கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 26 ஏப்ரல், 2012

கடையநல்லூரில் விரைவில் அரசு கலைக்கல்லூரி

கடையநல்லூரில் அரசு கலைக்கல்லூரி இந்தாண்டு முதல் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமந்தாபுரம் கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தினை நேற்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கண்காணிப்பாளர் பார்வையிட்டார்.

கடையநல்லூர் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுமென சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை தொடர்ந்து கடையநல்லூரில் கல்லூரி இயங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரி துவங்கிட உத்தரவிட்டிருப்பதால் தற்காலிகமாக வாடகை கட்டடத்தில் கல்லூரி இயங்கிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


இதனிடையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அலுவலக கண்காணிப்பாளர் கலாதேவி, என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் சுவாமிதாஸ் ஆகியோர் நேற்று காலை கடையநல்லூரில் கலைக்கல்லூரி அமைவதற்கான பகுதிகளை பார்வையிட்டனர். மதுரை - செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை குமந்தாபுரத்தில் செயல்பட்டு வரும் கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகம் உட்பட 3 இடங்களை பல்கலைக்கழக அதிகாரிகள் பார்வையிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த 3 இடங்கள் பட்டியலும் பல்கலைக்கழக பதிவாளரின் பரிந்துரைக்கு கொண்டு செல்லப்பட்டு அவற்றில் ஒரு இடம் தேர்வு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தபோதிலும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடப்பாண்டு முதல் செயல்பட உள்ள கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பல்கலைக் கழக அதிகாரிகளுடன் கடையநல்லூர் தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், மாவட்ட பிரதிநிதி சொக்கம்பட்டி பெருமையாபாண்டியன், கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் டாக்டர் ராஜா முத்துக்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக