கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வியாழன், 22 டிசம்பர், 2011

கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் நீரோடைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடையநல்லூர் கருப்பாநதி அணையின் கீழுள்ள பாப்பான் கால்வாய், சீவலன் கால்வாய், பெருங்கால்வாய் உள்ளிட்ட ஓடைகளின் மூலம் 72-க்கும் மேற்பட்ட குளங்கள் நீர்வசதி பெறுகின்றன.
இந்த அணை மூலம் சுமார் 9,515 ஏக்கர் நிலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. அணைக்கட்டின் கீழ் 7 சிறிய அணைக்கட்டுக்கள் அமைக்கப்பட்டு அவை மூலம் குளங்களுக்கு தண்ணீர் திருப்பிவிடப்படுகிறது.

விவசாய நிலங்களுக்கு கருப்பாநதி அணையிலிருந்து நீரை எடுத்துச் செல்லும் பாப்பான் கால்வாய் ஓடை மூலம் சுமார் 34 குளங்களிலுள்ள சுமார் 4,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
சுமார் 16 கிமீ தொலைவுக்கு நீரைச் சுமந்து செல்லும் பாப்பான் கால்வாயில், 4 கிமீ தொலைவு கடையநல்லூர் நகருக்குள் செல்கிறது. இப் பகுதியில் கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால் கால்வாய் குறுகிவிட்டது. இதனால், அணையிலிருந்து திறக்கப்படும் நீர் குளங்களுக்குச் செல்லாமல் ஊருக்குள் புகுந்து வீணாகிறது என இப் பகுதி விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

நீரை வெளியேற்றினால் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அது தொடர்ந்து தவிர்க்கப்படுகிறது. இதனால் போதிய நீர்வரத்து இருந்தாலும் அணையிலிருந்து சிறிதுசிறிதாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் கடைமடைப் பகுதியிலுள்ள பல குளங்களுக்குத் தண்ணீர் செல்வதில்லை என்கிறார் கருப்பாநதி நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் ரத்தினவேல்பாண்டியன்.

கடந்த ஆண்டு பாப்பான் கால்வாய் ஓடையில் இருந்த ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்ட நிலையில், இன்னமும் ஆக்கிரமிப்புகள் தொடருவதாக விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்கிடையே, கடையநல்லூர் ஜெகவீரராமபேரி குளத்தின் மறுகால் செல்லும் ஓடையிலும் கட்டட ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால், அந்த ஓடை மிகவும் குறுகிவிட்டது. ஓடை வழியாக வீட்டின் கழிவுகளும் வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் தண்ணீர் செல்ல இயலாதவாறு கட்டடங்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் நகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றவும், புதிய ஆக்கிரமிப்புகளைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக