கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 14 மே, 2012

கடையநல்லூரில் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

வாக்களித்த மக்களுக்கு தவறு நடந்து விடக்கூடாது என்ற உறுதியின்படி டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் முதல்வர் ஜெயலலிதா நேரடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
கடையநல்லூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை சார்பில் சுகாதாரத்துறை சிறப்பு மருத்துவ முகாம் ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமை முன்னிட்டு காலை 9 மணிக்கே ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகை தந்த வண்ணம் இருந்தனர். மருத்துவ முகாமிற்கு கலெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
சுகாதாரத்துறை துணை இயக்குநர் மீரான்மைதீன் வரவேற்றார். நெல்லை சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் அருண்மொழி, தென்காசி ஆர்டிஓ ராஜகிருபாகரன், ஹிதாயத்துல் பள்ளி நிர்வாகி செய்யது முகைதீன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆனைக்குட்டி பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், கடையநல்லூர் தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் அருள்ராஜ், கடையநல்லூர் நகர செயலாளர் கிட்டுராஜா உட்பட பலர் பேசினர்.
முகாமை துவக்கி வைத்து அமைச்சர் செந்தூர்பாண்டியன் பேசியதாவது:
டெங்கு காய்ச்சல் நெல்லை மாவட்டத்தில் காணப்படுகிறது என்ற தகவல் வந்தவுடன் முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலகத்திலிருந்து இதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வாக்களித்த மக்களுக்கு எந்த தவறும் நடந்திடக்கூடாது என்ற உறுதியின் அடிப்படையில் முதல்வர் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய்யும், நானும் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதின்படி சென்னையிலிருந்து மருத்துவக்குழுக்கள் அனுப்பபட்டன. மாவட்ட நிர்வாகமும் இதற்கான பணியினை விரைவுபடுத்தியது. இந்த பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். மருத்துவ குழுக்கள் தெரிவிக்கும் அறிவுரைகளை கேட்டு மேலும் இந்நோய் பரவாமல் இருப்பதற்கு சுகாதாரத்துறையினருடன் பொதுமக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் செந்தூர் பாண்டியன் பேசினார்.
மருத்துவ முகாமில் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர் மோகன், கடையநல்லூர் யூனியன் சேர்மன் பானுமதி, துணைத் தலைவர் கம்பனேரி பெரியதுரை, முன்னாள் நகராட்சி தலைவர் டாக்டர் சஞ்சீவி, சவுதி அரேபியா பேரவை செய்தி தொடர்பாளர் கமாலுதீன், மைதீன், பஞ்.,தலைவர் மூக்கையா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டனர்.
முகாமினை முன்னிட்டு பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையினை அமைச்சர் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக