ஏ.ஆர்.ரஹ்மான் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அவருடைய இசைக்கு இன்றைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள். அவருடைய இசையில் வெளியாகும் படங்கள் என்றாலே அந்தப் படத்துக்கு ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகி விடும்.
பெரும்பாலும் தமிழில் வெளியாகும் தனி ஆல்பம் ரசிகர்களிடையே பெரிய அளவில் எடுபடாமல் போய்விடும். ஆனால் 1997 - ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட 'வந்தேமாதரம்' என்ற தனி இசை ஆல்பம் இசை ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக அந்த ஆல்பத்தில் இடம்பெற்ற 'வந்தேமாதரம்' என்ற பாடல் இந்திய நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா வெற்றிபெறும் நேரங்களில் இந்தியா முழுக்க பரவலாக இசை ரசிகர்களால் விரும்பி கேட்கப்பட்டு அந்த ஆல்பம் பெரிய அளவில் ஹிட்டானது.
அந்த ஆல்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் புதிதாக ஒரு தனி இசை ஆல்பத்தை ரிலீஸ் செய்யப்போகிறாராம்.
'மா தூஜே சலாம்' (Maa tujhe salaam) என்ற பெயரில் வெளியாக இருக்கும் இந்த ஆல்பம் எனக்கு மிகவும் சவாலான ஆல்பமாகவும் அதே சமயம் ரசிகர்களை கவரும் ஆல்பமாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஹிந்தியில் வெளியாக இருக்கும் இந்த ஆல்பம் தமிழிலும் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.