கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 2 மார்ச், 2012

கடையநல்லூரில் விவசாய சங்க பேரவை கூட்டம்

கடையநல்லூரில் விவசாய சங்க பேரவை கூட்டத்தில் இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு பங்கேற்றார்.கடையநல்லூரில் வட்டார விவசாய சங்க பேரவை கூட்டம் லட்சுமி சங்கர் இல்லத்தில் தலைவர் நடராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் சண்முகவேலு, துணை செயலாளர் சேவியர், விவசாய சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கசமுத்து, விவசாய தொழிலாளர் நலச்சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி, சிபிஐ நகர செயலாளர் அயூப்கான், சேக்மைதீன் உட்பட விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கருப்பாநதி அணைக்கட்டை தூர்வாரி ஆழப்படுத்தி தண்ணீர் தேக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வசதி மற்றும் இடுபொருட்களை அரசு தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும். உரவிலை உயர்வினை கட்டுப்படுத்தி தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாப்பான்கால்வாயை தூர்வாரி ஆழப்படுத்தி கடைமடை வரை பாசன தண்ணீர் தடையின்றி செல்ல வாறுகால் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

கடையநல்லூர் பகுதியில் பிசான சாகுபடி அறுவடை தீவிரம்

கடையநல்லூர் பகுதியில் பிசான சாகுபடி அறுவடை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வெளி மாநிலங்களுக்கு நெல் மூடை மூடைகளாக கொண்டு செல்லப்படுகிறது. ரூ.750ல் இருந்து 850 வரை நெல் விற்பனை செய்யப்படுகிறது.நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடி பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சாகுபடிக்காக இந்த ஆண்டு அனைத்து அணைக்கட்டுகளிலிருந்தும் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தண்ணீர் திறந்திட ஏற்பாடு செய்யப்பட்டது. 

பருவமழையை எதிர்பார்த்த நிலையில் பிசான சாகுபடி சில நாட்களுக்கு பிறகு பெரும்பாலான ஏக்கர் நிலப்பரப்பில் காலதாமதமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் கிணற்று நீரை பயன்படுத்தி நெற்பயிர்கள் விளைவதற்கு விவசாயிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.இதனிடையில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி அதற்கான பணிகள் ஆங்காங்கே முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நெல் அறுவடை இயந்திரங்களை கொண்டு அறுவடை பணிகள் தீவிரமாகி வரும் நிலையில் அறுவடை செய்த இடத்திலேயே நெல் மூடைகளை விலை பேசுவதற்கு புரோக்கர்கள் வயல்வெளி பகுதிகளில் முகாமிட்டுள்ளதை காண முடிகிறது. உள்ளூர் வியாபாரிகளை விட வெளிமாவட்ட வியாபாரிகள் அறுவடை செய்த நெல்களை விலை பேசி எடுத்து செல்வதையும் காண முடிகிறது.கர்நாடக மாநிலம் தும்கூர் வழியாக பாம்பே, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு நெல் மூடைகள் அனுப்பபடுவதாக பரவலாக கூறப்படுகிறது. அதிகமான அளவில் கர்நாடகாவில் இருந்து நெல்கள் அனுப்பபட்ட நிலையில் இந்த ஆண்டு அந்த மாநிலத்தில் போதுமான விளைச்சல் இல்லாத காரணத்தை முன்னிட்டு அம்மாநிலத்தை சேர்ந்த நெல் வியாபாரிகளும், புரோக்கர்களும் தமிழகத்தில் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், செங்கோட்டை, இடைகால் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்த நெல்களை டாரஸ் கனரக வாகனத்தில் எடுத்து செல்வதை பரவலாக காண முடிகிறது.இதனிடையில் ஒரு மூடை நெல் ரூ.750ல் இருந்து 800 வரை விலை பேசப்பட்டு வருவதாகவும், மூடை ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்க கூடிய நிலையில் அதனை முறையாக பாதுகாக்க முடியாததால் நெல்களை அந்த இடத்திலேயே கொடுக்க கூடிய நிலை இருப்பதாகவும் விசாயிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். பிசான சாகுபடிக்காக பயன்படுத்தப்பட்ட உரங்களுக்கு செலவு செய்த தொகையை கூட பெறுவதற்கு முடியவில்லை என்று பெரும் ஏக்கத்துடன் தெரிவித்தனர்.

வியாழன், 1 மார்ச், 2012

தமிழகத்தில் சாலை விபத்துக்களை தடுப்பது எப்படி?


தமிழகத்தில் சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து, அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் தனியார் வாகன ஓட்டுனர்களுக்கு பணி நேரத்தை வரைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை தடுப்பது தொடர்பாக, அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்ட 2 நாள் ஆலோசனை கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் அரங்கத்தில் நேற்று தொடங்கியது.
காவல்துறை பயிற்சி கல்லூரி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்தை, தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் ஆர்.ராஜகோபால் தொடங்கிவைத்தார்.
கூட்டத்தில், காவல்துறை பயிற்சி கல்லூரி டி.ஜி.பி. லத்திகாசரண், கூடுதல் டி.ஜி.பி.க்கள் அர்ச்சனா ராமசுந்தரம், அனுப் ஜெய்ஸ்வால், ஐ.ஜி. மாசானமுத்து, 

போக்குவரத்து துறை கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா உள்பட போலீஸ் துறை, போக்குவரத்து துறை, நெடுஞ் சாலைத்துறை, மாநகராட்சி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் 90 பேர் கலந்துகொண்டனர்.

அரங்கத்தின் ஒரு பகுதியில், போக்குவரத்து விதிமுறைகள், போக்குவரத்து போலீசார் பயன்படுத்தும் பொருட்கள் அடங்கிய கண்காட்சியும் நடைபெற்றது.

கூட்டத்தை தொடங்கிவைத்து, தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் ஆர்.ராஜகோபால்,
’’சாலை விபத்தை தடுப்பது குறித்து அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொள்ளும் கூட்டம் தமிழகத்தில் முதன்முறையாக நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் ஆண்டுதோறும் 66 ஆயிரம் சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தின் சராசரி 2.5 சதவீதம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தனியார் வாகன ஓட்டிகளுக்கு பணி நேரம் வரைமுறைப்படுத்தாததால், அவர்கள் அதிக நேரம் வாகனத்தை ஓட்டுகின்றனர். இதுவும் அதிக விபத்துகள் ஏற்பட காரணமாகிவிடுகின்றன. எனவே, தனியார் வாகன ஓட்டிகளுக்கும் பணி நேரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும்.

இதுபோன்ற கூட்டங்களில் சாலை விபத்துக்களை பற்றி விவாதிப்பதன் மூலம் இந்தியாவிலேயே விபத்து இல்லாத மாநிலமாக தமிழகத்தை விளங்கச் செய்ய முடியும்’’ என்று கூறினார்.

காவல்துறை பயிற்சி கல்லூரி டி.ஜி.பி. லத்திகாசரண் பேசும்போது, ’’சாலை விபத்துக்கள் அதிகரிப்பதற்கு விதிமுறை மீறல் ஒரு காரணமாக இருந்தாலும், ஹெல்மெட் அணியாதது, கார்களில் சீட் பெல்ட் அணியாததும் காரணமாகிறது. எனவே, பள்ளி மாணவர்கள் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.

காவல்துறை பயிற்சி கல்லூரி கூடுதல் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் பேசும்போது, ``கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் வாகன விபத்துகள் அதிகரித்து வருகின்றன. 2009-ம் ஆண்டு சாலை விபத்தில் 13 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். 

2010-
ம் ஆண்டு அது 15 ஆயிரமாக அதிகரித்தது. குறிப்பாக வேலூர், விழுப்புரம், கடலூர், சேலம், தஞ்சாவூர், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிக விபத்துகள் நடைபெறுகின்றன. எனவே, விபத்துக்களை தடுப்பது தொடர்பான இதுபோன்ற கூட்டங்களை நடத்துவது அவசியம்’’என்றார்.

முட்புதரில் குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தை நாய்கள் கடித்து குதறியதால் இறந்தது.


கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் அப்பாஜி கார்டன் பகுதியில் ஒரு முட்புதரில் நேற்று மாலை நாய்கள் பலமாக குரைக்கும் சத்தம் கேட்டது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அருகே சென்று பார்த்த போது அங்கு முட்புதரில் பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில் ஒரு பெண் குழந்தை கிடந்தது. அதனை நாய்கள் கடித்து குதறியதால் குலையிரும் குற்றுயிருமாக துடித்துக் கொண்டிருந்தது.

இதைப்பார்த்து பதை பதைத்து போன அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டி விட்டு அந்த குழந்தையை மீட்டனர். அதன்பிறகு உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்து குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், அது வழியிலேயே இறந்து விட்டது என்று தெரிவித்தனர்.

அந்த பகுதியை சேர்ந்த கொடூர மனம் படைத்த ஒரு பெண் தான் பெற்ற பச்சிளம் குழந்தையை தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் முட்புதரில் வீசிச்சென்று உள்ளாள். 

முறை தவறிய காதலால் பிறந்ததால் அந்த குழந்தை அதனை முட்புதரில் வீசிச் சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

எனவே அந்த பகுதியில் கர்ப்பிணியாக இருந்த பெண்கள் யாராவது குழந்தை பெற்று இருக்கிறார்களா? என்று அப்பகுதியில் உள்ள மகப்பேறு ஆஸ்பத்திரிகள், மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தென்காசி ரயில்வேகேட் பகுதியில் சப்-வே அமைக்கும் பணி தீவிரம்


தென்காசி ரயில்வேகேட் பகுதியில் சப்-வே அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தென்காசியில் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது. 32 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணியினை மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து மேற்கொண்டுள்ளன. மாநில அரசு சார்பில் மேம்பாலம் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. மத்திய ரயில்வே துறை சார்பில் ரயில்வேகேட் பகுதியில் அமைக்கப்பட வேண்டிய மேம்பால பணிதான் காலதாமதமாகி வருகிறது. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தென்காசி எம்.எல்.ஏ.,சரத்குமார் ரயில்வே துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பால பணியை விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதினார். மேலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரயில்வே துறை சார்பில் மேம்பால பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. பணி இன்னும் சில நாட்களில் துவக்கப்படும் என கூறப்படுகிறது.

இச்சூழ்நிலையில் ரயில்வே கேட் பகுதியில் சப்-வே அமைக்கும் பணி நடந்து வருகிறது. 35 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் இப்பணியில் 1வது, 2வது பிளாட்பாம் பகுதியில் சப்-வே அமைக்கப்பட்டு விட்டது. 3வது மற்றும் 4வது பிளாட்பாம் பகுதியில் சப்-வே அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இப்பணி இன்னும் ஒரு மாத காலத்திற்குள் முடிந்து விடும் என கூறப்படுகிறது.

ஆனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சப்-வே அமைக்கும் பணி நடைபெற வேண்டும். இதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தும் பணிக்காக 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான்கு பிளாட்பாம் கொண்ட ரயில்வே ஸ்டேஷனில் புதிதாக டிக்கெட் கவுண்டர், பயணிகள் தங்கும் அறை, ஸ்டேஷன் மாஸ்டர் அறை, நடை மேம்பாலம் உள்ளிட்டவைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 1வது, 2வது மற்றும் 3வது பிளாட்பாம் அமைக்கப்பட்டுள்ளது. 4வது பிளாட்பாம் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இப்பணி இன்னும் ஓரிரு தினங்களில் முடிந்து விடும்.

பிளாட்பாம்களில் எலக்ட்ரானிக் அறிவிப்பு பலகை அமைக்கப்பட வேண்டும். மேலும் அனைத்து பிளாட்பாம்களிலும் தேவையான குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட வேண்டும். ரயில்வே ஸ்டேஷனுக்கு தனியாக குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். ரயில்வே மேம்பால பணியையும், மேம்பாலம் அருகில் இணைப்பு சாலை அமைக்கும் பணியையும் விரைந்து முடிக்க அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 2,895 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்


தமிழகத்தில் 2,895 முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிடங்களுக்கு வரும் 16ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. வரும் மே மாதம் 27ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,895 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய எழுத்து தேர்வு அடிப்படையில் விரைவில் நியமனம் செய்யப்படுகின்றனர்.

இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் வரும் 16ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு வரும் மே மாதம் 27ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.
விண்ணப்ப கட்டணம் 50 ரூபாயாகும். தேர்வு கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினருக்கு 250 ரூபாய் தேர்வு கட்டணமாகும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளைகளின் செலான் மூலம் கட்டணம் செலுத்தலாம்.
இதில் தமிழ் பாடத்திற்கு 601 பேரும், ஆங்கிலம் 349, கணிதம் 315, இயற்பியல் 244, வேதியியல் 222, தாவரவியல் 204, விலங்கியல் 197, வரலாறு 170, புவியியல் 24, பொருளாதாரம் 246, வணிகவியல் 275, பொலிடிக்கல் சயின்ஸ் 4, ஹோம் சயின்ஸ் 5, இந்தியன் கல்ச்சர் 1, உடற்கல்வி இயக்குனர் கிரேடு 1 - 36, தெலுங்கு 1, உருது 1 உட்பட மொத்தம் 2,895 பேர் நியமனம் செய்யப்படுகின்றனர்.

எழுத்து தேர்வு மெயின் பாடத்தில் இருந்து 110 மார்க், எஜூகேஷனல் மெத்தாடலஜி 30, பொது அறிவியல் 10 மார்க் உட்பட மொத்தம் 150 மார்க்குகளுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியை பொறுத்தவரை 1-3 ஆண்டுகளுக்கு ஒரு மார்க், 3-5 ஆண்டுகளுக்கு 2 மார்க், 5-10 ஆண்டுகளுக்க 3 மார்க், 10 ஆண்டுகளுக்கு மேல் 4 மார்க் வழங்கப்படும். ஆசிரிய அனுபவத்தை பொறுத்தவரை 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் பணி அனுபவம் 1-2 ஆண்டுகளுக்கு ஒரு மார்க், 2-5 ஆண்டுகளுக்கு 2 மார்க், 5 ஆண்டுகளுக்கு மேல் 3 மார்க் வழங்கப்படும்.
எழுத்து தேர்வு, வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி, பணி அனுபவம் ஆகியவற்றை கணக்கிட்டு பெறும் மார்க்குகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 15-ல் அஜித்தின் பில்லா-2 பாடல் ரிலீஸ்!

அஜித் நடித்து வரும் பில்லா-2 படத்தின் பாடல் மற்றும் டிரைலரை மார்ச் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். அஜித் நடிப்பில் பில்லா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2ம் பாகமாக பில்லா-2 உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித் ஹீரோவாகவும், பார்வதி ஓமணக்குட்டன் ஹீரோயினாக நடிக்கின்றனர். தூத்துக்குடியில் சாதாரண டேவிட்டாக இருந்த அஜித் எப்படி பில்லாவாக மாறுகிறார் என்பதே பில்லா-2 படத்தின் கதை. படத்தில் அஜித் நடுத்தர இளைஞன் மற்றும் டான் என இரண்டு ‌கெட்டப்புகளில் தோன்றுகிறார். இப்படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. 

இந்நிலையில் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை ஒரே நாளில் மார்ச் 15ம் தேதி நடத்த பில்லா படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை உன்னைப்‌போல் ஒருவன் படத்தை டைரக்டர் செய்த சக்ரி டோல்டி இயக்குகிறார். ஐ.என்.இ. எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஒவைடு ஆங்கிள் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்து வருகின்றன.