கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 30 டிசம்பர், 2011

கடையநல்லூரில் கல்வத்து நாயகம் தெரு பகுதியில் படையெடுத்து வந்த பாம்புகளால் பரபரப்பு

கடையநல்லூரில் படையெடுத்து கும்பல் கும்பலாக பலவகையான பாம்புகள் பாம்பாட்டிகளின் மகுடிக்கு இசைந்து வெளியே வந்ததால் பொதுமக்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர். சுமார் 40க்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிபட்டன.கடையநல்லூர் நகராட்சி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் முட்புதர்கள், குப்பைகள் அதிகளவில் உள்ளன. தனியாருக்கு சொந்தமான சில இடங்கள் பல ஆண்டுகள் பராமரிக்கப்படாமல் இருப்பதால் அப்பகுதியில் பாம்புகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.கடையநல்லூர் நகராட்சி 11வது வார்டு கல்வத்து நாயகம் தெரு பகுதியை ஒட்டி அமைந்துள்ள மனை ஒன்றில் பாம்புகள் அதிகளவில் குடியிருப்பதாக புகார் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து பாம்புகளை பிடிக்க பாம்பாட்டிகள் வரவழைக்கப்பட்டனர். நேற்று காலை சுமார் 9 மணி முதல் பாம்பாட்டிகள் மகுடியை இசைத்த வண்ணம் இருந்தனர்.

அடுத்த 5 நிமிடத்தில் மகுடிக்கு இசைந்த சாரைப்பாம்பு ஒன்று தலை காட்டவே, அதனை தங்களுக்கே உரித்தான முறையில் பாம்பாட்டிகள் பிடித்தனர். தொடர்ந்து பாம்பாட்டிகள் ஒன்றுபட்டு மகுடி இசைக்க அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடையும் வகையில் நல்ல பாம்பு, சாரைப்பாம்பு, உள்ளிட்ட பாம்புகள் வரிசையாக படம் எடுத்து மகுடிக்கு ஏற்ப அந்த மனைப் பகுதியிலிருந்து வெளிவர துவங்கின. பாம்புகள் அதிகளவில் படம் எடுத்து வந்த நிலையில் அதனை ஒவ்வொன்றாக பிடித்தனர்.இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அறிந்ததும் கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். இந்நிலையில் பாம்பாட்டிகள் மகுடிகள் மூலம் அந்த பகுதியில் சுமார் பல்வேறு ரகங்களை கொண்ட 40 பாம்புகளை பிடித்தனர்.மாவடிக்கால் பகுதியில் சுமார் 3 மணிநேரத்தில் 40 பாம்புகள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதட்டத்தையும், பீதியையும் மட்டுமின்றி பார்வையாளர்கள் முகத்தில் பெரும் பயத்தையும் காண முடிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக