கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 12 ஜூலை, 2012

குற்றாலத்தில் சீசனையொட்டி அரியவகை பழங்கள் விற்பனைக்கு குவிப்பு: சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்



குற்றாலத்தில் சீசனையொட்டி குளிர் பிரதேசங்களில் மட்டுமே விளையும் அரியவகை பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
 
குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் சீசன் காலங்களாகும். இக்காலங்களில் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்து செல்வர்.
 
அவ்வாறு குளிக்க வருபர்கள் குற்றாலம் பகுதியில் விற்பனை செய்யப்படும் அரியவகை பழங்களை வாங்கி செல்லதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக வழக்கமாக கிடைக்கும் ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழங்களை தவிர குளிர்பிரதேசங்களில் மட்டுமே விளையும் அரிய வகை பழங்களான மங்குஸ்தான்,ரம்ப்டான், துரியன், முட்டை பழம், மனோரஞ்சிதம் பழம், வால்பேரி உள்ளிட்ட பழ வகைகள் குற்றாலத்தில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
 
துரியான் மற்றும் மங்குஸ்தான் பழங்கள் கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடியவை ஆகும்.
 
குற்றாலம், தெற்குமலை, ஊட்டி, பள்ளியாறு மற்றும் கேரளாவில் சில பகுதிகளில் மட்டுமே மங்குஸ்தான் பழம் விளைகின்றன. மலட்டுத்தன்மையை போக்கும் தன்மை உடையதாக கருதப்படும் துரியன் பழங்களும் குற்றாலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
 
இந்த பழம் ரூ.500 முதல் 1000வரையும், குளிர்ச்சியை ஏற்படுத்தும் ரம்டான் 150 லிருந்து 400 வரையிலும், மங்குஸ்தான் 320-க்கும், முட்டைபழம் 150-க்கும், பிளம்ஸ் 120-க்கும், சப்போட்டா 30-க்கும், பேரிக்காய் 80-க்கும், மாதுளை 150-க்கும், ஸ்டார்புரூட் 120 ரூபாய்க்கும், கொய்யா, நெல்லி 40-க்கும், மாம்பழம் தரத்திற்கு ஏற்றாற்போல் 20 ரூபாயில் இருந்து, 150 வரையிலும், விற்பனை செய்யப்படுகிறது.
 
இது தவிர குற்றாலத்தை அடுத்து மேலகரம் பகுதியில் இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுவைமிகுந்த மாம்பழங்களான பங்கனபள்ளி, இமாம்பசந்த், நீலம் உள்ளிட்ட சுவை மிகுந்த மாம்பழங்கள் இயற்கையாகவே பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக