கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 2 ஏப்ரல், 2012

கடையநல்லூர் நகராட்சியில் தனியார் துப்புரவு பணிக்கான கான்ட்ராக்டை நீட்டிக்க கோரிக்கை


கடையநல்லூர் நகராட்சி பகுதியில் தனியார் துப்புரவு பணிக்கான கான்ட்ராக்டர் பணி நிறுத்தப்பட்டு விட்ட நிலையில் சுகாதார பணிகளில் முடக்கம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காலதாமதமின்றி புதிதாக பணியாளர்கள் நியமனம் செய்யும் வரை தனியாருக்கான கான்ட்ராக்ட் காலத்தை காலநீடிப்பு செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நகராட்சியை பொறுத்தவரை 249 நபர்களுக்கு மூன்று துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டுமென்ற அடிப்படை இருந்தபோதிலும் தற்போது இந்நகராட்சியை பொறுத்தவரை 100 துப்புரவு பணியாளர்களுக்கு 88 பேர் தான் பணியில் உள்ளனர். 12 துப்புரவு பணியாளர்களுக்கான பணியிடம் தொடர்ந்து பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளது.

பணியாற்றும் 88 பேரில் மற்ற பிரிவுகளுக்கு சுமார் 10 பேர் வரை அனுப்பட்டு வருவதால் சுகாதார பணிகளில் 78 பேர் தான் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கடையநல்லூர் நகராட்சியில் 45 ஆயிரத்து 456 ஆண்களும், 44 ஆயிரத்து 888 பெண்களும் மொத்தம் 90 ஆயிரத்து 343 பேர் குடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 33 வார்டுகளை கொண்ட நகராட்சியில் அங்கீகரிக்கப்பட்ட குடிசை பகுதிகளில் 24 ஆயிரத்து 528 பேர் வசித்து வருகின்றனர்.

இந்நகராட்சியை பொறுத்தவரை கழிவுநீர் கால்வாய்களின் மொத்த நீளமாக 99.20 கி.மீ. கணக்கிடப்பட்டுள்ளது. கட்டண கழிப்பிடங்கள் 5, உரக்கிடங்குககள் 2, ஆடறுப்பு மனைகள் ஒன்றும் அமைந்துள்ள நிலையில் நகராட்சியில் ரோடுகளின் மொத்த நீளம் 67.139 கி.மீ.தூரமாகும். 33 வார்டுகளில் 229 தெருக்கள் அமைந்துள்ள நிலையில் சுகாதார பணிகளுக்கு 33 தள்ளுவண்டிகளும், 2 மினிலாரிகளும், டிராக்டர், டம்பர் பிளேசர் ஆகியன தலா ஒன்றும், டம்பர் பிளேசர் தொட்டிகள் 48 எண்ணம் இப்பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையில் அதிகளவு பரப்பளவு கொண்ட நகராட்சியில் சுகாதார பணிகள் தடையின்றி மேற்கொள்ளும் வகையில் குறிப்பிட்ட சில வார்டுகள் தனியாருக்கு கான்ட்ராக்டர் மூலம் விடப்பட்டன. நகராட்சியில் 21வது வார்டிலிருந்து 31வது வார்டு வரையிலும் மட்டுமின்றி கிருஷ்ணாபுரத்திலிருந்து மின்வாரிய அலுவலகம் வரை அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும் துப்புரவு பணிகளை தனியார் மூலம் மேற்கொள்வதற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் சுமார் 7 ஆண்டுகளாக குறிப்பிட்ட வார்டு, தேசியநெடுஞ்சாலைகளில் தனியார் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனிடையில் கடையநல்லூர் நகராட்சியில் காலியாக கிடக்கும் துப்புரவு பணியாளர் பணியிடங்களை தாமதமின்றி நிறைவேற்றிட வேண்டுமென தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதனிடையில் கடந்த 31ம் தேதியோடு நகராட்சியில் தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த தனியார் துப்புரவு பணி முடிவடைந்து விட்டது. இதனை தொடர்ந்து 33 வார்டுகளிலும் தற்போது பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை கொண்டுதான் பணிகள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. காலியாக கிடக்கும் பணியாளர் இடங்களை நிரப்பிட நகராட்சி நிர்வாகம் துரிதமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இருந்தபோதிலும் தமிழகத்தில் அதிகமான அளவில் மர்ம காய்ச்சல் பாதித்த பகுதியாக கடையநல்லூர் நகராட்சி தொடர்ந்து காணப்பட்டு வரும் நிலையில் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் புதிதாக துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்யும் வரை சுகாதார பணிகளை குறிப்பிட்ட வார்டுகளில் மேற்கொள்ள தனியார் மூலம் கான்ட்ராக்ட் விடுவதற்கான காலக்கெடுவினை நீடிக்க செய்ய வேண்டுமென நகராட்சி பொதுமக்கள் சார்பிலும், முக்கிய அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக