கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 17 ஜூலை, 2012

5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே மீண்டும் கிரிக்கெட்



5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே மீண்டும் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் 3 ஒருநாள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகள் நடத்தப்படுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடைசியாக 2007-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2008-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடர் அடியோடு நிறுத்தப்பட்டது.

2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பாகிஸ்தான் சென்று விளையாடிய இலங்கை அணியினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சுடுதல் நடத்தியதால் அதன் பின்னர் எல்லா அணிகளும் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்டன. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் அணி தனது நிதி நிலையை சமாளிக்க பொதுவான இடத்தில் மற்ற நாட்டு அணிகளுடன் விளையாடியது. ஆனால் இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதிக்கவில்லை.

உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் சந்தித்தன.

இந்த ஆண்டு தொடக்கம் முதலே இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே மீண்டும் போட்டி தொடர் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பகீரத முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இடையே பல முறை பேச்சுவார்த்தை நடந்தது. இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் அக்டோபரில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த சியல்கோட் அணி பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டியை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக