கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 22 நவம்பர், 2012

கடையநல்லூர் பகுதியில் வைரஸ் காய்ச்சல் : பலர் பாதிப்பு

கடையநல்லூர் பகுதியில் வைரஸ் காய்ச்சல் பாதித்து ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் காய்ச்சலின் பாதிப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது.கடையநல்லூர், சொக்கம்பட்டி, இடைகால், நயினாரகரம், ஊர்மேலழகியான் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. கடுமையான கை, கால் உழைச்சலுடன் 3 நாட்கள் வரை காணப்பட்டு வரும் வைரஸ் காய்ச்சல் தொற்று நோய் போல வேகமாக பரவி வருகிறது. அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக கடுமையான பனிப்பொழிவும் இருந்து வருவதால் ஏராளமான வயோதிகர்கள், குழந்தைகள் சளித் தொந்தரவாலும் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரிகளில் ஊசி மருந்து தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் காய்ச்சல் பாதித்த நோயாளிகள் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.கடையநல்லூர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நோயாளிகளின் வசதிக்காக கடந்த சிலநாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. மேலக்கடையநல்லூரில் அமைந்துள்ள இந்த சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக தற்போது வைரஸ் காய்ச்சல் பாதித்து நூற்றுக்கணக்கானோர் வருகை தருகின்றனர். ஆனால் இந்த நோயாளிகளுக்கு மாத்திரை மட்டுமே வழங்கக் கூடிய நிலை தான் இருந்து வருவதாகவும், ஊசி மருந்து போடப்படுவதில்லை என நோயாளிகள் மத்தியில் புகார் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் ஊசி மருந்து வழங்கிட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், சுகாதார பணிகள் துறையினருக்கும் கோரிக்கை விடப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக