கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 10 ஜூன், 2012

கடையநல்லூரில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை


கடையநல்லூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் காணப்பட்டு வரும் நிலையில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக வாறுகால் சுத்தப்படுத்தும் பணியில் தேக்கம் காணப்படுகிறது. தனியார் துப்புரவு கான்ட்ராக்ட் பணிக்காலமும் முடிவடைந்து விட்டதால் சுகாதாரகேட்டால் மேலும் டெங்கு காய்ச்சல் பரவும் என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கடையநல்லூரில் இருந்து தான் பரவியதாக கூறப்பட்டு வரும் நிலையில் இந்த காய்ச்சல் பாதித்து கடையநல்லூரில் மட்டும் 8 பேர் பலியாகியுள்ளனர். காய்ச்சல் பாதித்து ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரம் மருத்துவத்துறையினரும் தீவிரமாக மேற்கொண்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையின் அடிப்படையில் நோயின் வேகம் பரவலாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதனிடையில் தமிழக முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் கடையநல்லூரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் விதமாக அரசு ஆஸ்பத்திரியில் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து 5 டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து கடையநல்லூரில் அமைச்சர்கள் டாக்டர் விஜய், செந்தூர்பாண்டியன் மற்றும் மருத்துவம், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.விழிப்புணர்வு பேரணியில் சுகாதார துறை அமைச்சர் விஜயிடம் நகராட்சி பகுதியில் காணப்படும் சுகாதாரக்கேடுதான் டெங்கு காய்ச்சலுக்கு முக்கியமாக அமைந்துள்ளது என பொதுமக்கள் சார்பில் அதிகளவில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனிடையில் நகராட்சி பகுதியில் சுகாதார பணிகளை மேற்கொள்ள தினக்கூலி அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்திட சுகாதார மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர்.இந்நிலையில் கடையநல்லூர் நகராட்சியில் தற்போது துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதார பணிகள் தேக்கமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாறுகால் சுத்தப்படுத்தும் பணி, தெருக்கள் சுத்தம் செய்யும் பணிகள் போன்றவை பெருமளவில் முடக்கப்பட்டுள்ளன. இந்நகராட்சியை பொறுத்தவரை தற்போது சுத்தப்படுத்தும் பணி நான்கு நாட்களுக்கு ஒருமுறைதான் முக்கிய பகுதிகளில் கூட மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வாறுகால் சுத்தம் பணி கடந்த ஒருவார காலமாக பெரும்பாலான தெருக்களில் மேற்கொள்ளப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
கடையநல்லூர் நகராட்சியை பொறுத்தவரை 45 ஆயிரத்து 456 ஆண்களும், 44 ஆயிரத்து 888 பெண்களும் வசித்து வருகின்றனர். நகராட்சியின் மொத்த பரப்பளவு 52.25 சதுர கி.மீ.ஆகும். 33 வார்டுகளை கொண்ட இந்நகராட்சியில் அங்கீகரிக்கப்பட்ட குடிசைப்பகுதிகள் 11 ஆகும். இவற்றில் குடிசைப்பகுதியில் மக்கள் தொகை 24 ஆயிரத்து 528 ஆக உள்ளது. கழிவுநீர் கால்வாயின் மொத்த நீளம் 99.20 கி.மீ. ஆகும்.இந்நகராட்சியில் மொத்தம் 26 ஆயிரத்து 129 வீடுகள் அமைந்துள்ள நிலையில் தெருக்களின் எண்ணிக்கை 229 ஆகும். ரோடுகளை பொறுத்தவரை மொத்த நீளம் 67.139 கி.மீ.ஆகும். 5 கட்டண கழிப்பிடங்கள், உரக்கிடங்குகள் இரண்டு, ஆடறுப்பு மனை 1 ஆகிய இந்நகராட்சியில் அமைந்துள்ளன.துப்புரவு பணியாளர்களை பொறுத்தவரை துப்புரவு அலுவலர் 1, துப்புரவு ஆய்வாளர் 2, துப்புரவு பணி மேற்பார்வையாளர் 2, துப்புரவு பணியாளர்கள் 88 பேர் பணியாற்றி வருகின்றனர். துப்புரவு பணியாளர்களை பொறுத்தவரை அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் கடையநல்லூர் நகராட்சிக்கு 100 ஆகும். தற்போது 12 பணியிடங்கள் காலியிடமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் கடையநல்லூர் நகராட்சியில் துப்புரவு பணிகளை மேம்படுத்தும் பொருட்டு கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட 11 வார்டுகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை, மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் துப்புரவு பணிகள் தனியார் வசம் கான்ட்ராக்ட் வழங்கி செயல்படுத்தப்பட்டு வந்தது.கடந்த 1ம் தேதி தனியார் துப்புரவு பணி கான்ட்ராக்ட் முடிவு பெற்றுவிட்டன. 

அதற்கான காலக்கெடு நீடிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தனியார் துப்புரவு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் கடையநல்லூர் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் வேகமாக காணப்பட்டு வரும் நிலையில் துப்புரவு பணியில் கடுமையான முடக்கம் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே வாறுகால்களில் சாக்கடை கழிவுநீர் நிரம்பி தெருக்களில் குட்டைபோல் தேங்கி கிடந்து கொசுக்களின் சங்கமம் அங்கு கொடிகட்டி பறக்கும் வகையில் காணப்படுகிறது.மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய முக்கிய இடங்களிலும் வாறுகாலில் சாக்கடை கழிவுநீரால் ஏற்படும் துர்நாற்றம் பொதுமக்களை பெரிதும் அச்சப்படுத்தி வருகிறது. கடையநல்லூர் நகராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்திட போதிய நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரகேடு காரணமாக பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக