கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 31 ஜூலை, 2012

கடையநல்லூர் மின்கோட்டத்தில் நாளை முதல் மின்தடை நேரம் மாற்றம்

கடையநல்லூர் மின்கோட்டத்தில் நாளை (1ம் தேதி) முதல் மின்தடை சுழற்சி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்கோட்ட செயற்பொறியாளர் நடராஜன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

""கடையநல்லூர் மின்கோட்டத்தில் உள்ள கடையநல்லூர், புளியங்குடி, வீரசிகாமணி, நாரணபுரம், விஸ்வநாதப்பேரி உபமின் நிலையங்களில் மின்தடை சுழற்சி நேரம் நாளை (1ம் தேதி) முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கடையநல்லூர் உபமின் நிலையத்தில் டவுன்-1, 2 பீடர்களில் காலை 9-12, கடையநல்லூர் ரூரல் மற்றும் நயினாரகரம் பீடர்களில் 12-3, மில் பீடரில் மதியம் 12-3, கம்பனேரி பீடரில் காலை 9-12 மின்தடை இருக்கும்.

புளியங்குடி உபமின் நிலையத்தில் டவுன் பீடரில் மதியம் 12-3, சொக்கம்பட்டி பீடரில் மாலை 3-6, வீரசிகாமணி உபமின் நிலையத்தில் சேர்ந்தமரம் பீடரில் மாலை 3-6, ஊத்தான்குளம் பீடரில் மதியம் 12-3, வலசை பீடரில் காலை 9-12, நாரணபுரம் உபமின் நிலையத்தில் சிந்தாமணி பீடரில் காலை 9-12, நெற்கட்டும்செவல் பீடரில் காலை 6-9, ராயகிரி பீடரில் மாலை 12-3, விஸ்வநாதப்பேரி உபமின் நிலையத்தில் சிவகிரி, வழிவழிகுளம், விஸ்வநாதப்பேரி ஆகிய பீடர்களில் காலை 6-9, தேவிப்பட்டிணம் பீடரில் மதியம் 12-3 மின்தடை சுழற்சி நேரம் இருக்கும்'' என மின்கோட்ட செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

புதன், 25 ஜூலை, 2012

கடையநல்லூரில் காங்.,கொண்டாட்டம்

ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வு செய்யப்பட்டதை காங்., கட்சியினர் கடையநல்லூரில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றதையடுத்து கடையநல்லூரில் காங்., கட்சி சார்பில் பள்ளிவாசல் முன்பு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ராகுல் நற்பணி மன்ற தென்மண்டல பொறுப்பாளர் கணேசன் தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகவேல், முன்னாள் நகர காங்.,தலைவர்கள் பெரியசாமி, சங்கரன், ராகுல் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் குமாரசாமிபாண்டியன், நகர காங்., செயலாளர்கள் ரவி, பட்டு மற்றும் கருப்பசாமி, இஸ்மாயில், மைதீன்பிச்சை, லத்தீப், ரத்தினம் ஆசாரி, சிவபெருமாள், சுப்பையாபாண்டியன், தங்கராஜ், மக்தூம் உட்பட காங்., கட்சியினர் கலந்து கொண்டனர்.

* ஆய்க்குடியில் இளைஞர் காங்.,தலைவர் கார்வின் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. கிராம காங்.,கமிட்டி தலைவர் தாசன், முன்னாள் கவுன்சிலர் ராமசாமி, இளைஞர் காங்., செயலாளர் சாலமன் அந்தோணி, சந்தியாகப்பன் மற்றும் காங்., கட்சியினர் கலந்து கொண்டனர்.

கடையநல்லூரில் 28ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கடையநல்லூரில் வரும் 28ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.

கடையநல்லூர் மங்களாபுரம் ருக்மணி கல்வி வளாகத்தில் வரும் 28ம் தேதி இண்டர்நேஷனல் மனித உரிமைகள் கழகம் சார்பில் கல்வி பற்றிய விழிப்புணர்வு, சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. மாநில தலைவர் எட்வர்ட் ராஜன் தலைமை வகிக்கிறார். மாநில அமைப்பாளர் மணிகண்டன் முன்னிலை வகிக்கிறார்.

மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் அருண்மொழி, தென்காசி ஆர்.டி.ஓ.,ராஜகிருபாகரன், தாசில்தார் தேவர்பிரான், சிவில் சப்ளை தாசில்தார் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் சபாபதி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிரேஸ் சுலக்சனா ரத்தினாவதி, சுகாதார பணிகளின் துணை இயக்குநர்கள் டாக்டர் கிருஷ்ணலீலா, டாக்டர் உமா சிறப்புரையாற்றுகின்றனர்.

முன்னாள் யூனியன் தலைவர் தீபக் நன்றி கூறுகிறார்.

கடையநல்லூர் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

கடையநல்லூர் கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

விழாவிற்கு கடையநல்லூர் கிளாசிக் பிரஸ் உரிமையாளர் கலந்தர் மஸ்தான் தலைமை வகித்தார். தென்மாவட்ட சினிமா லொக்கேஷன் மேலாளர் சொக்கம்பட்டி சரவணக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கிங் யுனிவர்ஸ் பள்ளி தாளாளர் ராஜாமுத்துக்குமார் வரவேற்று, இயற்கை வளம் குறித்தும், பசுமை வளம் குறித்தும் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். துணை முதல்வர் முத்துகிருஷ்ணவேணி நன்றி கூறினார்.

செவ்வாய், 24 ஜூலை, 2012

தமிழகத்தில் ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை-முதல்வருக்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் பாராட்டு


தமிழகத்தில் அரசு பணிகளை விரைவாக முடிக்க அரசு காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டதன் மூலம், சுமார் ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இதையடுத்து அந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதாவை, இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஒய்.ஜவஹர் அலி பாராட்டி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க பாடுபட்டு வரும் முதல்வர் ஜெயலலிதா அதற்காக தினமும் ஒரு மக்கள் நலத்திட்டத்தை அறிவித்து வருகிறார்.
தமிழக அரசு ஊழியர்கள் முழுமையாக செயல்பட்டால் தான் எந்த ஒரு திட்டத்தையும் விரைவாக நிறைவேற்ற முடியும் என்ற காரணத்தால் அரசு பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு துறையிலும் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். விரைவில் தமிழகத்தை மிகச்சிறந்த மாநிலமாக்கிவிடுவார் என்பதில் சந்தேகமில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 20 ஜூலை, 2012

துபாயில் ரமலான் நோன்பு துவங்கியது- நாளை தமிழகத்தில் தொடக்கம்


துபாயில் 20.07.2012 வெள்ளிக்கிழமை முதல் ரமலான் நோன்பு துவங்கியது. இதனையொட்டி தராவீஹ் என்னும் சிறப்பு இரவுத் தொழுகை துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா, ஃபுஜைரா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்றது.
தமிழகத்திலும் இந்தியாவின் இதர பகுதிகளிலும் நாளை ரமலான் நோன்பு தொடங்குகிறது.
துபாய் தேரா பகுதியில் உள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் எனும் குவைத் பள்ளி, கோட்டைப் பள்ளி, வாழைமரத்துப் பள்ளி, அஸ்கான் டி பிளாக் சமூகக்கூடத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்புத் தொழுகையில் பங்கேற்று ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
துபாயில் இவ்வாண்டு நோன்பின் நேரம் காலை 4.10 மணி முதல் மாலை 7.11 வரையாகும். இவ்வாண்டு கடும் கோடையில் நோன்பு வந்துள்ளது. இதன் காரணமாக சுமார் 15 மணி நேரம் நோன்பினைக் கடைப்பிடிக்க வேண்டும். இதனால் வெயிலில் வேலை செய்வோர் மிகுந்த சிரமத்துடன் நோன்பினைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.
எனினும் அலுவலக பணி நேரம் எட்டு மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரமாக இருக்கும். பெரும்பாலான அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும்.
நோன்பு திறப்பதற்காக பல்வேறு பள்ளிவாசல்களிலும் பழச்சாறு, பேரிச்சம்பழம், பிரியாணி உள்ளிட்டவற்றுடன் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துபாய் ஈமான் அமைப்பு சுவைமிக்க தமிழகத்து பாரம்பர்ய நோன்புக் கஞ்சியினை தேரா பகுதியில் உள்ள குவைத் பள்ளியில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தொழிலாளர் முகாம்களில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமல்லாது கத்தார், சவுதி அரேபியா, குவைத், எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளிலும் வெள்ளிக்கிழமை முதல் ரமலான் நோன்பு துவங்கியுள்ளது.
எனினும் ஓமன் நாட்டில் சனிக்கிழமை முதல் ரமலான் நோன்பு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 17 ஜூலை, 2012

ஹஜ்ஜுப் பயணிகளுக்கு உதவும் சாப்ட்வேர் - ஜெர்மன் அறிஞர் கண்டுபிடிப்பு


முஸ்லிம்களின் புனித கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜின் போது, அந்த புனிதக் கடமைகளை வரிசைக்கிரமமாக நினைவூட்டவும்,  மக்கா நகரிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் வழி தொலைந்து போகும் புனிதப் பயணிகளுக்கு உதவும் வகையிலும் புதிய திறன்பேசி பயன்பாட்டு நிரலி (Smart Phone Application) ஒன்றை ஜெர்மானிய கணினி அறிஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.


ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் பல்கலைகழகத்தில் கணிப்பொறி அறிவியலில் பட்டம் பெற்ற ஹபீபுர்ரஹ்மான் தஸ்தகீரி என்னும் அந்த  இளம் அறிஞர் இரு நாள்களுக்கு முன்
"The Global Postநாளிதழுக்கு அளித்த செய்தியில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். "ஹஜ்ஜுக் காலத்தில் யாத்ரிகர்களுக்கு வழியறிய உதவுவதாகவும், மார்க்கக் கடமைகளை நினைவூட்டக் கூடியதாகவும் கருவியொன்று வடிவமைக்க விரும்பினேன்" என்றார் அவர். [ஆங்கிலத்தில் இச்செய்தியை வாசிக்க: http://www.satyamargam.com/1950]

 


"கடந்த 2006 ஆம் ஆண்டில் குடும்பத்துடன் உம்ரா செய்ய வாய்ப்பு கிடைத்த போதிலிருந்து இது பற்றி சிந்தித்து வந்துள்ளேன்".

தனது பயன்பாட்டு நிரலிக்கு "அமீர்" என்று பெயர் சூட்டியுள்ளார் ஹபீபுர் ரஹ்மான். பொதுவாக, ஒரு பயணத்தில், இயக்கத்தில் தலைமைத் தாங்கிச் செல்பவருக்கு அரபுமொழியில் 'அமீர்' என்று கூறுவார்கள். (இந்த நிரலிக்கான சுட்டி: http://itunes.apple.com/tw/app/amir-personal-hajj-assistant/id473935680?mt=8)


உம்ரா, ஹஜ் ஆகிய புனிதக் கிரியைகளின் போது, தங்கியிருக்கும் இடம் திரும்புவதில் புனிதப் பயணிகள் படும் சிரமத்தைக் கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஹபீபுர் ரஹ்மான், "நாங்கள் எங்களை நன்கு தயார்படுத்திக்கொண்டிருந்தோம்; அப்படியிருந்தும் தங்கியிருந்த  இடத்தை அடைவதில் சிரமம் கண்டோம்" என்று நினைவு கூர்ந்தார்.

ஆஃப்கானிஸ்தானத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஹபீபுர் ரஹ்மான், பெற்றோர் தம் ஜெர்மானிய குடியமர்வுக்குப் பின்னர் மெய்ன்ஸ் நகரில் பிறந்தவர்.

அமீர் என்கிற இப்புதிய நிரலியின் மூலம், கலந்துரையாடலாக ஹஜ்ஜு, மற்றும் உம்ரா கிரியைகளின் சரிபார்ப்புப் பட்டியலையும்  காணமுடியும்.



 

இரண்டு வருட கால ஆய்வின் முடிவின் இந்நிரலியை தயாரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஹபீபுர் ரஹ்மான், தன் ஆய்வில் ஆஸ்திரேலிய முஸ்லிம் அறிஞரும், ஹஜ்ஜு பற்றி நிறைய நூல்கள் எழுதியுள்ளவருமான அபூமுனீர் இஸ்மாயில் டேவிட்ஸ் என்பவரை கலந்தோலோசித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு க்ளிக்கில் கிப்லா (தொழ வேண்டிய திசை) காட்டும் இன்னொரு நிரலியையும் இவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்புதிய பயன்பாட்டு நிரலி இஸ்லாமிய மார்க்க வகையிலும்  நுட்ப வகையிலும் பிழைகள் ஏதுமில்லாமல் அமைவதில் கவனம் செலுத்தியதாகக் கூறும் ஹபீபுர் ரஹ்மான் தனது கருவி தற்போது துருக்கி, ஆங்கிலம், அரபு, ஜெர்மன் மொழிகளில் செயலாற்றுகிறது என்பதையும் தெரிவித்துள்ளார். " மற்ற மொழிகளிலும் ஆய்வு தொடர்கிறது"

"ஆப்பிள் நிறுவனத்தின் ஐ ஃபோனில் இந்நிரலி செயல்படத் தக்கதாக உள்ளது" என்றும் 'ஆண்ட்ராய்ட்' வகை பேசிகளிலும் விரைவில் செயற்படத் தொடங்கும் என்றும் 32 வயதேயான ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அல்டிமேட் ஸ்டார் அஜீத் ரசிகர்கள் கவனத்திற்கு…

நன்றி http://onlysuperstar.com



நம் தளத்தில் பிற நடிகர்களை பற்றி / பிற படங்கள் பற்றி அரிதாகவே செய்திகள் வரும். அப்படி வந்தா அதுக்கு காரணமும் இருக்கும். ஆனா, இந்த நேரத்தில் இப்படி ஒரு பதிவை அளிப்பதை “அவசியம்” என்று கருதுகிறேன். அல்டிமேட் ஸ்டார் நமக்கு எப்பவுமே ஸ்பெஷலாச்சே. இது நிச்சயம் அவர் ரசிகர்களின் மனக்குறையை போக்கும் & ஒரு மிகப் பெரிய பூஸ்டாக அமையும்.

என்னைப் பொறுத்தவரை அஜீத் அவர்கள் மீது ஒரு நடிகன் என்பதை விட, ஒரு மனிதன் என்ற ரீதியில் நான் மிக மிக மதிப்பு வைத்துள்ளேன். அவரது துணிச்சலும், வெளிப்படைத் தன்மையையும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

சரி…. மேட்டருக்கு வர்றேன்….

சூப்பர் ஸ்டார் ரஜினியோட படங்கள் ஒவ்வொன்னும் மத்தவங்களுக்கு பிடிக்கிறது ரெண்டாவது பட்சம் இருக்கட்டும் அவர் ரசிகர்களுக்கு பிடிச்சிருந்தாலே போதும் – படம் ஹிட்டாயிடும். அப்படித் தான் அல்டிமேட் ஸ்டாரும். அவரோட ரசிகர்களுக்கு பிடிச்சிருந்தாலே போதும் விமர்சனங்களை எல்லாம் மீறி படம் ஹிட்டாயிடும் என்பதற்கு பில்லா 2 நல்ல உதாரணம்.

என் அனுபவத்தில் ரஜினி படங்களுக்கு அடுத்து இப்படி ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஒரு படத்துக்கு ஏற்பட்டதுன்னா அது பில்லா 2 தான். அதுக்கு காரணம் அஜீத் தான்.

இப்படி ஒரு பிரம்மாண்ட எதிர்பார்ப்போட ரிலீசான ஒரு படத்துக்கு மீடியா இப்படி கொத்துபரோட்டா மாதிரி விமர்சனங்கள் கொடுக்குதேன்னு ரசிகர்கள் ரொம்ப வருத்தத்துல இருக்காங்க. தல திருப்பதி எல்லாம் போய்ட்டு பாலாஜியை தரிசனம் பண்ணிட்டு வந்தாரே, அதுக்கு பிரயோஜனமே இல்லையா? இப்படி ஒரு நெகடிவ் ரிவ்யூவ்ஸ் வரணுமா? அப்படின்னு ரசிகர்கள் ரொம்ப மன உளைச்சல்ல இருக்காங்க.

அடடா… இந்த படத்துக்கு கிடைச்ச மாதிரி மீடியாவின் எதிர்மறை விமர்சனம் மாதிரி வேறு ஏதாவது ஒரு படத்துக்கு கிடைச்சிருந்தா, படம் ரெண்டாவது ஷோவே நொண்டியடிச்சு உக்காந்திருக்கும். ஆனா, அத்துனை எதிர்மறை விமர்சனத்தையும் மீறி, படம் ஹவுஸ்புல்லா போகுதுன்னா இது தான் ஸ்டார் பவர். (நேற்றைக்கு சென்னையில எந்த தியேட்டர்லயும் ஈவ்னிங் ஷோ டிக்கட் கிடைக்கலே. இன்னைக்கும் படம் ஹவுஸ்புல் தான்.).

நான் எதுக்கு இதை சொல்றேன்னா…. ஒரு நடிகனுக்கு விமர்சனத்தைஎல்லாம் மீறி படத்தை ஹிட் பண்ற CAPACITY இருக்கணும். அப்படிப் பட்டவங்க தான், அடுத்த ஸ்டேஜ்க்கு போகமுடியும். கடவுள் அந்த சக்தியை தலக்கு கொடுத்தாச்சு. வேகமா ஓடும்போது நாலு பேரு இழுத்துவிட்டு, கீழே தள்ளி, கழுத்தை மிதிச்சி, அதையெல்லாம் எதிர்த்து போராடி, ஓடி ஜெயிக்குறதுல தான் திரில்லே இருக்கு. அர்த்தமும் இருக்கு. அந்த தில் தலக்கு ரொம்பவே இருக்கு. தல ரசிகர்களுக்கு அதுக்கு மேலயும் இருக்கு.

மேலும், இப்படிப்பட்ட விமர்சனங்களை பாஸிட்டிவா எடுத்துக்கணும். மீடியா சுட்டிக்காட்டிய குறைகளை அஜீத் அவர்கள் தன்னோட அடுத்த படத்தில் சரி செய்து கொள்ளனும். அவ்ளோ தான். எனக்குத் தெரிந்து, மீடியாவில் அஜீத்துக்கு எதிரானவர்கள் என்று யாருமே கிடையாது. அதனால அஜீத் ரசிகர்கள் இது விஷயமா கவலைப் படவேண்டியதில்லே. எல்லாருக்குமே, அவர் நல்ல படங்கள் பண்ணனும், நல்ல ஹிட் கொடுக்கணும் என்பது தான் ஆசை. குறைகளை வெளிப்படையா சொன்னத் தானே அவர் அதை சரி செய்துக்க முடியும்?

குறைகளை யாருமே சுட்டிக் காட்டாம “ஆஹோ ஓஹோனு” புகழ்ந்தாங்கன்னு வைங்க, கடைசி வரைக்கும் ஒருத்தரு தன்னோட குறைகள் எதுன்னு தெரியாமலேயே வாழவேண்டியிருக்கும். அதை சரி செஞ்சிக்க வாய்ப்பு கிடைக்காமலே போய்டும்.

ரெண்டாவது, மீடியாவைப் பொறுத்தவரை அவர் கிட்டே இன்னமும் அதிகம் அதிகம் எதிர்பாக்குறாங்க. அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவது என்பது அத்துணை சுலபமல்ல. ஊடகத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி, அவர்கள் “சூப்பர்” என்று சொல்வது போல, ஒரு கமர்சியல் மாஸ் ஹீரோ படம் தருவது அத்துணை சுலபம் அல்ல. அவர்களை திருப்தி படுத்தவேண்டும், நல்ல விமர்சனங்கள் வரவேண்டும் என்று ஒரே கோணத்தில் சிந்தித்தால், படம் ஜனரஞ்சகமாக அமையாமல் போய்விடவும் வாய்ப்புண்டு. So, எல்லாரையும் திருப்தி படுத்துற மாதிரி படம் பண்றது சாதாரண விஷயம் இல்லே.

எனக்கு தெரிஞ்சி, 2007 இறுதியில வெளிவந்த ‘பில்லா 1′க்கு கூட இப்படித் தான் எழுதினாங்க. மங்காத்தாவையும் இப்படித் தான் சொன்னாங்க. அவங்கல்லாம் இப்படி சொல்றதை வெச்சு நானும் கூட படம் சரியில்லே போலிருக்குன்னு நினைச்சிட்டேன். ஆனா, உதயத்துல நான் படம் பார்க்குறேன்… அவ்ளோ சூப்பர் ரெஸ்பான்ஸ். படமும் நல்லா இருந்துச்சி.

உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் சொல்ல விரும்புறேன். ‘பாட்ஷா’ சூப்பர் ஸ்டாரோட கேரியர்ல எவ்ளோ பெரிய ஹிட், அது எவ்ளோ பெரிய முக்கியத்துவத்தை வகிக்குதுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். ரஜினி ரசிகர்கள் வட்டதையும் தாண்டி, அந்தப் படம் இன்னைக்கு வரைக்கும் பலரால் அந்தப் படம் ரசிக்கப்படுகிறது. ஆனா அந்தப் படத்துக்கு அப்போ விமர்சனம் எழுதின பத்திரிக்கை ஒன்னு என்ன எழுதிச்சு தெரியுமா? “இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு தன்னோட குரு கே.பாலச்சந்தர் பேரைக் காப்பத்தனும்னு எண்ணமே இல்லை போலிருக்கு!” அப்படின்னு. இது எப்படி இருக்கு? (எந்தப் பத்திரிக்கைன்னு நம்ம ரஜினி ரசிகர்கள் யாராவது கரெக்டா சொல்றாங்களான்னு பார்ப்போம்!)

அவ்ளோ ஏன், சூப்பர் ஸ்டாரோட ‘சந்திரமுகி’ எத்தனை நாள் ஓடிச்சி எவ்ளோ வசூல் சாதனை பண்ணிச்சுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். அந்தப் படத்துக்கு ஒரு பெரிய வெப்சைட் என்ன ரிவ்யூ எழுதிச்சி தெரியுமா? “Chandramukhi doesn’t suit Rajini” அப்படின்னு! ஹா… ஹா… ஹா…!!! (அதைப் பார்த்து காப்பியடிச்சு விமர்சனம் எழுதின வேற சில வெப்சைட்ஸ் எல்லாம் அப்புறம் தங்களோட விமர்சனங்களை சைலண்ட்டா மாத்திட்டாங்க!). இந்தியன் எக்ஸ்ப்ரஸ்ல சிவாஜிக்கு என்ன எழுதினாங்க தெரியுமா? “All Style; no substance” அப்படின்னு.

சரி… பில்லா 2 படம் உண்மையிலேயே எப்படித் தான் இருக்கு?

(ஹானஸ்ட்டா சொல்லனும்னா நான் இன்னமும் படம் பார்க்கலேங்க. ஆக்சுவலா நேத்தைக்கு நைட் போறதா இருந்திச்சு. ஆனா வேற ஒரு முக்கிய வேலைல மாட்டிகிட்டேன். போகமுடியலே. அடுத்த வாரம் போறேன்!) ஆனா, விமர்சனங்களை படிச்சது, படம் பார்த்த என் நண்பர்கள் & ரிலேட்டிவ்ஸ் சொன்னது, இதையெல்லாம் டாலி பண்ணி பார்க்கும்போது, விமர்சனங்கள்ள குத்தி குதறியிருக்குமளவிற்கு படம் இல்லை. நல்லா ரசிக்கும்படியே இருக்கு. என்று தான் தெரிகிறது.

ஒரு படம் சரியில்லேன்னா அதை அடுத்த ஷோ சீந்துவதற்க்கு கூட ஆள் இருக்கமாட்டாங்க. ஆனா எங்கே போனாலும் எங்கே பார்த்தாலும் பில்லா 2 பத்தி தான் பேச்சாயிருக்கு. இது ஒன்னே போதுமே… படத்தோட மெரிட் பத்தி சொல்றதுக்கு.

படத்தோட காமிரா, ஸ்டைலிஷ் சீன்ஸ், ஆக்ஷன், லொக்கேஷன், டயலாக்ஸ் இதெல்லாம் டாப்கிளாஸ்னு நேற்றைக்கு படம் பார்த்த ப்ரெண்ட் ஒருத்தரு எனக்கு நைட் ஃபோன் பண்ணி சொன்னாருங்க. சொஸைட்டியில பெரிய ஆள் அவர். ஆனால் ஒரு சராசரி சினிமா ரசிகர். ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா யார் படமாயிருந்தாலும் முதல் ரெண்டு நாள்ள போய்டுவார். மனசுக்குள்ளே எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாம, பிடிச்சிருந்தா பிடிச்சிருக்கு, இல்லேன்னா இல்லேன்னு சொல்லிடுவார். அதுக்கு காரணத்தையும் சொல்லிடுவார். அது கரெக்டாகவே இருக்கும். இதுரைக்கும் பல படங்களோட விமர்சனங்களை கரெக்ட்டா என்கிட்டே சொல்லியிருக்கிறார். படம் தேறும் தேறாதுன்னு க்ளியரா சொல்லிடுவார். பல நேரங்கள்ல இவர் சொன்னது கரெக்டாகியிருக்கு. மீடியா சொல்லியிருக்குற மாதிரி குறைகள் எதுவும் பெரிசா கண்ணுக்கு தெரியலே. படம் ஸ்டைலிஷா சூப்பரா இருக்கு சுந்தர் அப்படின்னு சர்டிபேகெட் கொடுத்திருக்கார்.

So, BRUSH ASIDE THE MEDIA REVIEWS; ENJOY BILLA 2 FOR ITS SPECTACULAR PRESENTATION! மங்காத்தாவின் வசூலை இது முறியடிக்கும் என்றே நினைக்கிறேன். பார்க்கலாம்…

(குறிப்பு : “இந்த படம் ஓப்பனிங், எந்திரனை மிஞ்சிட்டதா அஜீத் ஃபேன்ஸ் சொல்றாங்க… சில டி.வி.சானல்ஸ்ல சொல்றாங்க…” அப்படி இப்படின்னு சொல்லிக்கிட்டு, ஒரு சிலர் அஜீத் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே கலகத்தை ஏற்படுத்த முனையுறாங்க. என்கிட்டேயே “இதுக்கு உங்க பதில் என்ன?”ன்னு கேக்குறாங்க. நேரம்டா. (இவங்களுக்கு வேற வேலை வெட்டியே கிடையாது என்பது வேற விஷயம்!) அவ்ளோ ஏன்… ஆஸ்கார் ரவிச்சந்திரனே அதை சொன்னாலும் ஐ டோன்ட் கேர்! என்னோட பதில் என்னன்னா…. இதை அஜீத் சொல்லட்டும்… நான் அப்போ பதில் சொல்றேன்! ஓ.கே.?)

——————————————————————–
அன்பு அஜீத் ரசிகர்களுக்கு : நான் உங்களுக்கு அறிவுரை சொல்றேன்னு நினைக்காதீங்க. எனக்கு அதக்கு தகுதியோ அனுபவமோ இல்லை. எல்லாம் ஒரு அன்புனால தான சொல்றேன். இந்தப் படத்தை பற்றிய எதிர்மறை விமர்சனம் தருபவர்களை கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து சில அஜீத் ரசிகர்கள் பேசி வருவதாக அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். நீங்கள் அப்படி செய்யும்போது, என்னாகும்னா வேறு யாராவது உங்களின் போர்வையில் நுழைந்து கலகம் செய்ய வாய்ப்பிருக்கிறது. அடுத்த முறை, அஜீத்தையோ அவரது படங்களையோ விமர்சிப்பவர்களை பதிலடியாக கடுமையாக பேசுபவர்களை கண்டால், “அது அஜீத் ரசிகரா இருக்காதுப்பா” என்று சொல்லவேண்டும். உங்களிடம் அத்தகைய ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். (இது சில ரஜினி ரசிகர்களுக்கும் சேர்த்துத் தான்).

சரி… இதுக்கு என்ன தான் வழி? எப்படித் தான் பதிலடி கொடுக்கிறது? சிம்பிள். “உங்களுக்கு படம் பிடிச்சிருக்குல்ல? குடும்பத்தோட போய் பாருங்க.” இப்படி எல்லாரும் போனாலே, படம் சூப்பர் டூப்பர் ஹிட். இது தான் சரியான பதிலடி. அவ்ளோ தான்!

ரெண்டாவது, விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் வாழ்வில் எதையுமே சாதிக்க முடியாது. அதுவும், அஜீத் அவர்களின் ரசிகராய் இருந்துகொண்டு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல் இருப்பது அவரை அவமதிப்பது போலாகும். அதை அவரே விரும்பவும் மாட்டார். இரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதா என்ன? விமர்சனங்களால் ஒருவரை வீழ்த்திவிட முடியும் என்றால் சரித்திரத்தில் சாதனையாளர்களே இருக்கமாட்டார்கள். விமர்சனங்களை வரவேற்க துணியுங்கள்; வாழ்க்கை வளமாகும்! —

சென்னை பரங்கிமலை தர்காவிற்கு ஏ.ஆர்.ரகுமான் தனது தலையில் சந்தன குடத்தை சுமந்து ஊர்வலத்துடன் சென்றார்.





சென்னை பரங்கிமலை ராணுவ பகுதியில் ஹசரத் சையத் ஷா அலி மஸ்தான் ஷமன் ஷா அலி தர்கா உள்ளது. இந்த தர்காவில் 128ம் ஆண்டு சந்தன முபாரக் உரூஸ் திருவிழா நடைபெற்றது.
கடந்த 28ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், நேற்று முன்தினம் மாலை சந்தன குடம் ஊர்வலம் நடைபெற்றது.

ஆலந்தூரில் உள்ள முக்கிய வீதிகளில் இந்த சந்தன குடம் ஊர்வலமாக சென்று வந்தது. சந்தன குடம் ஊர்வலம் தர்காவிற்கு வந்ததும் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது தலையில் சந்தன குடத்தை சுமந்து ஊர்வலத்துடன் சென்றார்.

அதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே மீண்டும் கிரிக்கெட்



5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே மீண்டும் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் 3 ஒருநாள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகள் நடத்தப்படுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடைசியாக 2007-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2008-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகள் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடர் அடியோடு நிறுத்தப்பட்டது.

2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பாகிஸ்தான் சென்று விளையாடிய இலங்கை அணியினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சுடுதல் நடத்தியதால் அதன் பின்னர் எல்லா அணிகளும் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்டன. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் அணி தனது நிதி நிலையை சமாளிக்க பொதுவான இடத்தில் மற்ற நாட்டு அணிகளுடன் விளையாடியது. ஆனால் இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதிக்கவில்லை.

உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் சந்தித்தன.

இந்த ஆண்டு தொடக்கம் முதலே இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே மீண்டும் போட்டி தொடர் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பகீரத முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இடையே பல முறை பேச்சுவார்த்தை நடந்தது. இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் அக்டோபரில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த சியல்கோட் அணி பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டியை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கடையநல்லூரில் குளத்தில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து லாரிகள் சிறைபிடிப்பு


கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் துரைச்சாமிபுரத்தில் சீவலப்பேரி குளம் உள்ளது. இந்த குளத்தில் தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகள் மணல் அள்ளப்பட்டு வருகிறது. குளத்தில் மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும், 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
எனவே குளத்தில் மண் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் இன்று காலை சீவலப்பேரி குளத்திற்கு மண் அள்ள வந்த லாரிகளை அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் சிறை பிடித்தனர்.
மேலும் மதுரை-தென்காசி நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனிடையே மண் அள்ளும் கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி இடைகால் அ.தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் செல்லப்பாவை சிலர் சரமாரியாக தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சனி, 14 ஜூலை, 2012

கடையநல்லூரில் நோய் பரவ அதிகாரிகளே காரணம் நகராட்சி தலைவி புகார்

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல், காலரா பரவியதற்கு அதிகாரிகளே காரணம் என நகராட்சி தலைவி சைபுன்னிஷா புகார் தெரிவித்துள்ளார். 
 இதுதொடர்பாக அவர் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடந்த 4 மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவி மக்களை வாட்டி வதைத்தது. காய்ச்சலுக்கு 11 பேர் பலி யான நிலையில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். 
காய்ச்சலை தொடர்ந்து தற்போது பொதுமக்கள் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நோய்களை கட்டுபடுத்த நகராட்சி நிர்வாகம் முழு முயற்சி மேற்கொண்ட போதிலும் நகராட்சி உணவு அலு வலர் உள்பட பல அலுவலர்கள் முறையாக பணியாற்ற முன் வர வில்லை. 
துப்புரவு பணியாளர்கள்  குறைந்த அளவே இருப்பதால் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் 11 வார்டுகளின் பணிகள் தனியார் மூலம் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. 
ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்தில் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரிடம் அனுமதி கேட்டு வாங்காததால் தற்போது 11 வார்டுகளில் தனியார் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. 
இதனால் சுமார் 85 துப்புரவு பணியாளர்களை வைத்து 33 வார்டுகளிலும் துப்புரவு பணி மேற் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. 
எனவே கடையநல்லூர் பகுதியில் தொற்று நோய் கட்டுபடுத்தப்பட்ட நிலையிலும்  மீண்டும் நோய் பரவாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி நகராட்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள் ளார்.

கடையநல்லூர் பாப்பான்கால்வாயில் பாதுகாப்புடன் ஆக்ரமிப்புகள் அகற்றம்

கடையநல்லூர் பாப்பான்கால்வாயில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. கடையநல்லூர் கருப்பாநதி அணைக்குட்பட்ட பாப்பான்கால்வாயில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் அமைந்திருப்பதாகவும், இதனால் கடைமடை வரை பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு தண்ணீர் சீராக செல்லாமல் இருப்பதாக விவசாயிகள் தரப்பில் புகார் கூறப்பட்டு வருகிறது. பருவமழை கொட்டி தீர்த்தாலும் இதே நிலைதான் பல ஆண்டுகளாக தொடர்வாக குளத்துபாசன விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். இதனிடையில் பாப்பான்கால்வாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தன. இதனால் இப்பணி கைவிடப்பட்டது. இதனிடையில் பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. கடந்த 26ம் தேதி கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவி பொறியாளர் மணிகண்டன் மூலம் நோட்டீஸ் அனுப்பபட்டது. இதனிடையில் நேற்று காலை பாப்பான்கால்வாயில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. தென்காசி தாசில்தார் தேவபிரான், புளியங்குடி டிஎஸ்பி., ஜமீம் மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள், 20க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள், 30 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். பாதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், கடையநல்லூர் வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், உதவி பொறியாளர் மணிகண்டன் மற்றும் வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிப்பு பகுதிகளை கிழக்கில் இருந்து மேற்காகவும், ரகுமானியாபுரத்தில் இருந்து கிழக்கு நோக்கியும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது பொதுமக்கள் ஆங்காங்கே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனுமதி எப்படி கிடைக்கிறது : பாப்பான் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றத்தின் போது பொதுமக்கள் அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ""கால்வாயில் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன. அப்படி என்றால் வீடு கட்டுவதற்கான பிளான் அப்ரூவல் எப்படி தருகிறார்கள். கடந்த சுமார் 25 ஆண்டுகளாக இப்பகுதியில் சில கட்டடங்களுக்கு நகராட்சி நிர்வாகம் பிளான் அப்ரூவலும், குடிநீர் இணைப்பும் வழங்கியுள்ளது அப்படி என்றால் நகராட்சி நிர்வாகம்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்'' என் பொதுமக்கள் புலம்பினர்.

வியாழன், 12 ஜூலை, 2012

கடையநல்லூரில் போஸ்டரால் பரபரப்பு

கடையநல்லூரில் போஸ்டரால் பரபரப்பு

குற்றாலத்தில் சீசனையொட்டி அரியவகை பழங்கள் விற்பனைக்கு குவிப்பு: சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்



குற்றாலத்தில் சீசனையொட்டி குளிர் பிரதேசங்களில் மட்டுமே விளையும் அரியவகை பழங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
 
குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் சீசன் காலங்களாகும். இக்காலங்களில் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்து செல்வர்.
 
அவ்வாறு குளிக்க வருபர்கள் குற்றாலம் பகுதியில் விற்பனை செய்யப்படும் அரியவகை பழங்களை வாங்கி செல்லதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக வழக்கமாக கிடைக்கும் ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழங்களை தவிர குளிர்பிரதேசங்களில் மட்டுமே விளையும் அரிய வகை பழங்களான மங்குஸ்தான்,ரம்ப்டான், துரியன், முட்டை பழம், மனோரஞ்சிதம் பழம், வால்பேரி உள்ளிட்ட பழ வகைகள் குற்றாலத்தில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
 
துரியான் மற்றும் மங்குஸ்தான் பழங்கள் கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடியவை ஆகும்.
 
குற்றாலம், தெற்குமலை, ஊட்டி, பள்ளியாறு மற்றும் கேரளாவில் சில பகுதிகளில் மட்டுமே மங்குஸ்தான் பழம் விளைகின்றன. மலட்டுத்தன்மையை போக்கும் தன்மை உடையதாக கருதப்படும் துரியன் பழங்களும் குற்றாலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
 
இந்த பழம் ரூ.500 முதல் 1000வரையும், குளிர்ச்சியை ஏற்படுத்தும் ரம்டான் 150 லிருந்து 400 வரையிலும், மங்குஸ்தான் 320-க்கும், முட்டைபழம் 150-க்கும், பிளம்ஸ் 120-க்கும், சப்போட்டா 30-க்கும், பேரிக்காய் 80-க்கும், மாதுளை 150-க்கும், ஸ்டார்புரூட் 120 ரூபாய்க்கும், கொய்யா, நெல்லி 40-க்கும், மாம்பழம் தரத்திற்கு ஏற்றாற்போல் 20 ரூபாயில் இருந்து, 150 வரையிலும், விற்பனை செய்யப்படுகிறது.
 
இது தவிர குற்றாலத்தை அடுத்து மேலகரம் பகுதியில் இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுவைமிகுந்த மாம்பழங்களான பங்கனபள்ளி, இமாம்பசந்த், நீலம் உள்ளிட்ட சுவை மிகுந்த மாம்பழங்கள் இயற்கையாகவே பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

சென்னையில் ஆசிரியர் தகுதித் தேர்வு: பர்தாவை அகற்ற சொன்னதால் பரபரப்பு



சென்னை விருகம்பாக்கம் பாலலோக் தனியார் பள்ளியில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத முஸ்லிம் பெண் ஒருவர் பர்தா அணிந்து வந்தார். ஆனால் தேர்வு அறைக்குள் பர்தாவுடன் வரக்கூடாது என்று ஊழியர்கள் கண்டிப்புடன் தெரிவித்தனர். 

ஆனால் பர்தாவை அகற்ற அந்த பெண் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கையில் எடுத்து வரும் பொருட்களுக்கு தடை விதிக்கலாம். உடை விஷயத்தில் தலையிடகூடாது என்று அந்த பெண் காரசாரமாக வாதம் செய்தார். 

ஆனால் தேர்வு மைய ஊழியரோ பர்தா அணிந்து தேர்வு எழுதினால் நீங்கள் பக்கத்தில் இருப்பவர்களிடம் விவாதிப்பது எப்படி தெரியும்? என்று கூறி உள்ளே அனுமதிக்க மறுத்தார். இதனால் சிறிது நேரம் பரபப்பு ஏற்பட்டது. பின்னர் பர்தா அணிந்தபடியே அவர் தேர்வு எழுதினார்.

தகுதி தேர்வு எழுத 1 1/2 மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல்


ஆசிரியர் தகுதி தேர்வு இன்று நடந்தது. காலையில் நடந்த முதல் தாள் தேர்வு மிகவும் கடினமாக இருந்துள்ளது.கேள்விகளுக்கு விடை அளிக்க கால அவகாசம் இல்லாததால் முழுமையாக எழுத முடியவில்லை என்று ஆசிரியர்கள் மனம் குமுறினர்.
 
இந்த தேர்வில் 150 கேள்விகளுக்கு 90 நிமிடங்கள் கொடுக்கப்பட்டிருந்தது.   கணித சம்பந்தமான கேள்விகளுக்கு அதற்கான விடையை கண்டுபிடிக்க ஒரு கேள்விக்கு 20 நிமிடம் ஆனது. இதனால் மற்ற கேள்விகளுக்கு விடை அளிக்கவில்லை. பெரும்பாலானவர்கள் விடை எழுத நேரம் இல்லாமல் கொடுத்து வந்து விட்டனர்.
 
தேர்வு எழுதி விட்டு பல ஆசிரியர்கள் சோகத்துடன் வெளியே வந்தனர்.   அம்பத்தூரைச் சேர்ந்த ஆசிரியர் ரவிக்குமார் கூறும் போது, இந்த தேர்வுக்கு 90 நிமிடங்கள் போதாது. 3 மணி நேரம் தேவைப்படும். அனைத்து கேள்விகளுமே விடையைப் பார்த்தவுடன் எழுதுவது போல் அமைய வில்லை. செயல்முறை வடிவில்தான் விடையை கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. மனக்கணக்கில் அதை தெரிந்து கொள்ள முடியாது.
 
இந்ததேர்வில் வெற்றி பெறுவது கடினம்தான். பொரும்பாலான கேள்விகளுக்கு விடை தெரிந்திருந்தும் அதற்கு பதில் அளிக்க நேரம் இல்லாததால் விட்டு விட்டேன். ஆசிரியர் தேர்வு வாரியம் சரியான முறையில் நேரத்தை கணக்கீடு செய்யாமல் கேள்வித்தாளை தயாரித்து இருக்கிறார்கள்.
 
இது தேர்வு எழுதிய அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த தேர்வுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும். அல்லது இந்த தேர்வை ரத்து செய்து விட்டு வேறு தேர்வு நடத்த வேண்டும் என்றார்.
 
நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அமுதா கூறும்போது, தேர்வு நேரத்தை சரியாக கணக்கிடாமல் தேர்வை நடத்தியுள்ளனர். 5-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு 10-ம் வகுப்பு பாடத்திற்குரிய கேள்விகளை கேட்டுள்ளனர். குறைவான பாடத் திட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை.
 
பட்டய ஆசிரியர் பயிற்சி பெற்ற எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான கேள்விகளை கேட்டுள்ளனர். இது போன்ற குழப்பங்களாலும் ஆசிரியர் தேர்வு வாரியம் கவனக்குறைவாக இந்த தேர்வை நடத்தியுள்ளது. 
 
இதனால் பாதிக்கப்படுவது ஆசிரியர்கள்தான். நாங்கள் இத்தனை மாதங்களாக கஷ்டப்பட்டு படித்ததெல்லாம் வீணாகி விட்டது. எனவே இந்த தேர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சரியான கால அளவில் கேள்விகள் தயாரிக்கப்பட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்றார்.

தமிழ்நாடு முழுவதும் இன்று 6 1/2 லட்சம் ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுதினார்கள்: எந்த தேர்வை எழுதுவது என்று தெரியாமல் பட்டதாரிகள் தவிப்பு


தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு இன்று நடந்தது. மொத்தம் 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். இதற்காக 1027 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. சென்னையில் 78 மையங்களில் 36 ஆயிரம் பேர் தகுதி தேர்வு எழுதினார்கள்.
 
காலை 10.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. காலையில் முதல் தாள் தேர்வு 12 மணி வரை நடந்தது. 2-ம் தாள் தேர்வு பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி 4 மணி வரை நடக்கிறது. இந்த தேர்வை ஆண்களை விட பெண் பட்டதாரிகளே அதிக அளவில் எழுதினார்கள்.
 
தேர்வு மையங்களுக்கு காலையிலேயே குடும்பத்துடன் வந்து குவிந்தனர். பல பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். குழந்தைகளை தாய் அல்லது தந்தையர்கள் தேர்வு வளாகங்களில் வைத்து கவனித்து கொண்டிருந்தனர்.பல ஆண்கள் குழந்தைகளை கவனிக்க முடியாமல் தவித்ததையும் காண முடிந்தது.
 
தேர்வு மையத்துக்கு தேர்வு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே வரும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் பலர் 10.15, 10.30 மணி வரை அரக்க பரக்க பதட்டத்துடன் வந்தனர். ஒரு சில தேர்வர்கள் தேர்வு தொடங்கிய பிறகும் வந்தனர். அவர்களை தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கவில்லை.
 
அரசு பொது தேர்வை விட கடுமையாக இந்த தேர்வு கடைபிடிக்கப்பட்டது. கண்காணிப்பாளர்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டனர். தேர்வு மையங்களுக்குள் செல்போன், கால்குலேட்டர், பென்சில், பேப்பர், ஐபேட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எதையும் அனுமதிக்கவில்லை.
 
தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதித்தனர். தேர்வு எழுத சென்ற ஆசிரியர்கள் மாணவர்களை விட அதிகமாக தேர்வு பயத்தில் இருந்தனர். பஸ், ரெயில்களில் வந்தபோதும், தேர்வு மைய வளாகங்களிலும் புத்தகங்களை படித்தபடியே இருந்தனர்.
 
பல தேர்வர்களுக்கு தொலை தூரத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இதனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள். பூந்த மல்லி, கேளம்பாக்கம், தாம்பரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கோடம்பாக்கம், விருகம்பாக்கம் பகுதிகளில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
தேர்வு அறையில் முறைகேடு செய்து பிடிபட்டால் இந்த தேர்வை ரத்து செய்வதோடு அடுத்து 3 ஆண்டுகள் ஆசிரியர் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டிருந்தது.

தமிழகமெங்கும் ‘தல’ மேனியா: நாளை பில்லா 2 ரிலீஸ்


தமிழ்நாட்டில் சினிமா ரசிகர்களிடையே இப்பொழுது பில்லா 2 ரிலீஸ் பற்றிய பேச்சுதான். 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ள பில்லா 2 ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு கவுண்டவுன் புதன்கிழமை முதலே தொடங்கிவிட்டது.
முன்பெல்லாம் ரஜினி, கமல், விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள் ரிலீஸ் என்றாலே ஒருவாரத்திற்கு முன்பிருந்தே படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர் முன்பு கட் அவுட் வைப்பதும், கொடி, தோரணம் கட்டுவதும், களை கட்டும். இப்பொழுது அதே போன்ற காட்சிகள் அஜீத் நடிப்பில் வெளிவர உள்ள பில்லா 2 ரிலீஸ் ஆகும் தியேட்டர் முன்பு பார்க்க முடிகின்றன. கடந்த இருதினங்களுக்கு முன்பிருந்தே பல அடி உயர அஜீத் கட் அவுட்கள் ஆங்காங்கே முளைத்துள்ளன.
படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன. கொடிகளும், தோரணங்களுமாய் கட்டி ரசிகக்கண்மணிகள் கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர். பில்லா-2 படம் ஜூலை 13ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அன்றைய தினம் கட் அவுட்டிற்கு பாலபிஷேகம், காவடி, என எடுத்தாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை.
ஐ.என்.இ. இன்டர்நேஷனல் மற்றும் ஒய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ள பில்லா-2 படத்தில் அஜித், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா நடித்துள்ளனர். சக்ரி டோல்ட்டி இயக்கியுள்ள இப்படம் முடிந்து மாதங்கள் சில ஆகிவிட்டன. கடந்த மே மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளால் தள்ளிக்கொண்டு போனது.
சமீபத்தில் இப்படத்திற்கு தணிக்கை துறை ஏ சான்று அளித்த நிலையில் பட ரிலீஸ் மேலும் தள்ளிபோனது. இந்த நிலையில் ஜூலை இறுதியில் பில்லா வெளியாகலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்.
பக்கா ஆக்ஷ்ன், த்ரில்லராக அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது பில்லா-2. வருகிற ஜூலை 13ம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறோம். தமிழகம் முழுக்க சுமார் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்று தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

செவ்வாய், 10 ஜூலை, 2012

மீண்டும் களை கட்டிய குற்றால சீசன் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

குற்றாலத்தில் மீண்டும் சீசன் களை கட்டியதால் நேற்று மாலையில் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. "ஏழைகளின் ஊட்டி' என்றழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் சீசன் துவங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் சாரல் மழை பொழிந்து சீசன் துவங்கினாலும் தொடர்ந்து சாரல் மழை பொய்த்ததால் சீசன் டல் அடித்தது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி சாரல் மழையின் ஆதிக்கம் மிகுந்ததால் சீசன் களை கட்டியது. பின்னர் மழை பெய்யாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.
இந்நிலையில் நேற்று மாலையில் பொதிகை மலையை மழை மேக கூட்டங்கள் சூழ்ந்தது. ஜில் என தென்றல் காற்று வீசவே சாரல் மழை பொழிந்தது. மலைப்பகுதியில் மழையின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பின்னர் இரவு மெயின் அருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவியிலும் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது.
அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததாலும், குளு குளு நிலைமை ஏற்பட்டு சீசன் மீண்டும் களை கட்டியதாலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். இரவு சாரல் மழையுடன் குளிர்ந்த காற்று வீசியது.

ஞாயிறு, 8 ஜூலை, 2012

கடையநல்லூர் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கடையநல்லூர் அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.கடையநல்லூர் பைஜூல் அன்வார் அரபிக் கல்லூரியின் 33வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. கல்லூரி நிர்வாகக்குழு தலைவர் அல்ஹாஜ் இக்பால் தலைமை வகித்தார். தென்காசி ஹாஜி முஸ்தபா அதிபர் கமால் முஹ்யித்தீன், டாக்டர் அப்துல்அஜீஸ், அன்சாரியா, மகளிர் அரபிக் கல்லூரி தலைவர் முஹம்மது இஸ்மாயில், கயத்தார் ஷாஜகான், ஈரோடு அல்அமீன் கல்லூரிகள் தலைவர் ஜபருல்லாஹ், கடையநல்லூர் முஹம்மது யூசுப் முன்னிலை வகித்தனர்.கல்லூரி துணை முதல்வர் முஹ்யித்தீன் வரவேற்றார். தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை துணைத் தலைவர் அப்துஷ்ஷக்கூர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அமைப்பு செயலாளர் நெல்லை மஜீத், மேலப்பாளையம் அன்னை ஹாஜரா மகளிர் கல்லூரி தாளாளர் செய்யது அஹ்மது பேசினர். 24 மாணவர்களுக்கு ஆலிம் பைஜி பட்டமும், 2 மாணவர்களுக்கு ஹாபிழ் பட்டமும் வழங்கப்பட்டது.
கல்லூரி துணை முதல்வர் நன்றி கூறினார்.

கடையநல்லூரில் அமைச்சர் ஆலோசனை

கடையநல்லூரில் அமைச்சர் செந்தூர்பாண்டியன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கடையநல்லூரில் நேற்று நடப்பாண்டிற்கான தொகுதி எம்எல்ஏ நிதி ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருடன் அமைச்சர் செந்தூர்பாண்டியன் ஆலோசனை மேற்கொண்டார். கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் படியே நடப்பாண்டும் ரேஷன் கடைகள், பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்ட கட்டட பணிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அதிமுகவினர் தரப்பில் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் கடந்த நிதியாண்டில் எம்எல்ஏ ஒதுக்கீட்டில் 100 சதவீதம் கட்டட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததையடுத்து அமைச்சருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து செந்தூர்பாண்டியன் கூறுகையில், ""கடையநல்லூர் தொகுதியில் எம்எல்ஏ நிதி ஒதுக்கீட்டில் நடப்பாண்டில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்'' என்றார்.

4 ஆயிரம் பேருக்கு மின்வாரியத்தில் வேலை ! ஜெ., உத்தரவு !


தமிழக மின்வாரியத்தில் 4 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பை உருவாக்கிட முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் புதிதாக இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதுடன் மின்வாரியத்தின் அடிப்பை களப்பணிகள் துரிதமாக நடக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெ., இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மின்வாரியத்தில் 4 ஆயிரம் உதவிக்களப்பணியாளர்கள் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி 4 ஆயிரம் பேரும் மாநிலம் முழுவதும் பரவலாக பணியில் அமர்த்தப்படுவர். இவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்படுவர். தேர்வானவர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி காலமாக கருதப்பட்டு அவர்களுக்கு மாதம்தோறும் தொகுப்பூதியமாக ரூ .3 ஆயிரத்து 250 வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

கூடங்குளம் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி விரைவில் துவக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.