கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 15 ஜூன், 2012

சவுதியில் இறந்த தென்காசி வாலிபரின் உடலை கொண்டுவர உதவிய இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செயலுக்கு மனைவி நன்றி

சவுதியில் இறந்த தென்காசி பாலமார்த்தாண்டபுரம் டிரைவரின் உடல் ஆறு மாதங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

தென்காசி அருகே பாலமார்த்தாண்டபுரத்தை சேர்ந்தவர் அல்போன்ஸ் (48). டிரைவர். இவரது மனைவி ஐயம்மாள் (40). இவர்களுக்கு பிரபாகரன் (18) என்ற மகனும், விஜயசாந்தி (16) என்ற மகளும் உள்ளனர். அல்போன்ஸ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சவுதி அரேபியாவிற்கு டிரைவர் வேலைக்கு சென்றார். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அவர் சொந்த ஊருக்கு வந்து இரண்டு மாதங்கள் தங்கி விட்டு பின் மீண்டும் சவுதி அரேபியாவிற்கு சென்றார்.

கடந்த 26.12.2011 அன்று அல்போன்ஸ் இறந்து விட்டார் என அவரது மனைவிக்கு போன் மூலம் செய்தி வந்துள்ளது. சிலர் அவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்றும், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறியுள்ளனர். அல்போன்ஸ் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் தனது மனைவியிடம் போனில் பேசும் போது, தன்னுடைய முதலாளி கொடுமை படுத்துவதாக கூறியுள்ளார்.

தனது கணவர் எதற்காக இறந்தார் என தெரியாத நிலையில் அவரது உடலை பாலமார்த்தாண்டபுரத்திற்கு கொண்டுவர ஐயம்மாள் கலெக்டர் மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இதுபற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் துராப்ஷாவிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் எம்.பி., காதர்முகைதீன் மூலம் மத்திய அரசு மற்றும் சவுதி அரேபியா தூதரக அதிகாரிகளிடம் பேசி அல்போன்ஸ் உடலை பாலமார்த்தாண்டபுரத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில் ஆறு மாதங்கள் கழித்து அல்போன்ஸ் உடல் சவுதி அரேபியாவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பாலமார்த்தாண்டபுரத்திற்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அல்போன்ஸ் உடலை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட எம்.பி., காதர் முகைதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் துராப்ஷாவிற்கு ஐயம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக