கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 21 மே, 2012

கடையநல்லூரில் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை பலி

கடையநல்லூரில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய், அமைச்சர் செந்தூர் பாண்டியன், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட உயர் அதிகாரிகள், மருத்துவ குழுக்கள் ஆகியோர் கடையநல்லூருக்கு வருகை தந்து தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இதனிடையில் கடந்த மூன்று தினங்களாக டெங்கு காய்ச்சலின் வேகம் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. காய்ச்சல் பாதித்து கடையநல்லூர் ரைஸ்மில் தெற்கு தெருவை சேர்ந்த காபிஷா (2) குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காபிஷாவின் தாயார் நிஷாத்தின் தாயாருக்கு தென்காசியில் உடல் நிலை சரியில்லை என கூறப்பட்ட நிலையில் பாட்டியை பார்ப்பதற்காக நிஷாத்துடன் காபிஷாவும் சென்றதாக கூறப்படுகிறது.


பாட்டியை பார்த்து விட்டு கடையநல்லூர் வந்த காபிஷா உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையில் காய்ச்சல் பாதித்த காபிஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் கடையநல்லூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காபிஷாவின் தந்தை செய்யது மசூது துபாயில் டிரைவராக வேலை பார்த்து வருகிறாராம்.


இதனிடையில் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காய்ச்சல் பாதித்த 25 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகள் வார்டில் மட்டும் 14 பேரும், ஆண்கள் வார்டில் 6 பேரும், பெண்கள் வார்டில் 5 பேரும் காய்ச்சலுக்கான சிகிச்சை மேற்கொண்டனர். ஏற்கனவே 10 மாத குழந்தை தஸ்லிம், 5வயது சிறுவன் சந்தரு பலியாகிவிட்ட நிலையில் தற்போது காபிஷாவும் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகிவிட்டதால் கடையநல்லூரில் பொதுமக்கள் பெரிதும் கவலையும், ஆதங்கமும் அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக