கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 5 அக்டோபர், 2012

கடையநல்லூர் பகுதியில் மீண்டும் டெங்கு காய்ச்சல்

கடையநல்லூர் பகுதியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்படுகிறது. நகராட்சி பகுதியில் காய்ச்சல் பாதித்து ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் குடம் தண்ணீர் 8 ரூபாய்க்கு பொதுமக்களால் பெறக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோடைகாலத்தில் கூட இதுபோன்ற வறட்சி ஏற்பட்டதில்லை என்ற சூழ்நிலையில் ஆற்றுப்படுகையில் நீர்பிடிப்பு அறவே வற்றிவிட்டதால் குடிநீர் வினியோகம் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் டேங்கர் லாரிகள் மூலம் வார்டுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையில் கடையநல்லூர் நகராட்சியில் கடுமையான சுகாதார கேடு நிலவி வருவதாக தெரிவித்து கடந்த கவுன்சில் கூட்டத்தில் சாக்கடை கழிவுநீரை கவுன்சில் அரங்கில் கொட்டி மதிமுக கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டார். கடுமையான குடிநீர் பற்றாக்குறைக்கு மத்தியில் சுகாதார கேடும் அதிகப்படியான அளவில் காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியும், ஆதங்கமும் அடைந்துள்ளனர். நகராட்சி பகுதியில் மட்டுமின்றி சுற்றுப்பகுதிகளிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேகமாக பரவிய டெங்கு காய்ச்சலால் சுமார் 10க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையினை அடுத்து டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான காரணங்கள் பெரும்பாலும் நல்ல தண்ணீர் மூலமாகத்தான் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கடையநல்லூர் நகராட்சி பகுதியில் தினமும் குடிநீர் வினியோகம் செய்ய உத்தரவிட்டார். இதன் காரணமாகவும் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டதாக மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது டேங்கர் லாரிகள் மூலம் வினியோகிக்கப்படும் தண்ணீரின் மூலமாக புளூ காய்ச்சல் போன்ற மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களில் பலர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சிலர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக