கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 4 மே, 2012

கடையநல்லூர் மர்மக் காய்ச்சல்-தடுக்கத் தவறிய 2 சுகாதார அதிகாரிகள் சஸ்பெண்ட்!

கடையநல்லூர், கடையம் பகுதிகளில் மர்ம காய்ச்சலுக்கு 6 பேர் பலியானதைத் தொடர்ந்து தமிழக மருத்துவ இயக்குனர்கள் குழு கடையநல்லூர் சென்று இன்று ஆய்வு நடத்தியது. அப்போது காய்ச்சல் வேகமாக பரவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர், வடகரை ஆகிய இடங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. மர்ம காய்ச்சலுக்கு சந்துரு, கார்த்திகேயன், 10 மாத பெண் குழந்தை, ஒரு பெண், பக்கீர் மூகைதீன், வனராஜ் ஆகிய 6 பேர் பலியாகிவிட்டனர். மேலும் பரவி வரும் காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது டெங்கு காய்ச்சல்தான் என சுகாதார துறையினர் கூறி கடையநல்லூர் நகராட்சியில் 18 வார்டுகளிலும் வார்டுக்கு 2 குழுக்கள் வீதம் மருத்துவ குழு அமைத்துள்ளனர். இந்த குழுவினர் வீடு வீடாக சென்று கொசு மருந்து அடித்து வருகின்றனர். ஆனாலும் காய்ச்சல் கட்டுக்குள் வந்தபாடில்லை.

கடையம் மர்ம காய்ச்சலுக்குப் பலர் பலியாகி வருவதால் தமிழக பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர் பொற்கை பாண்டியன், கூடுதல் இயக்குனர் டாக்டர் கண்ணன், மருத்துவ பணிகள் இயக்குனர் டாக்டர் பஞ்சாட்சரம் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று கடையநல்லூர் வந்தனர்.

இவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதுடன் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். இதன் இறுதியில் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கத் தவறிய மாவட்ட மலேரியா அலுவலர் மோகன், சுந்தரபாண்டியன் ஹெல்த் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக