கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 28 ஏப்ரல், 2012

கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் அதிமுக., கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்


கடையநல்லூரில் அரசு கல்லூரி அமைத்திட உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து வழங்கப்பட்ட தீர்மானம் அஜெண்டாவில் இடம்பெறாததையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தீர்மானம் மினிட்டில் எழுதப்பட்டு அதற்கான நகல் வழங்கப்படுமென நகராட்சி தலைவர் உறுதியளித்தார்.
கடையநல்லூர் நகராட்சி கூட்டம் தலைவர் சைபுன்னிசா தலைமையில் நேற்று மாலை நடந்தது. துணைத் தலைவர் ராசையா, கமிஷனர் (பொறுப்பு) ராமலிங்கம், சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் நாகூர்மீரான், சுகாதார ஆய்வாளர்கள் கைலாசம், பாஸ்கர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் துவங்கியவுடன் அதிமுக கவுன்சிலர்கள் வீரபாகு, முத்துப்பாண்டி, ஆறுமுகம் கருப்பையா, முத்தையாபாண்டி, மாரிமுத்து, முத்துகிருஷ்ணன் ஆகியோர் கடையநல்லூரில் அரசு சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்திட உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

கவுன்சிலர் வீரபாகு பேசுகையில், ""கடையநல்லூரில் கல்லூரி அமைத்திட உத்தரவிட்டுள்ள முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டுவர கடிதம் வழங்கப்பட்டது. கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அஜெண்டாவில் அதற்கான பொருள் இடம்பெறவில்லை. தீர்மானத்தை நிறைவேற்றி முதலாவதாக பதிவு செய்து விட்டு பின்னர் கூட்டத்தை நடத்துங்கள்'' என்றார்.
இதனை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நகராட்சி துணைத் தலைவர் ராசையா மற்றும் சில கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர்களை அமைதிப்படுத்தினர். தொடர்ந்து தலைவர் தீர்மானம் நிறைவேற்றப்படுமென உறுதியளித்தார்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: 
ஆறுமுகசாமி: கடையநல்லூர் நகராட்சி பகுதியில் காய்ச்சல் பாதித்து சிலர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக குடிநீரில் புழுக்கள் அதிகமாக இருப்பதுதான் காய்ச்சலுக்கு முக்கிய காரணம். காய்ச்சலை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன.
சுகாதார அலுவலர் : காய்ச்சல் பரவி வருவது குறித்து சர்வே எடுக்கப்பட்டுள்ளது. 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வீரபாகு : காய்ச்சல் பாதித்தோருக்கு வெள்ளை அணுக்கள் குறைவுதான் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இதற்கான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
கமிஷனர்: கடையநல்லூர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மேலக்கடையநல்லூரை சேர்ந்த சிறுவன் இறந்ததற்கு டெங்கு காய்ச்சல்தான் காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை ஆகியோரது ஒத்துழைப்புடன் நகராட்சி நிர்வாகம் காய்ச்சல் தொடர்பான பணிகளை கண்காணித்து அதனை தடுக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆறுமுகசாமி: குடிநீரில் குளோரின் கலக்கவில்லை. புழு அதிகமாக வருகிறது என தெரிவிக்கப்பட்டும் ஏன் அதற்கான நடவடிக்கை இல்லை.
கமிஷனர்: குடிநீரில் குளோரின் கலந்துதான் வினியோகம் செய்யப்படுகிறது. இதனை யார் வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம்.
பியூலா: எனது வீட்டில் குடிநீர் குழாயில் வந்த தண்ணீரில் கூட புழுக்கள் இருந்தது. அதனால் நிச்சயமாக குளோரின் கலக்கப்படவில்லை என்றே கூறலாம்.
தலைவர்: உடனடியாக குடிநீரில் புழுக்கள் கலந்தது குறித்த பணிகளை ஆய்வு செய்யுங்கள்.
இதனிடையில் அதிமுக கவுன்சிலர் முத்துப்பாண்டி, வீரபாகு, முத்துகிருஷ்ணன் ஆகியோர் மினிட்டில் கல்லூரி அமைத்திட அனுமதி தந்த முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை பதிவு செய்து விடுங்கள் என மீண்டும் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து நகராட்சி தலைவர் கட்டாயமாக தீர்மானம் நிறைவேற்றித்தரப்படும். பின்னர் அதற்கான நகல் உங்களுக்கு வழங்கப்படும் என்றார். இதனை தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் பலமாக மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த தீர்மானத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும் ஆதரவு தெரிவிப்பதாக கவுன்சிலர் லத்தீப் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக