கடையநல்லூர் கரிய மாணிக்க பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது30). இவர் சேர்ந்தமரம் அருகே வீரசிகாமணியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வந்தார். தினமும் தனது ஊரில் இருந்து வீரசிகாமணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துசெல்வார். அதேபோல் இன்றுகாலை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார்.
கடையநல்லூர்-சேர்ந்தமரம் ரோட்டில் கண்மணியாபுரம் பகுதியில் வந்தபோது, அவ்வழியாக எதிரேவந்த ஒரு ஜீப், சங்கரின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கிவீசப்பட்ட சங்கர் பலத்த காயமடைந்தார். அவர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற சங்கரை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்பு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சங்கர் அனுப்பி வைக்கப்பட்டார்.
இங்கு அனுமதிக்கப்பட்ட சிறிதுநேரத்திலேயே சங்கர் பரிதாபமாக இறந்தார். இந்தவிபத்து குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, விபத்துக்கு காரணமான ஜீப்பை தேடிவருகிறார்கள். விபத்தில் பலியான சங்கருக்கு சவுமியா(23) என்ற மனைவியும், 1 வயதில் சாய்கணேஷ் என்ற மகனும் உள்ளனர்.
தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளசவுமியா, பிரசவத்திற்காக மதுரையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது