கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 21 ஜூன், 2012

கடையநல்லூரில் டெங்குவை தொடர்ந்து வாந்தி-பேதி: 2 பெண்கள் பலியானதால் பொதுமக்கள் அச்சம்

கடையநல்லூரில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் டெங்கு காய்ச்சல் பரவியது. அதனை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்காததால் கடையநல்லூர் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் மட்டுமின்றி நெல்லை மாவட்டம் முழுவதும் வேகமாக பரவியது.
 
அதன்பிறகு மாநில சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டது. இருந்தபோதிலும் அண்டை மாவட்டமான தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்திற்கும் டெங்கு காய்ச்சல் பரவியது.
 
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கு 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். ஆனால் முதலில் பரவிய நெல்லை மாவட்டத்தில்தான் டெங்கு காய்ச்சல் காரணமாக அதிக உயிரிழப்பு ஏற்பட்டது.
 
தற்போது டெங்கு பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. சுகாதாரத்துறையின் தொடர் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக, பொதுமக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு ஏற்பட்டதே இதற்கு காரணம்.
 
மாவட்டம் முழுவதும் மட்டுமின்றி டெங்கு பரவத்தொடங்கிய கடைய நல்லூரிலும் பாதிப்பு வெகுவாக குறைந்தது. இந்நிலையில் கடையநல்லூர் பகுதியில் தற்போது வாந்தி-பேதி பரவத்தொடங்கியுள்ளது.
 
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் வாந்தி-பேதியால் பாதிக்கப்பட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வந்தார்கள். அவர்களில் சொக்கம்பட்டி வலையர்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராக்கிமுத்து என்பவரின் மனைவி மாடத்தி (வயது50), ராக்கம்மாள் (80) ஆகிய இருவரும், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
 
பின்பு அங்கிருந்து கடைய நல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்ட அவர்கள், மேல்சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
 
வாந்தி-பேதிக்கு 2 பெண்கள் பலியான சம்பவத்தால் கடையநல்லூர் மக்கள் மத்தியில் மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பீதி சற்று அடங்கிய நிலையில் தற்போது வாந்தி-பேதி பாதித்து வருவதாலும், அதற்கு 2 பெண்கள் பலியானதாலும் இந்த பீதி ஏற்பட்டுள்ளது.
 
குடிநீர் பல இடங்களில் மாசுபடுவதாலும், அந்த சுகாதாரமற்ற குடிநீர் வினியோகமே வாந்தி-பேதிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆகையால் சுகாதாரமான சுத்தமான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடையநல்லூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் இலங்கை அகதிகள் 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடையநல்லூர் அருகே தாயார்மடத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த தீபிகா (வயது4), முரளிதரன் (6), செல்லையா (45), ருதினா, சாத்தையா (37) உள்பட 6 பேர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.
 
இதனைத்தொடர்ந்து இலங்கை அகதிகள் முகாமில் கொசு மருந்து அடிப்பு உள்ளிட்ட டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக