கடையநல்லூர் பகுதியில் கடந்த 3 வார காலமாக டெங்கு காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நகரசபை மற்றும் பொது சுகாதாரதுறையினர் இணைந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். கடையநல்லூரில் மட்டும் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் 100-க்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கடையநல்லூர் பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்களையும், அதன் இனப்பெருக்கத்துக்கு காரணமான கொசுப்புழுக்களையும் கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கொசுக்களை ஒழிக்க 4 ராட்சத புகை மருந்து லாரிகள் கடையநல்லூருக்கு வரவழைக்கப்பட்டது. அதனை இன்று கடையநல்லூர் நகரசபை தலைவி சைபுன்னிஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து அந்த லாரிகள் மூலம் கடையநல்லூர் பகுதிகளான இக்பால்நகர், இந்திராநகர், கிருஷ்ணாபுரம், மாவடிக்கால், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை ஆகிய பகுதிகளில் கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கப்பட்டது.
மேலும் பஸ் நிலையம், பூங்காக்கள் ஆகிய பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.இன்னும் ஒரு வாரம் கடையநல்லூர் பகுதி முழுவதும் கொசு மருந்து தெளிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக