கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 26 ஏப்ரல், 2012

கடையநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைய வாய்ப்பு

கடையநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே அரசு கலைக்கல்லூரி அமைக்க வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.


கடையநல்லூர் தொகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மேல்நிலை கல்வி முடித்த பின், உயர்கல்வி கற்க வசதியாக கடையநல்லூரில் அரசு கல்லூரி கொண்டு வர வேண்டுமென பல ஆண்டுகளாக இத்தொகுதி மக்களும்,
சமூக நல அமைப்புகள், சுழற்கழகம், அரிமா சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.


ஆனால் அரசுக் கல்லூரி என்பது வெறும் கனவாகவே இருந்து வந்தது. இதன் காரணமாக இந்தப் பகுதி மாணவ, மாணவிகள் வெளியூரிலுள்ள கல்லூரிகளுக்குச் சென்று கல்லூரிப் படிப்பைத் தொடர வேண்டிய நிலை இருந்து வந்தது.


உள்ளூரில் கல்லூரி இல்லாத நிலையில் ஏராளமான மாணவர்கள் குறிப்பாக மாணவிகள் தங்கள் கல்லூரிக் கல்வியை மறக்க வேண்டிய நிர்பந்தமும் இருந்து வந்தது. இந்நிலையில், கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி.செந்தூர்பாண்டியன், தான் வென்றால் கடையநல்லூரில் அரசுக் கல்லூரி கொண்டு வருவேன் என உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் இவ்வாண்டு நிதிநிலை அறிக்கையில் கடையநல்லூர் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்: இதற்கிடையே, மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில்,கடையநல்லூர் மின்வாரிய அலுவலகம் அருகேயுள்ள, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைந்துள்ள பகுதியில் அரசு கல்லூரி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.


இந்த நிலையில் இந்த இடத்தை கதர், கிராமத் தொழில்கள் துறை அமைச்ச ரும், தொகுதி உறுப்பினருமான பி.செந்தூர்பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
அமைச்சருடன் தொகுதிச் செயலர் பொய்கை மாரியப்பன், நகரச் செயலர்
கிட்டுராஜா, ஒன்றியச் செயலர் முத்துப்பாண்டி, அச்சன்புதூர் பேரூராட்சித் தலைவர் சுசீகரன், மாவட்ட மாணவரணிச் செயலர் அருள்ராஜ், மாவட்ட மருத்துவரணித் தலைவர் டாக்டர் சஞ்சீவி, மாவட்டப் பிரதிநிதி பெருமையாப்பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர் முத்துக்கிருஷ்ணன், நகர எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் முருகன், நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் மைதீன், துணைச் செயலர் சரவணன் உள்ளிட்டோர் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக