கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 20 ஜூலை, 2012

துபாயில் ரமலான் நோன்பு துவங்கியது- நாளை தமிழகத்தில் தொடக்கம்


துபாயில் 20.07.2012 வெள்ளிக்கிழமை முதல் ரமலான் நோன்பு துவங்கியது. இதனையொட்டி தராவீஹ் என்னும் சிறப்பு இரவுத் தொழுகை துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா, ஃபுஜைரா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்றது.
தமிழகத்திலும் இந்தியாவின் இதர பகுதிகளிலும் நாளை ரமலான் நோன்பு தொடங்குகிறது.
துபாய் தேரா பகுதியில் உள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் எனும் குவைத் பள்ளி, கோட்டைப் பள்ளி, வாழைமரத்துப் பள்ளி, அஸ்கான் டி பிளாக் சமூகக்கூடத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்புத் தொழுகையில் பங்கேற்று ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
துபாயில் இவ்வாண்டு நோன்பின் நேரம் காலை 4.10 மணி முதல் மாலை 7.11 வரையாகும். இவ்வாண்டு கடும் கோடையில் நோன்பு வந்துள்ளது. இதன் காரணமாக சுமார் 15 மணி நேரம் நோன்பினைக் கடைப்பிடிக்க வேண்டும். இதனால் வெயிலில் வேலை செய்வோர் மிகுந்த சிரமத்துடன் நோன்பினைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.
எனினும் அலுவலக பணி நேரம் எட்டு மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரமாக இருக்கும். பெரும்பாலான அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும்.
நோன்பு திறப்பதற்காக பல்வேறு பள்ளிவாசல்களிலும் பழச்சாறு, பேரிச்சம்பழம், பிரியாணி உள்ளிட்டவற்றுடன் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துபாய் ஈமான் அமைப்பு சுவைமிக்க தமிழகத்து பாரம்பர்ய நோன்புக் கஞ்சியினை தேரா பகுதியில் உள்ள குவைத் பள்ளியில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தொழிலாளர் முகாம்களில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமல்லாது கத்தார், சவுதி அரேபியா, குவைத், எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளிலும் வெள்ளிக்கிழமை முதல் ரமலான் நோன்பு துவங்கியுள்ளது.
எனினும் ஓமன் நாட்டில் சனிக்கிழமை முதல் ரமலான் நோன்பு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக