கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 21 ஜூன், 2012

கடையநல்லூரில் குடிநீர் வழங்கும் திட்டம் : உறைகிணறுகள் அமைக்க ரூ.1 கோடி அனுமதி

சொக்கம்பட்டி, திரிகூடபுரம் பஞ்., பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தினமும் வழங்கிடும் வகையில் தனித்தனி கிணறுகள் அமைத்திட ஒரு கோடி ரூபாய் அனுமதி கிடைத்திருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.கடையநல்லூர் யூனியன் சொக்கம்பட்டி, திரிகூடபுரம் ஆகிய இரண்டு பஞ்., பகுதி மக்களுக்கு கருப்பாநதி அணை அருகிலுள்ள ஆற்றுப்படுகையில் உறை கிணறு அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கிணற்றில் இருந்து ஒருநாள் சொக்கம்பட்டி பஞ்.,சிற்கும், மறுநாள் திரிகூடபுரம் பஞ்.,சிற்கும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையில் இரண்டு பஞ்.,களின் மக்கள் தொகையினை கருத்திற்கொண்டு தற்போது தினமும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ஒரு கோடி ரூபாய் செலவில் இதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து அமைச்சர் செந்தூர்பாண்டியன் கூறுகையில், ""கடையநல்லூர் யூனியன் சொக்கம்பட்டி, திரிகூடபுரம் பஞ்., பகுதி மக்களின் தினசரி குடிநீர் தேவையை நிறைவேற்றிடும் வகையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திற்கான திட்டம் செயல்படுத்தப்படுமென தேர்தல் நேரத்தில் அதிமுக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி சொக்கம்பட்டி, திரிகூடபுரம் ஆகிய இரண்டு பஞ்.,களுக்கும் கருப்பாநதி ஆற்றுப்படுகையில் தனித்தனியாக இரண்டு கிணறுகள் அமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் வகையில் தனி பைப்லைன்கள் அமைக்கப்படுகிறது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தில் சொக்கம்பட்டி பஞ்.,சில் சுமார் 49லட்ச ரூபாய் மதிப்பீட்டிலும், திரிகூடபுரம் பஞ்.,சில் சுமார் 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலும் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்'' என்றார்.
புதிய உறைகிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுத்த அமைச்சர் செந்தூர் பாண்டியனுக்கு தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டி, சொக்கம்பட்டி பஞ்., தலைவர் பூபதி சந்தனபாண்டியன், திரிகூடபுரம் பஞ்., தலைவர் முத்துசெல்வி மற்றும் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக