கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 5 அக்டோபர், 2012

கடையநல்லூர் பகுதியில் கடுமையான வறட்சி

கடையநல்லூர் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில் தென்னை, கொய்யா, எலுமிச்சை மரங்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன.
தென்மேற்கு பருவமழையும் பொய்த்துவிட்ட நிலையில் கடந்த ஆண்டு பருவமழையும் போதுமான அளவில் பெய்யாத நிலையில் கடையநல்லூர், அச்சன்புதூர், பண்பொழி, வடகரை, காசிதர்மம், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், புன்னையாபுரம், கம்பனேரி, வேலாயுதபுரம், பொய்கை, போகநல்லூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் கடுமையான வறட்சியின் காரணமாக பிசான சாகுபடிகள் மேற்கொள்வதில் கூட விவசாயிகள் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
புரட்டாசி மாதம் பிறந்துவிட்ட நிலையில் மூன்றாம் சனிக்கிழமையாவது மழை எட்டிப்பார்க்கும் என்ற ஏக்கத்தில் விவசாயிகள் மழைக்காக காத்திருக்கும் நிலையில் வறட்சியின் கோரப்பிடியால் விவசாய தென்னந் தோப்புகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னைகள் பெரும்பாலான பகுதிகளில் போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தினால் காய்ந்து கிடக்கின்றன. இருக்கின்ற கிணற்று தண்ணீரை வைத்து தென்னையை பாதுகாக்க விவசாயிகள் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.
எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட மரங்களும் சில பகுதிகளில் இலைகள் உதிர்ந்து மரம் வெறிச்சோடி காணப்படுகிறது. தென்னை ஓலைகள் எல்லாம் காய்ந்து மரங்கள் பரிதாபமாக காட்சியளித்த வண்ணம் உள்ளன. கடையநல்லூர் சுற்றுப்பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பிசான சாகுபடி மேற்கொள்ளப்படக்கூடிய நிலையில் இந்த ஆண்டு ஆயிரம் ஏக்கராவது பிசான சாகுபடி மேற்கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பருவமழை தான் விவசாயிகளின் பிசான சாகுபடியின் நம்பிக்கைக்கு கை கொடுக்க வேண்டுமென்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக