கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

சிறுபான்மையின மாணவ- மாணவிகள் பரிசுத் தொகை உயர்வு: முதலமைச்சர் உத்தரவு

தமிழக அரசு வெளியிடடுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- 

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்கள் ஆங்கிலப் பேச்சாற்றலை மேம்படுத்தும் வகையில், ஒருவருக்கு 2,800 ரூபாய் வீதம் 160 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறு பான்மையினர் நல கல்லூரி, தொழில் நுட்ப, தொழிற் பயிற்சி விடுதிகளில் தங்கி பயிலும் 6,550 மாணவ, மாணவியருக்கு 1 கோடியே 83 லட்சம் ரூபாய் செலவில் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார். 

பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட/ சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கான பரிசுத் தொகை உயர்த்தப்பட்டது போல, சிறுபான்மையின மாணவ/மாணவியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மாவட்ட அளவில் தற்பொழுது 10 ஆம் வகுப்பில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் நிலையில் அதிக மதிப்பெண் பெறும் சிறுபான்மையினர் மாணவ/மாணவியருக்கு முறையே 1,500 ரூபாய், 1,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் என வழங்கப்பட்டு வரும் பரிசுத் தொகையினை முறையே 3,000 ரூபாய், 2,000 ரூபாய், 1,000 ரூபாய் என உயர்த்தியும், 12 ஆம் வகுப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் அதிக மதிப்பெண் பெறும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு முறையே 3,000 ரூபாய், 2,000 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் என வழங்கப்பட்டு வரும் பரிசுத் தொகையினை முறையே 6,000 ரூபாய், 4,000 ரூபாய், 2,000 ரூபாய் என உயர்த்தியும் வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

ஆதரவற்ற முஸ்லீம் சமுதாய மக்களின் வாழ் வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்கள் சுயமாக சிறு தொழில்கள் செய்திட, இலவச தையல் இயந்திரங்கள், மாவரைக்கும் இயந்திரங்கள், மருத்துவ உதவித் தொகை, விதவை மற்றும் முதியோர் உதவித் தொகை வழங்கிட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் மூலம் திரட்டப்படும் நன்கொடைக்கு ஈடாக அரசால் 1:1 என்ற விகிதத்தில் வழங்கப்படும் இணை மானியம், 1:2 விகிதத்தில் இருமடங்காக உயர்த்தியும், ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையான 10 லட்சம் ரூபாயை 20 லட்சம் ரூபாய் என உயர்த்தியும் வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இந்த உயர்வு 1.4.2012 முதல் அமல்படுத்தப்படும். இதற்காக 3 கோடியே 20 லட்சம் ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவியர் பயன் பெறும் வகையில் 2012-13 ஆம் நிதியாண்டில் கட்டுமானப் பணி முடியும் தருவாயில் உள்ள 5 விடுதி களையும் சேர்த்து 103 பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் 8,365 மாணவ, மாணவியர்களுக்கு 4,204 எண்ணிக்கையிலான இரும்பிலான இரண்டடுக்கு கட்டில்களையும், குளிர் பிரதேச பகுதிகளில் இயங்கும் 2 பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் 100 மாணவர்களுக்கு 50 எண்ணிக்கையில் மரத்திலான இரண்டடுக்கு கட்டில்களையும் வழங்கிடவும், அதற்காக 3 கோடியே 71 லட்சத்து 57 ஆயிரத்து 620 ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

அரசின் இந்த நடவடிக்கைகள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் அதிக ஊக்கத்துடன் கல்வி பயில வழிவகை செய்யும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

கடையநல்லூர் பகுதியில் மீண்டும் டெங்கு காய்ச்சல்

கடையநல்லூர் பகுதியில் மீண்டும் டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்படுகிறது. நகராட்சி பகுதியில் காய்ச்சல் பாதித்து ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் குடம் தண்ணீர் 8 ரூபாய்க்கு பொதுமக்களால் பெறக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோடைகாலத்தில் கூட இதுபோன்ற வறட்சி ஏற்பட்டதில்லை என்ற சூழ்நிலையில் ஆற்றுப்படுகையில் நீர்பிடிப்பு அறவே வற்றிவிட்டதால் குடிநீர் வினியோகம் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் டேங்கர் லாரிகள் மூலம் வார்டுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையில் கடையநல்லூர் நகராட்சியில் கடுமையான சுகாதார கேடு நிலவி வருவதாக தெரிவித்து கடந்த கவுன்சில் கூட்டத்தில் சாக்கடை கழிவுநீரை கவுன்சில் அரங்கில் கொட்டி மதிமுக கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டார். கடுமையான குடிநீர் பற்றாக்குறைக்கு மத்தியில் சுகாதார கேடும் அதிகப்படியான அளவில் காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியும், ஆதங்கமும் அடைந்துள்ளனர். நகராட்சி பகுதியில் மட்டுமின்றி சுற்றுப்பகுதிகளிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேகமாக பரவிய டெங்கு காய்ச்சலால் சுமார் 10க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையினை அடுத்து டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான காரணங்கள் பெரும்பாலும் நல்ல தண்ணீர் மூலமாகத்தான் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா கடையநல்லூர் நகராட்சி பகுதியில் தினமும் குடிநீர் வினியோகம் செய்ய உத்தரவிட்டார். இதன் காரணமாகவும் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டதாக மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது டேங்கர் லாரிகள் மூலம் வினியோகிக்கப்படும் தண்ணீரின் மூலமாக புளூ காய்ச்சல் போன்ற மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களில் பலர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று சிலர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடையநல்லூர் பகுதியில் கடுமையான வறட்சி

கடையநல்லூர் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில் தென்னை, கொய்யா, எலுமிச்சை மரங்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன.
தென்மேற்கு பருவமழையும் பொய்த்துவிட்ட நிலையில் கடந்த ஆண்டு பருவமழையும் போதுமான அளவில் பெய்யாத நிலையில் கடையநல்லூர், அச்சன்புதூர், பண்பொழி, வடகரை, காசிதர்மம், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், புன்னையாபுரம், கம்பனேரி, வேலாயுதபுரம், பொய்கை, போகநல்லூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் கடுமையான வறட்சியின் காரணமாக பிசான சாகுபடிகள் மேற்கொள்வதில் கூட விவசாயிகள் பெரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
புரட்டாசி மாதம் பிறந்துவிட்ட நிலையில் மூன்றாம் சனிக்கிழமையாவது மழை எட்டிப்பார்க்கும் என்ற ஏக்கத்தில் விவசாயிகள் மழைக்காக காத்திருக்கும் நிலையில் வறட்சியின் கோரப்பிடியால் விவசாய தென்னந் தோப்புகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னைகள் பெரும்பாலான பகுதிகளில் போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தினால் காய்ந்து கிடக்கின்றன. இருக்கின்ற கிணற்று தண்ணீரை வைத்து தென்னையை பாதுகாக்க விவசாயிகள் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.
எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட மரங்களும் சில பகுதிகளில் இலைகள் உதிர்ந்து மரம் வெறிச்சோடி காணப்படுகிறது. தென்னை ஓலைகள் எல்லாம் காய்ந்து மரங்கள் பரிதாபமாக காட்சியளித்த வண்ணம் உள்ளன. கடையநல்லூர் சுற்றுப்பகுதிகளில் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் பிசான சாகுபடி மேற்கொள்ளப்படக்கூடிய நிலையில் இந்த ஆண்டு ஆயிரம் ஏக்கராவது பிசான சாகுபடி மேற்கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பருவமழை தான் விவசாயிகளின் பிசான சாகுபடியின் நம்பிக்கைக்கு கை கொடுக்க வேண்டுமென்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி 7% உயர்வு: முதல்வர்


தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழு விழுக்காடு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், 1.7.2012 முதல் மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப் படியை அவர்களது அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்த்தி வழங்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.  இதன் அடிப்படையில், 1.7.2012 முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை அவர்களது அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதே போன்று, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியையும் 1.7.2012 முதல் ஏழு விழுக்காடு உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஏழு விழுக்காடு அகவிலைப்படி உயர்வு 1.7.2012 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள்; ஆசிரியர்கள்; வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள்; அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள்; ஊராட்சி உதவியாளர்கள்; எழுத்தர்கள்; மற்றும் வழக்கமாக அகவிலைப்படி பெறும் அனைவருக்கும் பொருந்தும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,443 கோடியே 52 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களை மேலும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வழிவகுக்கும் என்று உறுதியாக நம்புவதாக கூறப்பட்டுள்ளது.

வியாழன், 4 அக்டோபர், 2012

கேரள எல்கையில் "எஸ்' வளைவு பகுதியில் உள்ள குறுகிய பாலத்தை அகலப்படுத்த வலியுறுத்தல்

தமிழக - கேரள எல்கையில் "எஸ்' வளைவு பகுதியில் உள்ள குறுகிய பாலத்தை அகலப்படுத்த வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருமங்கலம் - கொல்லம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள புளியரை வழியாக தினமும் தமிழகம் உட்பட பல்வேறு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி, இறக்கி வருகின்றன.இந்நிலையில் தமிழ்நாடு - கேரள எல்லை பகுதியான "எஸ்' வளைவு பகுதியில் தேவாலயம் அருகே குறுகிய பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக ஒரே ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும். மேலும் பராமரிப்பின்றி குழி விழுந்த நிலையில் காட்சியளிப்பதால் எந்த நேரமும் விபத்து ஏற்படும் வகையில் காணப்படுகிறது. இந்த குறுகிய பாலத்தை கடந்து கேரளா செல்லவே, வாகனங்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.தற்போது கேரள மற்றும் தமிழ்நாடு எல்லை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அகலப்படுதுதும் பணி, சிறு பாலங்கள், தடுப்பு சுவர்கள், கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. எனவே "எஸ்' வளைவு மேல் பகுதியில் உள்ள குறுகிய பாலத்தை சீரமைக்கவோ அல்லது அதன் அருகிலேயே புதிய பாலம் கட்டவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செவ்வாய், 2 அக்டோபர், 2012

ஹாஜா முஹையதீன் & நிலோபர் நிஷா - ன் திருமண அழைப்பிதழ்

திருமண அழைப்பிதழ்

ஹாஜா முஹையதீன் & நிலோபர் நிஷா - ன் திருமண நல்வாழ்விற்காக  இறைவனிடம் பிராத்தனை செய்ய வேண்டுகிறோம் .

மேலான அல்லாஹ் உங்கள் இருவரையும் இம்மையிலும், மறுமையிலும் ஒன்றினைப்பானாக!

பெருமானாரின் (ஸல்) நிறைவான சாந்தி நம் அனைவரின் மீதும் நிறைந்திட அல்லாஹ் அருள் புரிவானாக!

பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜம அ பைனகுமா Fபீஹைர்.

கடையநல்லூரில் பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி SDPI கட்சி நடத்திய மாபெரும் மனித சங்கிலி போராட்டம்


பூரண மது விலக்கை அமல்படுத்தக் கோரி   SDPI  கட்சி நடத்திய மாபெரும் மனித சங்கிலி போராட்டம் 

டாஸ்மாக்கை இழுத்து மூடு!  மது விலக்கை அமல்ப்படுத்து! என்ற தலைப்பில்   அக்டோபர்- 2 லிருந்து அக்டோபர்- 17 வரை தமிழகம் முழுவதும் பல்வேறு போரட்டகளை நடத்த வேண்டும் என  SDPI கட்சியின் மாநில தலைமை தீர்மானித்தது.

முதற்கட்ட  போராட்டமாக அக்டோபர் -2 மகாத்மா காந்திஜியின் பிறந்த தினமான இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மனித சங்கிலி போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக நெல்லை மேற்கு மாவட்டத்தில் சங்கரன்கோவில், கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய மூன்று பகுதிகளில்  மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

கடையநல்லூரில்  நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு நெல்லை மேற்கு மாவட்ட பொருளாளர் s.நைனா முஹம்மது கனி தலைமையேற்றார். பாப்புலர் ஃப்ரண்டின்  நெல்லை மேற்கு மாவட்டத் தலைவர் K.A.லுக்மான் ஹக்கீம் B.A;B.L, SDPIயின் கடையநல்லூர் நகர தலைவர் I.M.பாதுஷா,செயலாளர் A.ஹக்கீம் ,N.அசன் மைதீன்பாப்புலர் ஃப்ரண்டின் கடையநல்லூர் நகர தலைவர் S.முஹம்மது கனி,தென்காசி நகர தலைவர் மசூது அலிசெயலாளர் செய்யது அலி, இளசிறுத்தை எழுச்சி பாசறையின் மாவட்ட துணை செயலாளர் M.K.இசக்கிப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் U.T.அஜித் ரஹ்மான், S.A. ஷவ்க்கதலி  இமாம் மற்றும் ஓய்வு பெற்ற IAS அதிகாரியும் காந்தியவாதிமாகிய தியாகி லட்சுமிகாந்தன் பாரதி ஆகியோர் கலந்துகொண்டனர். நன்றயுரையை கடையநல்லூர் கிழக்கு பகுதி தலைவர் N.T.முஹம்மது ஹுசைன் வழங்கினார்.