கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 26 ஏப்ரல், 2012

கடையநல்லூரை உலுக்கும் மர்ம காய்ச்சல்-5 வயது சிறுவன் பலி

கடையநல்லூர் பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலியானான்.

கடையநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்த மர்ம காய்ச்சலுக்கு கடந்த வாரம் காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவரது மனைவி ரஹிமாள் பலியானார்.

ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு கடையநல்லூர் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு 35க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் கடந்த வாரம் ரஹிமாள் பலியானது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லேசாக தலை வலித்தாலோ, உடம்பு சுட்டாலோ மக்கள் டென்ஷன் ஆகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் ரத்தத்தில் பிளேட்லெட்ஸ் என்னும் அணுக்கள் குறைவதாக கண்டறியப்பட்டது.

அதனால் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் உள்ள பிளேட்லெட்ஸ் பிரித்தெடுக்கப்பட்டு ஏற்ற வேண்டு்ம். இதற்காக மக்கள் நெல்லை, மதுரைக்கு தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

கடையநல்லூர் மருத்துவமனையில் இந்த வசதியை ஏற்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தியபோதிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மாறாக கடையநல்லூர் மருத்துவமனையில் மருத்துவ சேவை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக மக்கள் குமுறுகின்றனர்.

8 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய மருத்துவமனையில் 3 டாக்டர்கள் தான் பணிபுரிகின்றனர். அவர்களும் சரிவர பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் பல ஆயிரம் ரூபாய் செலவழித்து தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே ஒரு பெண் பலியான நிலையில் நேற்று மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் ஒருவன் பலியானான். மேலக்கடையநல்லூர் பவுண்ட்த் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பவரின் மகன் சந்துரு (5). கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடையநல்லூர், தென்காசி, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறறும் சிகிச்சை பலனில்லாமல் நேற்று காலை பலியானான்.

சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு பலியானது பொதுமக்களிடையே குறிப்பாக தாய்மார்களிடையே மிகுந்த பதட்டத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. சாதாரண தலைவலி, காய்ச்ச்ல கூட மர்ம காய்ச்சலாக இருக்குமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.

பொதுமக்களிடையே பீதியும், பதட்டமும் நிலவிய போதிலும் சுகாதாரத் துறையிடமோ, நகராட்சி நிர்வாகத்திடமோ எந்தவித சலனமும் இல்லை. அவர்கள் எப்போதும் போல அடிப்படை ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நகராட்சி பகுதியில் நிலவி வரும் சுகாதார சீர்கேட்டை முழுமையாக போக்கவோ, மக்களின் நலனிற்காக சிறப்பு மருத்துவ முகாம் அமைப்பதற்கோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 3ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. அதே போல மர்ம காய்ச்சலை போக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக