கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 4 ஜூலை, 2012

கடையநல்லூரில் திடீர் வாந்த பேதி அரசு ஆஸ்பத்தரியில் 50 பேர் அனுமதி

கடையநல்லூரில் ஏற்பட்ட திடீர் வாந்தி பேதியால் நேற்று 50க்கும் மேற்பட்டோர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த மூன்று மாத காலமாக பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த டெங்கு காய்ச்சல், கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த சில தினங்களாக வாந்திபேதி காணப்பட்டு வருகிறது. நகராட்சி பகுதியில் காணப்படும் சுகாதாரமற்ற நிலை, குடிநீரில் சாக்கடை கலந்து வரும் விநியோகம் போன்றவற்றால் தொற்றுநோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலக்கடையநல்லூர், மாவடிக்கால், கிருஷ்ணாபுரம், குமந்தாபுரம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகத்தின் போது சாக்கடை கலந்த தண்ணீர் விநியோகம் செய்வதாக கூறப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் பொதுமக்களின் புகாரினை நகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொள்ளாததால் கடையநல்லூர் பகுதியில் வாந்தி பேதியால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வெளிநோயாளிகளாக வாந்திபேதிக்கு சிகிச்சை பெற்று சென்ற நிலையில் கிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோயில் தெரு கிருஷ்ணம்மாள்(40), மிட்டாதாரர் தெரு கோவிந்தம்மாள்(50), வடக்கு தெரு ஜீவா(38), வெள்ளத்தாய்(40), மும்தாஜ்(48), காந்தாரி(28), கல்யாணி(58), சுப்பம்மாள்(50), கிருஷ்ணவேணி(21), மாலதி(65), சுதி(15), சுப்புலட்சுமி(30) கடையநல்லூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆண்கள் வார்டில் கிருஷ்ணாபுரம் துரைப்பாண்டி(29), கார்த்திகேயன்(17), மாசாணம்(53), குமார்(30), சரவணன்(40) ஆகியோர் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து வாந்திபேதியால் நேற்று மாலை வரை ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சென்றவண்ணம் இருந்தனர். இதனிடையே கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம், மேலக்கடையநல்லூர், பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் தனியார் ஆஸ்பத்திரிகளில் வாந்திபேதி பாதிப்பால் சிகிச்சை பெற்று சென்றதாக கூறப்படுகிறது. திடீரென கடையநல்லூர் நகராட்சி பகுதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏற்பட்ட வாந்திபேதி பாதிப்பால் ஏராளமானோர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். டெங்கு, மலேரியாவை தொடர்ந்து, வாந்திபேதி என கடையநல்லூர் நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதி பொதுமக்கள் தொடர் நோயால் அவதிப்பட்டு வருவதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சமும், கவலையும் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக