கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு ஆதரவாக பாளையில் காங்.சார்பில் நாளை பொதுக்கூட்டம்: மத்திய மந்திரிகள் சிதம்பரம், வாசன் பங்கேற்பு

கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை (சனிக்கிழமை) பாளை ஜவகர் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமை தாங்குகிறார். ராமசுப்பு எம்.பி. வரவேற்கிறார். மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், நாராயணசாமி, முன்னாள் மாநில தலைவர்கள் இளங்கோவன், தங்கபாலு, குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, முன்னாள் மத்திய மந்திரிகள் திருநாவுக்கரசர், தனுஷ்கோடி ஆதித்தன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா உள்ளிட்ட தலைவர்கள் பேசுகின்றனர்.

எம்.எல்.ஏ.க்கள் ஜான்ஜேக்கப், விஜயதாரணி, பிரின்ஸ் மற்றும் எம்.பி.க்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதையொட்டி நெல்லை மாநகரம் முழுவதும் கொடி தோரணங்கள், டிஜிட்டல் பேனர்கள் கட்டப்பட்டு உள்ளன. நெல்லை டவுண் ஆர்ச் முதல் மார்க்கெட் வரையும், பாளை பஸ் நிலையம் முதல் சமாதானபுரம் வரையும் காங்கிரஸ் கொடிகள், தலைவர்கள் படங்களுடன் கூடிய வரவேற்பு பேனர்கள் கட்டப்பட்டு உள்ளன.

7 இடங்களில் மின் கோபுர விளக்குகள், 50 இடங்களில் ரவுண்ட் ஆர்ச்சுகள் அமைக்கப்பட உள்ளன. ஜவகர் மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட உள்ளது. கூட்ட மைதானத்தில் காமராஜர், இந்திரா, சோனியா, ராகுல், பிரதமர் மன்மோகன்சிங், மூப்பனார் மின் அலங்கார கட்- அவுட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் வேளையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

கூட்டத்துக்கு வரும் மூத்த தலைவர்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட உள்ளது. பொதுக்கூட்ட மேடையை சுற்றி இளைஞர் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்த 100 பேர் சிறப்பு சீருடை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து தொண்டர்களை அழைத்து வர நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

பெரிய மனம் வேண்டும்


வேலூர் மாவட்டம் துரைப்பாடியைச் சேர்ந்தவர் பூபாலன் (54). இவர் மாதவரம் பைபாஸ் சாலையில் உள்ள ஜனதா டிரான்ஸ்போர்ட் என்ற லாரி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.   சரக்கு அனுப்பிய வகையில் பல்வேறு இடங்களில் பணம் வசூலிப்பது இவரது பணி ஆகும்.
 

நேற்று சென்னையில் பணம் வசூலித்துவிட்டு ரூ.1 லட்சம் பணத்துடன் மாதவரம் செல்வதற்காக இன்று காலை 5.15 மணிக்கு பாரிமுனையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் 557 மாநகர பஸ்சில் ஏறினார். பணத்தை ஒரு ரெக்சின் பையில் வைத்து இருந்தார். பஸ் புறப்பட்டதும் பூபாலன் அயர்ந்து தூங்கி விட்டார். அப்போது பணப்பை தவறி இருக்கைக்கு அடியில் விழுந்தது. இதை பூபாலன் கவனிக்கவில்லை.
 
மாதவரம் பஸ்நிறுத்தம் வந்ததும் அவசரமாக இறங்கி சென்றுவிட்டார். பின்னர் பஸ் பல நிறுத்தங்களில் நின்று கும்மிடிப்பூண்டி சென்று விட்டு மீண்டும் பாரி முனைக்கு புறப்பட்டது.   அப்போது பஸ்சில் பை ஒன்று அனாதையாக கிடப்பதை கண்டக்டர் மோகன்குமார், டிரைவர் சங்கர் ஆகியோர் பார்த்தனர்.
 
பையை திறந்து பார்த்தபோது அதில் கத்தை கத்தையாக பணம் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் லாரி ஆபீஸ் ரசீதுகளும் இருந்தது. அதில் இருந்த போன் நம்பரை வைத்து லாரி ஆபீசுக்கு தொடர்பு கொண்டு விவரத்தை கூறினர். பின்னர் பணப்பையை சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர். அந்த பையில் ரூ.1 லட்சத்து 600 இருந்தது. இதற்கிடையே பணத்தை தவறவிட்ட பூபாலனும் போலீஸ் நிலையம் வந்தார். கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. குமார் விசாரணை நடத்தி அந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்.

கடையநல்லூரின் சமீபத்திய புகைப்படங்கள்






வியாழன், 2 பிப்ரவரி, 2012

கடையநல்லூர் தொழிலாளி கேரளாவில் கீழே விழுந்து பலி

கேரளாவில் கட்டட பணியில் ஈடுபட்ட போது கீழே விழுந்த நெல்லை தொழிலாளி இறந்தார்.மேல கடையநல்லூர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர்(32). கட்டடத்தொழிலாளி. சம்பவத்தன்று கேரளாவில் கட்டட வேலையில் ஈடுபட்ட போது சங்கர் கீழே விழுந்தார். குடும்பத்தினர் அவரை பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று சங்கர் இறந்தார்.இதுகுறித்து அஞ்சல் ஸ்டேஷன் போலீசார் விசாரிக்கின்றனர்.

கடையநல்லூர் பகுதியில் குடியரசு தினவிழா

கடையநல்லூர் ரத்னா கல்வி நிறுவனத்தில் 63வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.விழாவில் பள்ளியின் நிறுவனர் ரத்னா பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் தீயணைப்புத்துறை உயர் அதிகாரி மாரியப்பன் கலந்து கொண்டு பேசினார். ரத்னா ஆங்கிலப்பள்ளி செயலர் ஆறுமுகம், உயர்நிலைப்பள்ளி செயலர் மாடசாமி, தலைமை ஆசிரியை சக்திவடிவு பேசினர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ரத்னா ஆங்கிலப்பள்ளி தலைமை ஆசிரியை தங்கம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.* பாபநாசம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் பாபநாசம் பணிமனையில் பணிமனை மேலாளர் அருணாச்சலம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 

அண்ணா மத்திய தொழிற்சங்க துணைத் தலைவர் ஆல்பர்ட் ஜேசு அலங்காரம், சண்முகவேல் உட்பட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.* இலத்தூர் பஞ்.,சில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் பஞ்., தலைவர் பரமசிவன் தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றினார். பஞ்.,துணைத் தலைவர் ரமேஷ், பஞ்., உறுப்பினர்கள் கிருஷ்ணன், சேசன், சாப்பாணி, பொற்கலை, சிதம்பரம், திருமலைக்குமார், செல்வம், சுப்புலட்சுமி, பஞ்., பணியாளர்கள், பஞ்., செயலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* சீவநல்லூர் அரசு தொடக்கப் பள்ளியில் குடியரசு தின விழாவினை முன்னிட்டு செங்கோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் கிறிஸ்டினா ரோஜாத்தி தேசியக்கொடி ஏற்றினார். தொடர்ந்து இறைவணக்கம், கொடிப்பாடல் பாடினர். பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு சீவநல்லூர் பஞ்., தலைவர் சட்டநாதன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஆக்னஸ்மேரி வரவேற்றார். பேச்சு, கட்டுரை, கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பஞ்., தலைவர் பரிசுகள் வழங்கினார். பள்ளி உதவி ஆசிரியர் இசக்கியம்மாள் நன்றி கூறினார்.* குற்றாலம் செய்யது பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் முகைதீன் அப்துல்காதர் வரவேற்றார். செங்கோட்டை ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வருசைக்கனி தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். மாநில அளவில் முதலிடம் பெற்ற இளம் விஞ்ஞானி முகமது பைசல், குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற முகமது உபைஸ் அன்வாஸ் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் ஜான்சன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை ஆசிரியை ஷமீனா தொகுத்து வழங்கினார். விழாவில் கல்வி ஆலோசகர் முகமது இஸ்மாயில், ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட ஆலோசனைக்கூட்டம்

நெல்லையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட ஆலோசனைக்கூட்டம் நடந்தது.நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைப்படி அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது, தமிழகத்தில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்துவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 14ம்தேதி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நெல்லையில் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இதையொட்டி மாவட்ட ஆலோசனைக்கூட்டம் மேலப்பாளையத்தில் நடந்தது. மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் யூசுப்அலி, செயலாளர் செய்யதுஅலி, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முகமதுமைதீன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் அன்சாரி, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.14ம்தேதி ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோரை பங்கேற்க செய்வது, இதுதொடர்பாக பொதுக்கூட்டம், தெருமுனைக்கூட்டம், சைக்கிள் பேரணி, விளம்பரம், துண்டுப்பிரசுர பிரசாரம் செய்வது, மேலப்பாளையம் பஜார் திடலில் 4ம்தேதி விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கடையநல்லூரில் ரேஷன் கடை சீராக இயங்காததால் மக்கள் அவதி

கடையநல்லூரில் ரேஷன் கடை சீராக இயங்கவில்லை என பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் 3 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.கடையநல்லூர் பொது ஊழியர்கள் கூட்டுறவு பண்டகசாலை சார்பில் ரேஷன் கடை மேலக்கடையநல்லூர் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த பண்டகசாலையின் மூலமாக மேலக்கடையநல்லூரில் உள்ள சுமார் 5 வார்டு பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இவற்றில் கூட்டுறவு பண்டகசாலை-1ன் மூலமாக சுமார் 800 ரேஷன் கார்டுகள் இடம்பெற்றுள்ளன.இந்த கார்டுகள் வைத்துள்ள பொதுமக்கள் கூட்டுறவு பண்டகசாலை-1ன் மூலமாக மண்ணெண்ணெய், சீனி, அரிசி உள்ளிட்ட பொருட்களை பெற்று வருகின்றனர். இதனிடையில் பணியாளர் தட்டுப்பாடு காரணமாக ரேஷன் கடை சீராக இயக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக மண்ணெண்ணெய், இலவச அரிசி, சீனி பொருட்களை குறிப்பிட்ட நேரங்களில் பெற முடியாத சூழ்நிலை இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.இதனிடையில் கடந்த 3 தினங்களாக இந்த கடை தொடர்ந்து அடைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாகவும் இப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். 3 நாட்கள் கூட்டுறவு பண்டகசாலை ரேஷன் கடை மூடப்பட்டிருப்பது குறித்து விசாரித்த போது கடந்த 30ம் தேதி கடைக்கு விடுமுறை எனவும், 31ம் தேதி தென்காசியில் அலுவல் பணி இருந்ததாகவும், நேற்று மதுரையில் அலுவல் பணிக்காக பணியாளர் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.இருந்தபோதிலும் தொடர்ந்து கடை மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்துடன் பொருட்கள் வாங்க முடியாமல் திரும்பி சென்றதை பரவலாக காணமுடிந்தது. கடை அடைக்கப்படுவதற்கான காரணத்தை தெரிவிக்ககூடிய தகவல் பலகையிலும் நேற்று மதியத்திற்கு மேல் தான் கடை அடைக்கப்பட்டதற்கான தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாக இப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்பட்டது.இந்த ரேஷன் கடை சீராக இயங்கப்படாததற்கு பணியாளர் பற்றாக்குறை பெரும் காரணமாக அமைந்திருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.