கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 17 ஜூன், 2012

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்தனர்.ஜூன் 1ம் தேதி முதல் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதமாக கடந்த 5ம் தேதி கேரள வனப்பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பெய்ததின் அடிப்படையில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் தண்ணீர் விழத் துவங்கியது. இதனால் சீசன் துவங்கியதாக சுற்றுலா பயணிகளும் குற்றாலம் வரத் துவங்கினர். விவசாயிகளும், விவசாய பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வந்த வேளையில் கடந்த 10 நாட்களாக சாரல் மழை இன்றி காற்று மட்டுமே தீவிரமாக வீசி வந்தது. இதனால் குற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கேரள வனப்பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மட்டுமின்றி செங்கோட்டை, குற்றாலம், தென்காசி போன்ற பகுதிகளில் சாரல்மழை பெய்து வந்ததின் அடிப்படையில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு ஐந்தருவியில் 4 கிளைகளிலும், மெயின் அருவியில் பரவலாகவும் தண்ணீர் விழுந்தது.அருவிகளில் தண்ணீர் விழும் செய்தி கேட்டு சுற்றுவட்டார பகுதிவாழ் மக்களும், சுற்றுலா பயணிகளும் கூட்டம், கூட்டமாக வந்து குளித்து மகிழ்ந்தனர். இப்பகுதியில் மழைமேகம் சூழ்ந்து தட்பவெப்ப நிலை மாறி இருண்டு காணப்படுவதால் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக