுத்தம் செய்யவும், குடிநீர் வால்வுகளை தீவிரமாக கண்காணிக்கவும், வீடுகளில் கொசு மருந்து தெளித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினக்கூலி அடிப்படையில் 69 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை பொதுமக்கள் ஒத்துழைப்புதான் மிகவும் முக்கியமானதாகும். கடையநல்லூர் நகராட்சியில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்படி மூன்றரை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சுகாதார பணிக்கு மட்டும் 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடையநல்லூரில் அமைந்துள்ள நகர்நல மையத்திற்கு டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் விரைவில் நியமனம் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக