கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 12 ஜூலை, 2012

தகுதி தேர்வு எழுத 1 1/2 மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல்


ஆசிரியர் தகுதி தேர்வு இன்று நடந்தது. காலையில் நடந்த முதல் தாள் தேர்வு மிகவும் கடினமாக இருந்துள்ளது.கேள்விகளுக்கு விடை அளிக்க கால அவகாசம் இல்லாததால் முழுமையாக எழுத முடியவில்லை என்று ஆசிரியர்கள் மனம் குமுறினர்.
 
இந்த தேர்வில் 150 கேள்விகளுக்கு 90 நிமிடங்கள் கொடுக்கப்பட்டிருந்தது.   கணித சம்பந்தமான கேள்விகளுக்கு அதற்கான விடையை கண்டுபிடிக்க ஒரு கேள்விக்கு 20 நிமிடம் ஆனது. இதனால் மற்ற கேள்விகளுக்கு விடை அளிக்கவில்லை. பெரும்பாலானவர்கள் விடை எழுத நேரம் இல்லாமல் கொடுத்து வந்து விட்டனர்.
 
தேர்வு எழுதி விட்டு பல ஆசிரியர்கள் சோகத்துடன் வெளியே வந்தனர்.   அம்பத்தூரைச் சேர்ந்த ஆசிரியர் ரவிக்குமார் கூறும் போது, இந்த தேர்வுக்கு 90 நிமிடங்கள் போதாது. 3 மணி நேரம் தேவைப்படும். அனைத்து கேள்விகளுமே விடையைப் பார்த்தவுடன் எழுதுவது போல் அமைய வில்லை. செயல்முறை வடிவில்தான் விடையை கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. மனக்கணக்கில் அதை தெரிந்து கொள்ள முடியாது.
 
இந்ததேர்வில் வெற்றி பெறுவது கடினம்தான். பொரும்பாலான கேள்விகளுக்கு விடை தெரிந்திருந்தும் அதற்கு பதில் அளிக்க நேரம் இல்லாததால் விட்டு விட்டேன். ஆசிரியர் தேர்வு வாரியம் சரியான முறையில் நேரத்தை கணக்கீடு செய்யாமல் கேள்வித்தாளை தயாரித்து இருக்கிறார்கள்.
 
இது தேர்வு எழுதிய அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த தேர்வுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும். அல்லது இந்த தேர்வை ரத்து செய்து விட்டு வேறு தேர்வு நடத்த வேண்டும் என்றார்.
 
நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அமுதா கூறும்போது, தேர்வு நேரத்தை சரியாக கணக்கிடாமல் தேர்வை நடத்தியுள்ளனர். 5-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு 10-ம் வகுப்பு பாடத்திற்குரிய கேள்விகளை கேட்டுள்ளனர். குறைவான பாடத் திட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை.
 
பட்டய ஆசிரியர் பயிற்சி பெற்ற எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான கேள்விகளை கேட்டுள்ளனர். இது போன்ற குழப்பங்களாலும் ஆசிரியர் தேர்வு வாரியம் கவனக்குறைவாக இந்த தேர்வை நடத்தியுள்ளது. 
 
இதனால் பாதிக்கப்படுவது ஆசிரியர்கள்தான். நாங்கள் இத்தனை மாதங்களாக கஷ்டப்பட்டு படித்ததெல்லாம் வீணாகி விட்டது. எனவே இந்த தேர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சரியான கால அளவில் கேள்விகள் தயாரிக்கப்பட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக