கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 7 ஜனவரி, 2012

கடையநல்லூரில் முப்பெரும் விழா


கடையநல்லூரில் முப்பெரும் விழா நடந்தது.கடையநல்லூரில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற கல்வி அறக்கட்டளை துவக்க விழா, பிரமநாயகம் நினைவு நூலக துவக்க விழா, கவுன்சிலருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு வேலு தலைமை வகித்தார். பெரியசாமி, பட்டமுத்து, ஜெயபால் முன்னிலை வகித்தனர்.

மகாத்மா காந்தி நற்பணி மன்றத்தை முத்தையா திறந்து வைத்தார். பிரமநாயகம் நினைவு நூலகத்தை டாக்டர் சிவராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். மகாத்மா காந்தி படத்தை முத்தையா செட்டியார் திறந்து வைத்தார். கவுன்சிலர்கள் சீதாலெட்சுமி, பூமாரி ஆகியோருக்கு நடராஜன் நினைவு பரிசு வழங்கினார்.

விழாவில் முருகன், புலவர் ராஜகோபாலன், சரவணன், சிவசுப்பையா, சக்திவேல், சந்திரசேகரன், வேலு, கருப்பசாமி, கிருஷ்ணன் உட்பட பலர் பேசினர். ஏற்பாடுகளை மன்ற காப்பாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். வள்ளிநாயகம் நன்றி கூறினார்.

கடையநல்லூர் ரத்னா பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு துவக்க விழா

கடையநல்லூர் ரத்னா நர்சரி பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு துவக்க விழா நடந்தது. கடையநல்லூர் நகரில் முதன்முறையாக ரத்னா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் உலகெங்கும் உள்ள மிகப்பெரிய பள்ளிகளில் செயல்பட்டு வரும் ஸ்மார்ட் வகுப்பு துவக்க விழா நடந்தது. பள்ளி செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி ரத்னா பிரகாஷ் கம்ப்யூட்டர் கல்வியின் பயன்பாடு மற்றும் சிறப்பு குறித்து மாணவ, மாணவிகள் மத்தியில் பேசினார். 
தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

கம்ப்யூட்டர் சாதனை சிறுமிக்கு குற்றாலத்தில் பாராட்டு விழா


நெல்லையை சேர்ந்த கம்ப்யூட்டர் சாதனை சிறுமிக்கு குற்றாலத்தில் பாராட்டு விழா நடந்தது.நெல்லையை சேர்ந்த சிறுமி விசாலினி (11) கம்ப்யூட்டர் பயன்பாட்டு அறிவியல் உலக அளவில் சிறந்து விளங்கி வருகிறார். வேல்டு சிசிஎன்ஏ டாப்பர் என அழைக்கப்படும் இச்சிறுமிக்கு தமிழ் இணையதள வலை பதிவர்கள் சார்பில் பாராட்டு விழாவும், பசுமை விடியல் இயக்க இணைய தளம் துவக்க விழாவும் குற்றாலம் இசக்கி ரிசாட்ஸில் நடந்தது.

அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ., இசக்கி சுப்பையா தலைமை வகித்து இணைய தளத்தை துவக்கி வைத்து சிறுமி விசாலினிக்கு கேடயம் வழங்கி பாராட்டி பேசினார். தமிழ் வலை பதிவர்கள் சங்கரலிங்கம், செல்வக்குமார், ஜோதிராஜ், கவுசல்யா, சீனா ஐயா, ரத்னவேல், சண்முகவேலாயுதம், செந்தில்குமார், மதுரை சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சாதாரண ஆட்டோவில் 3 பேர் ஷேர் ஆட்டோவில் 5 பேர்...! : கமிஷனர் கருணாசாகர் உத்தரவு


நெல்லையில் சாதாரண ஆட்டோக்களில் 3 பேர், ஷேர் ஆட்டோக்களில் 5 பேருக்கு மேல் ஏற்றினால் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீஸ் கமிஷனர் கருணாசாகர் தெரிவித்தார்.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் கூறியதாவது: நெல்லையில் ரோடு விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டிரைவிங் லைசென்ஸ் பெறாத பள்ளி மாணவ, மாணவிகள் டூவீலர் ஓட்டக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தினேன். சில மாணவர்கள் டூவீலர் ஓட்டி வருகின்றனர். சீரற்ற ரோடுகளில் மாணவ, மாணவிகள் டூவீலர் ஓட்டுவது ஆபத்தானது. இதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும்.
ஒரு வாரத்திற்குள் பள்ளி மாணவ, மாணவிகள் டூவீலர் ஓட்டுவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் லைசென்ஸ் இன்றி டூவீலர் ஓட்டியதற்காக வழக்குப்பதிவு செய்யப்படும். டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டு பெற்றோர்களை வரவழைத்து ஒப்படைக்கப்படும்.
பள்ளி ஆட்டோக்களில் கூடுதல் குழந்தைகளை ஏற்றிச்செல்வதாக புகார்கள் வந்துள்ளன. சாதாரண ஆட்டோவில் டிரைவர் மற்றும் 3 பேர், ஷேர் ஆட்டோவில் டிரைவர் மற்றும் 5 பேர் செல்லலாம் என வட்டாரப்போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார். இதன்படி ஆட்டோ டிரைவர்கள் குழந்தைகளை ஏற்றிச்செல்ல வேண்டும்.
ஒரு வாரத்திற்குள் ஆட்டோவில் கூடுதல் குழந்தைகள், நபர்களை ஏற்றிச்செல்வதை டிரைவர்கள் நிறுத்த வேண்டும். குழந்தைகளை ஏற்றிச்செல்ல மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக குழந்தைகள், ஆட்களை ஏற்றிச்சென்றால் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.
2012ம்ஆண்டு ரோடு விபத்துக்களை குறைக்கவும், குழந்தைகள் நலன் கருதியும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு பெற்றோர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கண்காணிப்பு தீவிரம்

பாளை., பெருமாள்புரம் பகுதிகளில் ஏற்கனவே 9 செக்டார் போலீசார் செயின்பறிப்பு கொள்ளையர்களை கண்காணிக்க 24 மணி நேர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு செக்டாரில் 2 போலீசார் இடம் பெற்றுள்ளனர். இனிமேல் பெருமாள்புரம் பகுதியில் மேலும் 4 செக்டார் போலீசார் செயின்பறிப்பு கொள்ளையர்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவர். சிறையில் இருந்து வெளியே வந்த செயின்பறிப்பு கொள்ளையர்களின் பட்டியலை பெற்று விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் செயின்பறிப்பு கொள்ளையர்கள் பிடிபடுவர்.'' என்றார்.

அனைவரும் ஒன்று தான்

கமிஷனர் கருணாசாகர் மேலும் கூறும்போது, ""நெல்லையில் தினமும் சராசரியாக ஹெல்மெட் அணியாத 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். போலீசாரும் டூவீலர் ஓட்டும் போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையெனில் சார்ஜ், மெமோ அளிக்கப்படும்'' என்றார்.

வியாழன், 5 ஜனவரி, 2012

10 சட்டசபை தொகுதிகளில் 21 லட்சம் வாக்காளர்கள் நெல்லை மாவட்டத்தில் இன்று இறுதி பட்டியல் வெளியீடு

நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்று (5ம் தேதி) போட்டோவுடன் கூடிய வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்படுகிறது. மாவட்டத்தில் 21 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் போட்டோவுடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், மாற்றம் செய்தல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.தொடர்ந்து இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதுதொடர்பாக வீடு, வீடாக விசாரணையையும் அதிகாரிகள் மேற்கொண்டனர். 

இதில் தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். தற்போது அனைத்து விபரங்களுடன் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 8 ஆயிரத்து 399 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 7 ஆயிரத்து 278 பெண் வாக்காளர்கள், மற்றவர்கள் 10 உட்பட மொத்தம் 20 லட்சத்து 15 ஆயிரத்து 687 வாக்காளர்கள் இருந்தனர். கடையநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாகவும், வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் குறைந்தபட்சமாகவும் வாக்காளர்கள் இருந்தனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இதில் 10 சட்டசபை தொகுதிகளிலும் 31 ஆயிரத்து 765 புதிய வாக்காளர்களும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் இன்று (5ம் தேதி) போட்டோவுடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை இறுதி பட்டியலில் 21 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பட்டியல் அனைத்து ஆர்.டி.ஓ, தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.தொடர்ந்து விரைவில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், மாற்றம் செய்தல் பணிகளுக்கு வாக்காளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

கடையநல்லூர், செங்கோட்டையில் டாக்டர்கள் ஸ்டிரைக்

கடையநல்லூர், செங்கோட்டை பகுதியில் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தூத்துக்குடி டாக்டர் சேதுலட்சுமி படுகொலை சம்பவத்தை அடுத்து தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனத்தை தெரிவித்தனர். இதனிடையில் இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையில் இந்திய மருத்துவ சங்கம் அம்பாசமுத்திரம், குற்றாலம், சங்கரன்கோவில், புளியங்குடி மற்றும் தமிழ்நாடு கிளை அமைப்பின் சார்பில் மத்திய, மாநில அரசுகள் டாக்டர்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கிடவும், ஆஸ்பத்திரிகளை பாதுகாக்கப்பட்ட இடமாக செயல்பட ஆணை வழங்கிடவும், தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் தனியார் ஆஸ்பத்திரிகள் நேற்று கடையநல்லூரில் பெருமளவில் இயங்கவில்லை.

நேற்று காலையிலிருந்தே தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் கடையநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள்இயங்காததால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதேபோன்ற நிலை செங்கோட்டை பகுதியிலும் காணப்பட்டது.இந்திய மருத்துவ சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று செங்கோட்டை தனியார் ஆஸ்பத்திரிகளும் செயல்படவில்லை. டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால்பெரும் பாதிப்பு காணப்பட்டது. அரசு ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் ஸ்டிரைக்கால் நோயாளிகள் அவதிப்படக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது.

பொதுமக்களை தாக்கிய நகராட்சி ஊழியர் கைது

கடையநல்லூர் நகராட்சிக்குள்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் வால்வைத் திறப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் பொதுமக்களை தாக்கிய நகராட்சி ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.


கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் திறப்பாளராகப் பணிபுரிந்து வருபவர் காளி மகன் பாலையா(53).  இவர் செவ்வாய்க்கிழமை கிருஷ்ணாபுரம் பகுதியிலுள்ள குடிநீர் வால்வைத் திறக்க வந்தாராம். அப்போது அப்பகுதியினர் தண்ணீர் பிரச்னை குறித்து தெரிவித்தனராம்.
இதில் ஏற்பட்ட தகராறில் பாலையா அவர்களைத் தாக்கினாராம். இதில் கிருஷ்ணாபுரம்,முத்தையா மகன் மாரிச்சாமி (44) காயமடைந்தாராம்.


இந்நிலையில் மாரிச்சாமியை தாக்கிய நகராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகராட்சிப் பொறியாளர் ராமலிங்கத்தை நகர்மன்ற உறுப்பினர்கள் முத்துக்கிருஷ்ணன்,ஆறுமுகச்சாமி ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.


இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


இந்நிலையில் மாரிச்சாமி கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாலையாவை கைது செய்தனர்.